நான் கடைசியில் கூறப்போவதை இப்போதே சொல்லிவிடுகிறேன்.
“இந்தியக்கல்வி பில்கேட்ஸிடம் வேலை செய்ய 1000 பேரை உருவாக்கும். ஆனால் ஒரு பில்கேட்ஸை கூட உருவாக்காது”
இந்தியா:—–>மனித சக்தியில் உலக அளவில் இரண்டாம் இடம். பரப்பளவில் ஏழாம் இடம். பொருளாதாரத்தில் பத்தாம் இடம். ஆனால் கல்வியில் வரிசைப்படித்தினால் உலகின் முதல் 200 பல்கலைக்கழகங்களில் ஒன்று கூட இந்தியாவில் இல்லை. ஆம் உண்மை அதுதான். இந்தியாவில் உள்ள 568 பல்கலைக்கழகங்களில் ஒன்று கூட உலகின் தலைசிறந்த 200 பல்கலைக் கழகங்களில் இல்லை.இதன் கீழ் பல்லாயிரம் கல்லூரிகள் வேறு. இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனமாக கருதப்படும் இந்திய மேலாண்மை நிறுவனம் (IIM, Delhi) பிடித்திருக்கும் இடம் 212. இதிலிருந்து புலப்படுவதென்னவோ நாம் வைத்திருப்பதெல்லாம் ஏட்டுச் சுரைக்காய் என்பதுதான்.
உலகின் முதல் 30 பல்கலைக்கழகங்களில் அமெரிக்காவில் இருப்பது மட்டும் 22. அங்குள்ள மொத்த பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை நம்மில் நான்கில் ஒன்றைவிடக் குறைவு. நம் நாட்டின் பரப்பளவில் 4761 ல் ஒரு பங்கு இருக்கக்கூடிய சிஙப்பூரின் தேசிய பல்கலைக்கழகம் 25 ம் இடத்தில்.இப்போதைக்கு வருத்தப்படத்தான் வேண்டும். வேறென்ன செய்ய?
ஏன்?
இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் நிறுவனங்களாக மட்டுமே செயல்படுவதால், வியாபார நிறுவனங்களாக செயல்படுவதால். இந்தியாவில் உள்ள பல்வேறு ஆராய்ச்சி கல்வி நிறுவனங்களின் பெயரில் உள்ள ஆராய்ச்சி என்பதன் நோக்கம் அரசிடம் இருந்து உதவித்தொகை என்ற பெயரில் பணம் பெறுவது மட்டுமே.
2011 ம் ஆண்டின் கணக்குப்படி உலகில் 25 லட்சம் மாணவர்கள் வெளிநாடுகளில் படிக்கின்றனர். அதில் சீனாவிற்கு (7,50,000) அடுத்த இடத்தில் இருப்பது இந்திய மாணவர்கள். எண்ணிக்கை 4,00,000 பேர். 2000 ல் இருந்து 2009 வரை இந்தியாவில் இருந்து வெளினாடு சென்று படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 256% அதிகரித்திருக்கிறது. இப்படி திறமை வாய்ந்த இந்திய மாணவர்களை வெளிநாடு வாழ் இந்தியராக மாற்றி பின்னர் இந்திய வம்சாவழியினர் என்ற நிலைக்கு கொண்டு சொல்லும் வேலை நீண்ட காலமாகவே நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் இப்போது அதன் வேகம் அதிகரித்திருக்கிறது. இப்படி வெளிநாட்டு படிப்பிற்காக செய்யப்படும் செலவு ஆண்டுக்கு 85000 கோடி இந்திய ரூபாய். இது இந்தியாவில் உள்ள பல மாநிலங்களின் ஒரு வருட பட்ஜெட்டை விட அதிகம்.
கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சேர விரும்பும் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய கையேட்டிலிருந்தே தனது வியாபாரத்தை துவக்கி விடுகின்றன கல்லூரிகள்.எத்தனை கல்லூரிகளில் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள வசதிகளும், உண்மையில் மாணவர்களுக்கு கிடைக்கக் கூடிய வசதிகளும் ஒத்திருக்கின்றன. ஒரு கையில் விரல் விட்டு எண்ணிவிடலாம்.
இந்திய பொறியியல் கல்லூரிகளில் படித்து முடிக்கும் மாணவர்களில் 70% பேர் தான் படித்த பாடங்களின் நடைமுறைப் பயன்பாடுகள் தெரியாதவர்களாகவே இருக்கின்றனர். அதைவிட மோசம் 80% கல்லூரி ஆசிரியர்கள் தாங்கள் நடத்தும் பாடம் பற்றிய போதுமான அறிவு இல்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் மற்றவர்களிடம் மறைத்தாலும் உண்மை அவர்களுக்கும், அவர்களது மாணவர்களுக்கும் நன்றாகவே தெரியும். சரி வேறென்ன செய்ய முடியும்? அவர்களும் நேற்றைய மாணவர்கள் தானே.
பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் புதிய கல்வி நிறுவனங்களை துவக்குவதில் காட்டும் ஆர்வத்தை தற்போது அளிக்கும் கல்வியின் தரத்தை உயர்த்துவதில் காட்டுவதில்லை. அரசு கல்வி நிறுவனங்கள் இரண்டையுமே செயவதில்லை.
சரி பல்கலைக்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் தான் இப்படி இருக்கிறதென்றால் நமது அரசும் கல்வியைப் பொறுத்தமட்டில் மந்தமாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 10, 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் கடந்த ஆண்டைவிட அதிகபட்சம் 5% வேறுபாடு வரும்படி வருடா வருடம் தேர்வு முடிவை அறிவிப்பதிலேயே அரசு கல்விக்கான தன் பங்கு கேடினை தெரிந்தோ தெரியாமலோ செய்கிறது.
கடந்த 20 ஆண்டுகளில் கல்விப் பாடத்திட்டங்கள் அதிக பட்சம் 5 முறை மாற்றப்பட்டிருந்தால் ஆச்சர்யம். அதுவும் சில பாடங்களை நீக்குதல், சில பாடங்களை சேர்த்தல் எனும் சம்பிரதாயச் சடங்காகவே முடிகின்றது. பெரும்பாலும் மாற்றத்திற்குப் பின்னரும் 70% பாடத்திட்டம் பழையதாகவே இருக்கும்.
நீங்கள் தகவல் தொழில் நுட்பத்துறையில் ஒருவேளை வேலை செய்பவராக இருந்தால் இன்றைய காலகட்டத்தில் உபயோகிக்கப்படக்கூடிய தொழில்நுட்பத்திற்கும் கல்லூரியில் கற்பிக்கப்படக்கூடிய தொழில் நுட்பத்திற்கும் உள்ள கால இடைவெளியை எளிதில் அறிந்து கொள்ளலாம். கடந்த 15 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட தலைசிறந்த் கண்டுபிடிப்பு ஒன்று கூட 120 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டிலிருந்து வரவில்லை.
கல்லூரியில் மிகச்சிறப்பாக கற்கும் ஒரு மாணவன் வெளியில் வரும்போது நடைமுறையில் உள்ள நவீன நுட்பங்களுக்கும் தான் கற்றவற்றிற்கும் உள்ள இடைவெளியை அறிந்து அதனை கற்று முடிப்பதற்குள் காலம் ஓடிவிடுகிறது. பிறகெங்கு அவன் புதியனவற்றை கண்டுபிடிக்க?
இந்திய மாணவர்கள் அறிவில் மிகவும் கூர்மையானவர்கள். இன்னும் சிறிய கணக்கீட்டுக்கே கால்குலேட்டர் உபயொகிக்கும் பல நாட்டினர் மத்தியில் மிக சாதாரணமாக மனதில் தசம எண்களை பெருக்கும் இந்தியர்கள் பலரை நாம் காணலாம். அந்த கூர்மையான மாணவர்களை நாம்தான் மழுங்கச் செய்கின்றோம்.
அரசு என்ன செய்யலாம்?
இந்திய மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்கக் காரணமாக கூறப்படும் STEM (Science, Technology,Engineering, Mathematics)எனப்படும் படிப்புகளில் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றத்தையும், தரத்தையும் உறுதி செய்ய வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் அதே வேளையில் தகுதியுள்ள அனைவருக்கும் தகுதியுள்ள கல்லூரிகளில் இடம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கேற்றார்போல் மத்திய பல்கலைக்கழகங்களையும், அவற்றிற்கான இடங்களையும் அதிகரிக்க வேண்டும். இல்லையெனில் தரமான கல்விக்காக மாணவர்கள் வெளிநாடு செல்வர். பின்னர் அவர்கள் அங்கு செய்யும் சாதனைகளுக்கு “இந்திய வம்சாவழியினர்” என்று கூறித்தான் பெருமை பட்டுகொள்ள முடியும்.
தனியார் பல்கலைக்கழகங்களையும், கல்லூரிகளையும் சரியாக முறைப்படுத்தி கண்காணிக்க வேண்டும். அரசால் விரைவாக நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் கல்வி சேவையை அளிக்க முடியாது என்பதனால் தான் கல்வியில் தனியாரி பங்களிப்பிற்கு அனுமதியளிக்கப்பட்டது. அதை வியாபாரம் ஆக்கி விட்டார்கள். இப்போது அரசு சாட்டையை சுழற்ற வேண்டியது கட்டாயம். இல்லையேல் எப்போதும்
“இந்தியக்கல்வி பில்கேட்ஸிடம் வேலை செய்ய 1000 பேரை உருவாக்கும். ஆனால் ஒரு பில்கேட்ஸை கூட உருவாக்காது”