மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு
மகிழ்நன், சிங்கப்பூரிலிருந்து.
சமூகம், கலாச்சாரம், தனி நபர் செயல்பாடுகள் போன்றவற்றின் மீதான தத்தம் கேள்விகளுக்கு உங்களின் பதிலில் விடை தேடும் வாசகர்களில் ஒருவனுடைய கேள்வியல்ல இது? உங்களைப் பற்றிய, உங்கள் பதிவுகளைப் பற்றிய கேள்வி, உங்களிடமே.
எங்கோ எதையோ தேடி உங்கள் வலையை அடைந்தவர்களில் நானும் ஒருவன். சமீபகாலத்தில் நான் வசித்த வரையில் உங்களுடைய பதிவுகளிலும், பதில்களிலும் பல இடங்களில் யார் மீதாவது நீங்கள் கண்டனத்தையோ, வருத்தத்தையோ பதிவு செய்வதை உணர்கிறேன். உதாரணம், “பதிவிடப்பட்ட சிறுகதைகளுக்கு கருத்து தெரிவிக்கவில்லை”, “சமூகத்தின் பார்வை மாறவில்லை”, இப்படிப் பல. ஆனால் அந்த கண்டனத்தையோ, வருத்தத்தையோ நீங்கள் ஆக்ரோஷமாக வெளியிடுவதில்லை, லாவகமாக வெளியிடுகிறீர்கள். சிறந்த எழுத்தாளர் என்பதால் உங்களிடம் அந்த வல்லமை இருப்பதில் வியப்பில்லை. நீங்கள் செய்யும் செயலை நியாயப்படுத்தும் வல்லமையைப் பெற்றிருப்பதாலேயே செய்வதெல்லாம் சரியாகி விடாதல்லவா?
தங்களுடைய தளத்தில் பதிவிட்ட கதைகளுக்கு கருத்து தெரிவிக்கவில்லை என சில நாட்களுக்கு முன் ஒரு பதிவை பதிவு செய்திருந்தீர்கள். அவன் நான்தான். ஆம், கதைகளைப் படித்தேன், கருத்து தெரிவிக்கவில்லை. ஒப்புக்கொள்கிறேன். எல்லோரிடத்திலும் தாங்கள் செய்த செயலுக்கான விளக்கம் இருக்கின்றதுதான் என்றாலும் என்னிடத்தில் உள்ள இந்த விளக்கம் சற்றே உண்மையாகப்படுவதால் சொல்லுகிறேன்.
நான் தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றுகிறவன்,கற்கின்றவன். நீங்கள் உபயோகிக்கும் இன்றைய தொழில் நுட்பத்தின் பின்னால் என் பங்கும் இருக்கிறது.
கதையைப் படித்து கருத்து தெரிவிக்காதவன் நான் என்பது உண்மை, அதேபோல் மேற்கூறிய செய்தியும் உண்மை. இதில் தங்களிடம் மாற்றுக் கருத்து இருக்காது என நம்புகிறேன்.
சரி, உங்களிடம் என் கேள்வி இதுதான். உங்களுக்கு Apache Tomcat Server ஐ Configure செய்யத் தெரியுமா? தவறாகக் கொள்ள வேண்டாம். இனிமேல் வேண்டுமானால் நீங்கள் இணையத்தில் தேடலாம். உங்கள் இணையதளம் இயங்குவது WordPress எனப்படும் Content Management System த்தின் Latest Version என்ன என்பது தாங்கள் அறீவீர்களா? அதற்கு மாற்றாக உள்ள Joomla பற்றி அறிவீரா? அல்லது இதனை உருவாக்கியவருக்கு அல்லது அந்த நிறுவனத்திற்கு உங்கள் கருத்துக்களை அனுப்பியிருக்கீர்களா? இல்லைதானே.
ஆனால் உபயோகப்படுத்துகிறீர்கள். என்றாவது நாங்கள் எங்களுடைய ஒவ்வொரு தயாரிப்பினையும் பாராட்டுகிறவர்கள் மட்டும், கருத்து தெரிவிப்பவர்கள் மட்டும் தான் உபயோகப்படுத்த வேண்டும் கூறியிருக்கிறோமா? இல்லை. எங்களுடைய புதிய நுட்பங்களினைப் பற்றித் தெரியாதவர்களிடம் கூட அதற்கான முக்கியத்துவத்தை கொண்டுவந்து சேர்க்கிறோம்.
ஏதோ ஒரு விதத்தில் ஒரு தொழில்நுட்பத்தால் சென்றடைய முடிந்ததை தங்களுடைய கதைகளால் அடைய முடியவில்லையென்றால் சொல்லப்பட்ட விதத்திலோ அல்லது கொண்டுவந்து சேர்க்கப்பட்ட விதத்திலோ ஏதோ பிழையென்று தானே பொருள்.
நீங்கள் இவ்வாறு நினைத்துப் பாருங்கள் நாளை முதல் உங்கள் இணைய தளத்தினை திறக்கும் ஒவ்வொருக்கும் இந்தச் செய்தி முதல் செய்தியாகக் காட்டப்படும். “திரு ஜெயமோகன் அவர்கள், நமது புதிய தொழில்நுட்பம் பற்றி கருத்து தெரிவிக்காதனால், அவரிடத்தில் எங்களுடைய வருத்தத்தைப் பதிவு செய்கிறோம், ஜெயமோகனின் மனப்பாங்கில் மாற்றம் தேவை”.
இதைத்தானே நீங்கள் செய்திருக்கிறீர்கள். மறைமுகமாகவோ நேரடியாகவோ கருத்து தெரிவிக்காதவர்களைக் குட்டியிருக்கீர்கள் லாவகமாக.தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை செய்யும் எவரும் இலக்கியத்தைப் பற்றி குறைவாகப்பேசி நான் கண்டதில்லை. அதில் புலமை பெறவே விழைகிறோம், அல்லது முயல்கிறோம். ஆனால் நீங்கள் அல்லது பல எழுத்தாளர்கள் நவீன தொழில் நுட்பம் என்ற ஒரே வார்த்தையில் அனைத்தது தொழில் நுட்பங்களையும் அடக்கி விடுகிறீர்களா இல்லையா?
அதனால்தானோ என்னவோ எல்லா இளைஞர்களிடமுமிருந்தும் தங்களுக்கு ஏற்புடைய கருத்துக்களாகத் வருவதில்லையோ எனவும் தோன்றுகிறது.
உங்களுடைய பல்லாயிரக்கணக்கான வாசகர்கள், நான் உட்பட உங்களை அடைந்தது இணையம் வழியாகத் தானே. அப்புறம் ஏன் அவர்களையே கருத்து தெரிவிக்க வில்லை என் நாகரிகமான வார்த்தைகளால் இகழ்கிறீர்கள்? நீங்கள் உபயோகிக்கும் போன்றவற்றினை உருவாக்கியவருக்கு கருத்து தெரிவித்து விட்டா அதனை உபயோகிக்கிறீர்கள்? உங்களுடைய தேவைக்காக உபயோகிக்கிறீர்கள். அதைப்போலத்தான் நாங்களும், எங்களுடைய இலக்கிய வேட்கையின் பொருட்டு தங்கள் எழுத்துக்களை வாசிக்கிறோம். நாம் இருவருமே ஒன்றுதானே.
விளக்கத்திற்காக காத்திருக்கிறேன்.
—
உண்மையுடன்
மகிழ்நன்