நான் இதுவரைக்கும் பாக்காத சாவு அது. வழக்கம்போல ஆபீசில வேலை பார்த்துக்கிட்டுருக்கும்போதுதான் அந்த போன் வந்துச்சு. “நம்ம ஹவுஸ் ஓனர் அம்மா எறந்துட்டாங்க”. சொன்னது என் ரூம் மேட். கூடவே இதையும் சொல்லிட்டார். “வீட்ல சமைக்க முடியாதாம்; வெளியில சாப்பிட்டுக்கச் சொல்லிட்டார்”. போனை வச்சுட்டார்.
நான் வேலை பாக்குறது சிங்கப்பூருல.. வந்து வருசம் ஒன்னாச்சு. நம்ம ஊர்லமாதிரி, ஹவுஸ் ஓனருன்னா நம்ம ஒரு வீட்லயும் அவர் ஒரு வீட்லயும் இருக்குறதில்லை. இங்க எப்புடின்னா, நம்ம ஒரு ரூம்ல இருப்போம், அவர் ஒரு ரூம்ல இருப்பார். கிச்சன் ரெண்டு பேருக்கும் பொது.
ஹவுஸ் ஓனர் தமிழர்தான். ஆனால் சிங்கப்பூர்ல பிறந்தவர். அவர் அம்மா இங்கு வந்து செட்டில் ஆனவர். ஹவுஸ் ஓனர் திருமணம் செஞ்சுக்கல. தனியாகத்தான் இருக்கிறார். வயசு ஒரு 55 இருக்கும். அவர் அம்மா அவரோட இருந்ததில்லை. எங்கோ மகள் வீட்ல இருக்கறதா சொல்லுவார். நாலஞ்சு தடவ பார்த்திருக்கிறேன். இங்கு வருவாக. ஒரு நாள் இருந்து விட்டுப் போயிருவாங்க. அவுகதான் செத்தது.
எங்கிட்ட நல்லாப் பேசுவாங்க. தான் மதுரையில் பிறந்ததாகவும், சொந்தக்காரங்க ஏமாத்துனதால மலேசியா வந்து அப்புறம் சிங்கப்பூரில் குடியேறியதாக சொல்லிருக்காங்க. என்னவோ எனக்கும் அவங்களோட பேசுறது பிடிக்கும். வரும்போதெல்லாம் எங்கிட்ட கொஞ்ச நேரமாவது பேசிட்டுதான் போவாங்க. ரெண்டு பேருக்குமே ஒரு தடவ ஊருக்குப் போன சந்தோசம்.
எனக்கு வேலை முடிய மணி ராத்திரி பத்தாயிருச்சு. இறக்கும்போதே ஹவுஸ் ஓனர் வீட்டிலதான் தன்னை வைக்கணும்னு அவங்க ஏற்கனவே சொன்னதுனால இங்கேதான் வச்சுருக்காங்க என ரூம் மேட் சொன்னார். அதையே நினைத்துக்கொண்டு கிளம்பினேன். வீட்டை நெருங்க நெருங்க ஒருவித வருத்தம் இயல்பாகவே ஒட்டிக்கிச்சு. நான் சிங்கப்பூரில் பாக்கப் போற முதல் சாவு வீடு. ஊருலயெல்லாம் தெரு முனையில் போகும் போதே ஒப்பாரி சத்தம் கேக்கும். வருத்தம் தானாய் ஒட்டிக்கும். இங்கு அப்படி எந்த சத்தமும் இல்லை.
வீட்டுக்கு பக்கத்துல வந்துட்டேன். ஒரே அமைதி. நாங்கள் இருப்பது அடுக்குமாடிக் குடியிருப்பின் முதல் மாடி. கீழே என் ரூம் மேட் உட்காந்திருந்தாரு. எனக்கு மேலே தனியாகச் செல்ல ஒரு மாதிரி இருந்ததால் அவரைக் கூப்பிட்டேன்.
“வாங்கங்க, மேலே பொய்ட்டு வந்துருவோம்”
அவர் சொன்னார்.
“பொய்ட்டு வாங்க இப்பத்தான் மேலே இருந்து வர்றேன்”
நான் மறுபடியும் கூப்பிட்டேன். மறுபடியும் அவர் சொன்னார்.
“பொய்ட்டு வாங்க இப்பத்தான் மேலே இருந்து வர்றேன்”
மேலே வந்துட்டேன். வாசலுக்கு வெளில சின்னப் பசங்க விளையாடிக் கிட்டு இருந்தாங்க. அந்த பசங்கள இதுவரைக்கும் நான் இங்கு விளையாடிப் பார்த்தது இல்லை. எந்தப் பசங்க விளையாடியும் பாத்ததில்லைங்கிறதுதான் உண்மை. சாவு வீட்டுக்கு வந்தவகளாகத்தான் இருக்கும் என நினைச்சுக்கிட்டே ஷூவைக கழட்டிட்டு உள்ளே போனேன். உள்ளே ஆறு பேர் இருந்தாங்க. என் ரூம் போனவுடனே இடப்பக்கத்திலயோ, வலப்பக்கத்திலயோ இல்ல். ஹாலைக் தாண்டித்தான் போகணும்.
ஹால்ல தரையில ஒரு பெட்டை விரிச்சு அதன் மேல் கிடத்தியிருந்தாங்க பிணத்தை. ஆமாம் இனிமே அந்தக் கிழவியின் பேரு பொணந்தான்.அது மேல ஒரு நாலு அல்லது அஞ்சு மாலை போட்டிருந்தாங்க. அவ்வளவுதான். நம்ம ஊரில மாதிரி ஒரு சேரில வச்சு துணியெல்லாம் கட்டி எதுவுமே இல்ல.
