மதிப்பிற்குறிய தமிழக முதல்வர் அவர்களுக்கு
இவன் புதிய தொழில்நுட்பங்களையும், மென்பொருட்களையும் கற்றுக்கொள்ள விழையும் தமிழன். தமிழின்பால் கொண்ட அன்பால் தன்னால் முடிந்தவரை தொழில்நுட்ப நூல்களையும், மென்பொருள்களையும் தமிழில் மொழி மாற்றம் செய்ய விழைபவன்.
சிங்கப்பூரிலும் சரி, உலகின் மற்ற நாடுகளிலும் சரி மிகப்பெரிய நிறுவனங்கள் அனைத்திலும் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பது தாங்கள் அறிந்ததே. அதோடு உலகம் சுருங்கி வருவதன் விளைவாக இன்று அனைத்து தொழில்நுட்பங்களும், மென்பொருள்களும் அனைத்து மொழிகளையும் தாங்கி வருகின்றன.
உதாரணமாக IBM போன்ற பெரிய நிறுவனங்கள் வெளியிடக்கூடிய அனைத்து மென்பொருட்களிலும் (Software,Servers, Operating Systems, Middle ware Technologies, VMWare, etc) பன்மொழி அமைப்பு உள்ளது (Multilanguage Support). அதனால் ஆங்கிலம் தெரியாத ஒரு சீனர் அவருடைய தாய்மொழியான சீனத்தில் அந்த தொழில் நுட்பத்தை அறிந்து கொள்ள முடிகிறது. காரணம் அந்த மென்பொருளில் சீனமொழியும் நிறுவப்பட்டிருக்கிறது. இதேபோல பல மொழிகளோடு தற்போது மென்பொருட்கள் வெளிவருகின்றன.
ஆனால் அந்த மொழிகளில் தமிழ் இல்லை. அதற்கு பெரிய நிறுவனங்கள் கூறும் காரணம் தமிழுக்கென்று முறையான அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த எழுத்து முறை இல்லை என்பதுதான். அதனால் தமிழைத் தவிர்க்கிறார்கள்.
அவர்கள் கூறுவதும் உண்மையே. நான் கற்ற தொழில்நுட்ப நூல்களைத் தமிழில் மொழி பெயர்க்கும் போது நான் பட்ட சிரமங்களும் அதுவே. ஒரிடத்தில் தமிழில் எழுதி விட்டு, மற்றோர் இடத்தில Copy , Paste செய்தால் கட்டம், கட்டமாகத் தெரியும். காரணம் அங்கே பின்பற்றப்படும் தமிழ் எழுத்து முறை வேறு, இங்கே பின்பற்றப்படும் தமிழ் எழுத்து முறை வேறு.
ஆனால் ஆங்கிலத்தில் அப்படி இல்லை. எங்கு எழுதினாலும், Cut,Copy, Paste செய்தாலும் ஒரே மாதிரிதான் இருக்கும். அது மட்டுமில்லாமல் ஆங்கிலத்தில் எழுத்துக்களை எளிதாக விதவிதமாக மாற்றிக்கொள்ளலாம்.ஆனால் தமிழில் நாம் எந்த அந்த எழுத்து முறையைப் பின்பற்றுகிறோமோ அதே எழுத்து முறைக்கான எழுத்துக்களை மட்டுமே உபயோகப்படுத்த இயலும். இருப்பினும் காலத்தேவையின் காரணமாக சில இணையதளங்கள் தமிழைப் பின்பற்றுகின்றன. உதாரணம் தமிழ் செய்தித் தளங்கள், விக்கீபீடியா.
ஒரு சில மென்பொருட்கள் வாயிலாகத் தமிழ் எழுத்துக்களை அழகு படுத்த இயலும் என்றாலும் கூட அவற்றை ஆங்கில எழுத்துக்களைப் போல எளிதில் மாற்ற இயலவில்லை.
கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் போது கணினித்தமிழுக்கான ஒருங்கிணைந்த எழுத்து முறை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டதும் உளமார மகிழ்ந்த தமிழன் நான்.ஆனால் நான் அறிந்த வரையில் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
நம் தமிழை வெறும் பேச்சு மொழியாக மட்டுமே அல்லாமல் அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்ல இணையத்திலும், தொழில்நுட்பத்திலும் தமிழின் பங்கை உறுதி செய்ய வேண்டியது நம் கடமை. சமீபத்தில் கூகுள் வெளியிட்ட மொழி உள்ளீட்டுக் கருவியிலும்கூட தமிழுக்கு ஆறு வகையான எழுத்து முறைகள் தரப்பட்டுள்ளன். ஒரே எழுத்துக்கு ஆறு விதமான உள்ளீட்டு முறைகள். தமிழைத் தவிர்க்க இயலாததால் அனைத்து உள்ளீட்டு முறைகளையும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆக நாம் தங்களிடம் வேண்டுவது யாதெனில், கணினித் தமிழிற்கான ஒருங்கிணைந்த எழுத்து முறை தமிழக அரசால் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்தால் அதனை அனைவரும் அறியும் வண்ணம் வெளியிடவும், அவ்வாறு இல்லையெனில் ஒருங்கிணைந்த தமிழ் எழுத்து முறையை உருவாக்கவும் ஆவண செய்யுங்கள் என்பதே.
நன்றி.