சமீபத்திய ஆண்டுகளில் பெரும்பாலானவர்களின் பேச்சுக்களில் இந்த வார்த்தை இடம் பிடித்திருக்கும். IPL
அவர்கள் அனைவருக்கும் (எனக்கும் சேர்த்து) கேள்வி இதுதான். IPL ஆல் அடைந்த நன்மைகள் என்னென்ன? பட்டியலிடுங்கள். நன்மை என்பது உங்களுக்காகவோ நாட்டுக்காகவோ இருக்கலாம். சிறந்த பொழுதுபோக்கு என்பதை தவிர்த்து ஒரு சில நன்மைகளை மட்டும்தான் கூற முடியும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
ஒரு விளையாட்டுப்போட்டி என்பது பொதுவாக இரு நாடுகளிக்கிடையே நடக்கும் பொழுது அந்நாட்டுடனான உறவை மேம்படுத்துவதுதான் பிரதான நோக்கம். நாட்டிற்குள் நடக்கும் போது உள்நாட்டு வீரர்களில் தேசிய அளவில் சிறந்த வீரரை தேர்வு செய்வது என்பது பிரதான நோக்கம். இப்படி எந்த நோக்கமும் இல்லாமல் வியாபார நோக்கில் நடத்தப்படுவதே IPL.
நாம் உணர வேண்டியது IPL நடைபெறும் காலங்களில் தினமும் சில மணி நேரங்கள் அவர்களுடைய வருமானத்திற்காக உழைக்கிறோம் தெரிந்தோ தெரியாமலோ. “விளையாட்டின் ஊடே வியாபாரம் செய்கிறார்கள்” - இது நம் நினைப்பு. “வியாபாரத்திற்காக விளையாட்டை நடத்துகிறார்கள்” – இது உண்மை.
சரி, சற்று விரிவாக விவாதிப்போம்.
IPL 5 நடைபெற்ற போது IPL உடைய மதிப்பு 15000 கோடி ரூபாய். IPL துவங்கப்பட்டது 2008 ல். துவங்கி நான்கு ஆண்டுகளில் 15000 கோடி ரூபாய் மதிப்புடையதாக மாறியது எப்படி? சந்தேகமே வேண்டாம், நம்மால் தான். வேலையை சீக்கிரம் முடித்து வீட்டிற்குப் போய் IPL பார்ப்பவர் காரணம். கல்லூரியை கட் அடித்து பார்ப்பவர் காரணம். டிவி ஷோரும் வாசலில், டீக்கடையில், இப்படி அங்கங்கே கிரிக்கெட் பார்க்கும் எல்லோரும் காரணம். (இந்த ஐபில் க்கு தரும் முக்கியத்துவத்தை வேறு எந்த விளையாட்டுக்காவது தந்திருக்கிறோமா?)
அடுத்து வருமானம். IPL பெயருக்கு முன்னால் விளம்பரதாரர் பெயரை இணைக்க (DLF IPL, PEPSI IPL இப்படி) இந்த முறை பெப்சி நிறுவனம் அளித்திருக்கும் தொகை 396.8 கோடி. ஒரு சராசரி மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் ஒரு கோடி ரூபாயைப் பார்க்க முடியுமா?
அதுமட்டுமில்லாமல் ஒளிபரப்பு உரிமத்தின் வாயிலாக பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம். இந்த வருடமும் ஒப்பந்ததாரராக சோனி மேக்ஸ் நிறுவனமே இருக்கிறது.
அதோடு இன்டெர்நெட் ஒளிபரப்பு உரிமத்தை இந்தியாடைம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதற்கும் பல நூறு கோடிகள் கண்டிப்பாக பெறப்பட்டிருக்கும். ஏனென்றால் உலகம் முழுவதும் ஒளிபரப்பலாம். ஒவ்வொரு நாட்டிற்கும் வெவ்வேறு விளம்பரங்களை காட்டலாம். உலக அளவில் யூ டியூபில் நேரடியாக ஒளிபரப்பப் பட்ட முதல் விளையாட்டு IPL தான். நாம் IPL ஐ 720 p HD ல் YouTube ல் பார்க்கலாம் உலகின் எந்த மூலையில் இருந்தும். அது சாதாரணமாக நாம் டிவியில் பார்ப்பதை விட தெளிவாக இருக்கும்.
எப்படி வந்தது?