மொத்தத்துல அந்த கிழவியோட சாவுக்கு வந்தவங்க ஆறு பெரியவங்க, நாலு சின்ன பசங்க அப்புறம் நாலு மாலை அவ்வளவுதான். ரூமுக்குப் போய் பேககை வச்சுட்டு வந்து ஹால்ல உட்காந்தேன். நான் அவங்களோடு பேசுன பேச்செல்லாம் மனசுல ஓடிச்சு. கொஞ்ச நேரம் அமைதி. மொத்தம் 9 பிள்ளைங்க. ஹவுஸ் ஓனரைத்தவிர எல்லோருக்கும் கல்யாணமாயிருச்சு. எல்லோரும் சிஙகப்பூர்ல்தான் இருக்காங்க. அப்படிப் பாத்தாலும் குறைஞ்சது 17 பேராவது இருக்கணும். இல்லை ஆறுதான்.
அந்த ஆறு பேரும் ஆளுக்கொரு பக்கமாக உட்காந்துருந்தாங்க. ஷோபாவுல, சேருல, சுவத்துல சாஞ்சு. ஒரே ஒருத்த மட்டும் பிணத்துகிட்ட இருந்து கண்ணை இறுக்கிப் பிழிஞ்சு பார்த்துக் கொண்டிருந்தார். கண்ணீர்தான் வரலை. ஒரு நிமிசத்துல அவுகளும் ஷோபாவுல போய் உட்காந்துட்டாங்க. யாருகிட்டயும் எந்த வருத்தமும் இல்லை. யாருகிட்டயும்கிறது அந்த ஆறு பேருதான்.
அங்கே திடீர்னு யாரோ சொல்றாங்க. “நாளைக்கு சாயங்காலம் நாலு மணிக்குத்தான் அப்பாயின்மெண்ட், அதுவரைக்கும் இங்கதான் வச்சுக்கணும்”
வருத்தப் படுறாங்க இருக்குற ஆறு பேறும், நாளை வரைக்கும் வச்சுருக்கணும்கிறதுக்காக.
ஹவுஸ் ஓனர் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாரு. அவருக்கு என்ன ஆறுதல் சொல்றதுன்னு நான் யோசிக்கும்போதே அவரே சொல்லிட்டாரு “நீங்க காலைல வெள்ளனவே குளிச்சுருங்க, எல்லோரும் குளிக்கணும்”. என் இதயம் சுக்கு நூறாகிப்போச்சு. ஒரு தலைமுறையையே மாத்துன ஒரு கிழவியோட சாவுக்கு அழ ஆளில்லை.
மணியாகி விட்டது. இருந்த ஆறு பிள்ளைகளில் நாலு பேர் காலையில் வர்றதாச் சொல்லிட்டு பொய்ட்டாங்க. மீதி இருந்தவகளும் கொஞச நேரத்துல அதே ஹால்ல தூங்ட்டாங்க பொணத்தோட.
அங்கே மொத்தம் எனக்கு மூணூ பொணம் தெரிஞ்சுச்சு, ஒரு உயிரில்லாத பிணம். ரெண்டு உணர்ச்சியில்லாத பிணம்.
வீட்டை விட்டு வெளியே வந்தேன்.முதல் வீட்டுல இருக்குறவங்க வெளியே வரவே இல்லை. அங்கே ஒரு சாவு நடந்த சுவடே இல்லாதமாதிரி அவரவர் அவங்கவங்க அவங்கவங்க வீட்ல இருக்காங்க.
கீழே இறங்கி நடந்தேன் கொஞ்ச தூரம். சொந்த நாடு, சொந்த ஊரு, மக்களை விட்டு வந்த அந்தக் கிழவி செத்தே பொய்ட்டாள், பிள்ளைகலிருந்தும் அனாதையாக. அவர்கள் பிள்ளைகள் வருத்தப்படாமல் இருப்பது அவர்களுக்கு இயல்பாய் ஆயிருச்சு. அதனால அது பற்றிய எந்த குற்ற உணர்ச்சியும் அவங்ககிட்ட இல்ல.
ஊர்ல வெளிநாட்டில இருக்குறவங்கள பத்தி, “அவளுக்கென்னய்யா, அவ வெளிநாட்டில் செட்டில் ஆயிட்டா” எனப் பலர் சொல்லிக் கேட்டிருக்கேன். அந்த அவளுக்கெல்லாம் பின்னாடி இந்த மாதிரி பல அநாதைப்பிணங்கள் உண்டு என இன்னக்கி தெரியுது. “சண்டக்காரன் வீடா இருந்தாலும் சாவுக்குப் போகணும்” எனக் கேட்டு வளர்ந்தவன் நான். இந்த மாதிரி சாவு எனக்கு புதுசு. அம்பது வருசத்துக்கு முன்னாடி எந்தப் பணத்துக்காக அந்தக் கிழவி இங்கு வந்தாளோ அதே பணத்துக்காகத்தான் நானும் வந்துருக்கேன்.
ஒருவேளை நானும் இப்படி அநாதையாகவே சாகலாம். மனசுக்குள்ளே வேண்டிக்கிறேன். “கடவுளே, என்னோட சாவுக்கு ஒரு நாள் முன்னாடியாவது எங்க ஊர்ல என்ன சேத்துடு”.