சமீபத்தில் ராமகிருஷ்ணன் எழுதிய “சிறிது வெளிச்சம்” நூலைப் படித்தேன். ஆனந்த விகடனில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. நல்ல புத்தகம். நாம் அன்றாடம் சந்திக்கும் கவனிக்காது விட்ட பல்வேறு அவலங்களையும், மகிழ்வுகளையும் விவரித்திருக்கிறார்.
வாரம் தோறும் வெளியானதாலோ என்னவோ ஒவ்வொரு அத்தியாயமும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவையாகவே இருக்கின்றன. ஆனாலும் தனித்தனியே ஒவ்வொரு கட்டுரையும் ஒரு சமூகக் கருத்தை முன்வைக்கிறது. அனைத்து கட்டுரைகளும் ஏதாவது ஒரு வடிவில் நம் அறிவைத் தொடுகிறது. அதில் முத்தாய்ப்பாய் “கைகள் இரண்டால்” கட்டுரை. ஆனால் இது அறிவிற்கு பதில் மனதினைத் தொடுகிறது.
எல்லா கட்டுரைகளிலும் ராமகிருஷ்ணன் ஏதாவது ஒரு வேற்று மொழி படத்தினையோ, நூலையோ மேற்கோள் காட்டி தன் கருத்தை விளக்குகிறார். அதனால் சிறந்த பிற மொழிப் படங்களையும், புத்தகங்களையும் தேர்வு செய்ய இந்த புத்தகத்தை ஒரு கருவியாகக் கொள்ளலாம்.