வெளிநாடுகளில் இருந்த பிரபலமான லீக் ஆட்டங்களை இந்தியாவிற்கு அறிமுகம் செய்தனர் கபில் தேவும், கிரண் மோரும். அதற்கு முடிந்த வழிகளிலெல்லாம் தொல்லை கொடுத்து IPL ஐ உருவாக்கியது பிசிசிஐ, வியாபாரத்திற்காக.
IPL ற்கு தேவையானதிற்கும் அதிகமாக கவர்ச்சியைக் கூட்டினார்கள், கூட்டுகிறார்கள். விழுந்து விட்டோம். இன்னும் எழவில்லை. ஏற்கனவே ஒவ்வொரு அணியின் மதிப்பும் பல நூறு கோடி ரூபாயைத்தாண்டி விட்டது.
ஐபில் = அரசியல் + சினிமா + கிரிக்கெட். இதுதான் IPL.
இவை அனைத்திற்கும் நாம் தான் காரணம். அதனால் தான் நம்மை அந்த போதையிலேயே இருக்கச் செய்வதற்கான அனைத்து வேலைகளும் செய்யப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
அதோடு அணிகளின் பெயர்களில் ஊர்ப் பெயரை இணைத்தார்கள். ஒருவேளை வெறுமனே சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ், இந்தியன்ஸ் என்று மட்டும் வைத்திருந்தால் ரசிகர்கள் எல்லா அணிக்கும் எல்லா ஊர்களிலும் இருந்திருப்பார்கள். ஒரு அணி ரசிகர்களுக்கு மற்ற அணி ரசிகர்கள் மீது அதிக வெறுப்பு இருந்திருக்காது. அதனால் நம்மை கூறு படுத்தவே ஊரின் பேரில் அணி அமைக்கப்பட்டது. நமக்கு மெதுவாய் மற்ற அணீயினர் கசப்பு மனப்பாங்கு வளரும். அவர்களுக்கு வருமானம் உயரும்.
“இளம் வீரர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வர இது ஒர் களம்” இதனைப் பலர் கூறலாம். சரி எனது கேள்வி இதுதான். அப்படியென்றால் எதற்கு வெளிநாட்டு வீரர்களை அணியில் சேர்க்கிறீர்கள்? அதற்கும் சேர்த்து இந்திய வீரர்களை தேர்வு செய்யுங்களேன்! இன்னும் பலருக்கு வாய்ப்பு கிடைக்கும். செய்ய மாட்டீர்கள். வெளிநாட்டு வீரன் உங்களுக்கு கவர்ச்சிப் பொருள். அந்தக் கவர்ச்சியை நீங்கள் ரசிகனுக்கு ஊட்ட வேண்டும். அப்போதுதான் அவன் IPL ஐப் பற்றி அதிகம் சிந்திப்பான், பேசுவான், பார்ப்பான். உங்களுக்கு வருமானம் வரும்.
சராசரியாக 45 நாட்கள் நடைபெறக்கூடிய IPL இல் பங்கேற்கும் ஒரு வெளிநாட்டு வீரரின் சராசரி சம்பளம் 80 லட்சம் ரூபாய். எந்த வெளிநாட்டு வீரர் வர மறுப்பார்? ஒரு வருடத்தில் தான் சம்பாதிக்கும் தொகையை விட அதிகமாக ஒரு IPL ல் சம்பாதித்து விடுவர். அது அவர்களுக்கு மிக அதிகம்.
ஆனால் IPL ற்கு பல ஆயிரம் கோடி வருமானத்தில் 80 லட்சம் என்பது சிறு துளி.ஒட்டு மொத்த இந்தியர்களிடம் உறிஞ்சி ஒரு துளி வழங்குவதில் அவர்களுக்கு ஒன்றுமில்லை.
இன்று cheers Girls என்ற பெயரில் பெண்களை ஆட விட்டு விளையாட்டில் சிறு துளி மோகத்தையும் கலந்து விட்டார்கள். சில ஆண்டுகளில் இந்திய நடிகைகளையே அவ்வாறு ஆட வைத்தாலும் ஆச்சர்யமில்லை.
ஆக அவர்கள் விளையாட்டை வியாபாரமாய் பார்க்கிறார்கள். நாம் அவர்கள் வியாபாரத்தை விளையாட்டென்று பார்க்கிறோம். தனி மனித மனதில் ஏற்படும் மாற்றம்தான் இதற்கு தீர்வு. அதற்கு காலம்தான் பதில் சொல்லும்.