இசையும் பாடலும்
நம் மனநிலையை மாற்றும் சக்தி இசைக்கும் பாடலுக்கும் எப்போதுமே உண்டு. இசையும் பாடலும் ஆரம்ப காலம் தொட்டே நம்மோடு இணைந்து வருகிறது. முற்றிலும் படிப்பறிவில்லாத காலகட்டத்திலும் கூட நாட்டுப்புற பாடல்களை பாடியபடியே கிராம மக்கள் வேலை செய்ததை இலக்கியங்களில் காணலாம். இன்றும் சில கிராமங்களில் வேலை நேரங்களின் போது வேலையாட்கள் பாடுவதைக் கேட்கலாம். நன்கு உற்று கவனித்தால் அவர்கள் முதியவர்களாக இருப்பார்கள். ஆனால் இசை என்பது உயர்குடி மக்களுக்கு மட்டுமே என்ற நிலையை பிற்கால உயர்குடி மக்கள் தோற்றுவித்தனர்.
ஆனால் இன்றைய நிலையில் இசை, பாடல் என்பதெல்லாம் சினிமா இசையையும் பாடலையுமே குறிக்கும் சொற்களாய் மாறிப்போய் விட்டன. இருந்தாலும் இன்றைய இசை கூட ஏதோ ஒரு வகையில் நம்மை அறியாமல் நம்மோடு கலந்து விட்டிருக்கிறது. நாம் கேட்கும் ஒவ்வொரு பாடலும் ஏதோ ஒன்றை நமக்கு நினைவு படுத்துகிறது.