நாம் நம் இடத்தை விடுத்து நீண்ட தூரம் செல்லச் செல்ல நம்முடைய செயல்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. ஏனெனில் எந்த ஒரு நிலையிலும் நம்முடைய செயல்பாடு நாம் சார்ந்திருக்கக்கூடிய சமூகத்தின் செயல்பாடாகவே பார்க்கப்படுகிறது. இங்கே குறிப்பிடப்படும் சமூகம் என்பது நம் இடத்தையும் பதவியையும் பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும்.
எனது பள்ளி நாட்களில் நான் முதல் பரிசு பெற்றபொழுது எனது சுற்றுவட்ட கிராமங்களில் எனது செயல்பாடு எனது கிராமத்தின் ஒருவனது செயல்பாடாகவே பார்க்கப்பட்டது. ” School First நாட்டாம்பட்டி பையனாம்” என்றே பலர் கூறினர். ஏன் என்னிடமே பலர் அவ்வாறு கூறியதுண்டு. இது அவர்கள் மத்தியில் என் ஊரின் மீதான மதிப்பினை சற்று உயர்த்தியிருக்கும். என்னை மறந்து அந்த நிகழ்வையும் என் ஊரையுமே மக்கள் நீண்ட நாள் நினைவில் வைத்திருந்தனர்.