மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நான் எழுதிய மடலுக்கான ஜெயமோகன் அவர்களுடைய பதிலை இங்கே பதிவிடுகிறேன். நான் படித்த சில புத்தகங்கள் வாயிலாகவே என்னையறியாமல் வந்த தலைக்கனத்தின் மீது மீண்டும் ஒரு குட்டு.
நான் செப்பனிடப்படுகிறேன்.
அன்புள்ள மகிழ்நன்
உங்கள் முந்தைய கதைக்கான என் பதிவுக்கு நீங்கள் இப்படி எதிர்வினையாற்றியிருக்கிறீர்கள் என்றால் வருந்துகிறேன். நீங்கள் உங்கள் இடத்தை, நிலையை சற்றும் பரிசீலனைசெய்ய தயாராக இல்லை என்றுதான் அர்த்தம். எழுத்தாளர்களின் இயல்பு அது அல்ல.
உங்கள் கடிதம் அதிலுள்ள கோபம் ஆகியவற்றின் அர்த்தம் எனக்குப்புரியவில்லை. அது குறைந்தபட்ச தர்க்கத்துடன் இருக்கிறதா என்றுகூட நீங்கள் கவனிப்பதில்லை. நீங்கள் சொல்லவரும் விஷயத்தை பதிவுசெய்வதற்கு முன் இணையதளக்கட்டுரைகளையாவது வாசிக்கவேண்டுமென நினைப்பதில்லை. நான் முந்தைய கடிதத்தில் எழுதியதை மீண்டும் உறுதிசெய்கிறீர்கள். நீங்கள் வாசிப்பதில்லை. வாசிப்பின்மீது நம்பிக்கையும் இல்லை. ஆனால் நீங்கள் எழுதியதை நான் வாசிகக்வேண்டுமென ஆசைப்படுகிறீர்கள்.
என்னுடைய இணையதளத்தில் வெளிவந்தக் கட்டுரைகளை வாசித்த அனைவரும் கண்டிப்பாகக் கருத்துத் தெரிவிக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை. வாசகன் கருத்துத்தெரிவிக்காமலிருப்பதற்கான முழு உரிமை உடையவன்.. அதை இந்த இணையதளத்திலேயே எப்படியும் நூறுமுறை சொல்லியிருப்பேன்,
நான் கருத்துத் தெரிவிக்கவேண்டுமெனச் சொன்னது எழுத ஆசைப்படும் சக படைப்பாளிகள், மற்றும் இலக்கியக்கருத்துக்களைப் பகிர்வதில் ஆர்வம்கொண்டவர்களைப்பற்றி. ஏனென்றல் இலக்கியம் விவாதங்கள் மூலமே நுட்பமாக வாசிக்கப்படும், மதிப்பிடப்படும். விவாதிக்கப்படாத எழுத்து கவனிக்கப்படாது போகும். எங்கும் எப்போதும் அதுவே வழி. நேற்று அந்த மரபு இருந்தது என்று சொல்லியிருந்தேன்.
அதற்கும் நீங்கள் சொல்லியிருப்பதற்கும் என்ன சம்பந்தம்? நான் கோத்ரெஜ் சோப்பு போட்டு குளிக்கிறேன். உடனே கோத்ரெஜுக்கு ஃபீட்பேக் கொடுத்தீர்களா என்று கேட்பீர்களா என்ன? ஒருநாளில் நூறு பொருட்களை கையாள்கிறேன், எல்லாவற்றுக்கும் விவாதம் செய்தாகவேண்டுமா என்ன? யோசிக்கிறீர்களா?
நான் கணிப்பொறி நிபுணன் என்றால், இணையதள வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவன் என்றல், இணையதள வடிவமைப்பாளர்கள் சிலருடைய இணையதள வடிவாக்கங்கள் என் முன் வைக்கப்பட்டால் கண்டிப்பாக அவர்களுக்கு அந்த ஆக்கங்களை ப்பற்றி என் கருத்தைத் தெரிவிப்பேன். விவாதிப்பேன். என்னை மேம்படுத்திக்கொள்வேன். இணையதளவடிவமைப்பில் மிகமிக நவீனமாக என்னன இருக்கிறது என்று நான் தெரிந்துகொள்ள, என் இடமென்ன என்று நானே வகுத்துக்கொள்ள அது உதவும்
அப்படி என்னைத் தயாரித்துக்கொள்ளாமல் நான் என்குரலை எழுப்ப மாட்டேன்
ஜெ