பொருளாதாரம் பற்றி அறியத்துவங்கிய காலத்தின் ஆரம்பகாலக் கேள்விகளுள் ஒன்று. இந்தக் கேள்வியோடிருப்பவர் நீங்களென்றால் உங்களுக்கே இந்தப் பதிவு.
இந்தியாவின் கடன் தொகை பல லட்சம் கோடிகளில். ரூபாய் மதிப்பு சரிவு. இதைச் சரிசெய்ய அதிக பணம் அச்சடித்தால் என்ன? அடிப்படைக்கேள்வி.
அடிக்கலாம். என்ன நடக்கும்? அரசாங்கம் அதிக பணம் அச்சடிக்கும். அதை புழக்கத்தில் விடும். புழக்கத்தில் விட வேண்டுமென்றால் அரசு திட்டங்களுக்காக செலவிடலாம், அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக தரலாம் அல்லது மக்களுக்கு மணியார்டர் செய்யலாம். எப்படியோ மக்களிடம் சேர்ந்துவிடும். நினைவில் கொள்ளுங்கள். அரசு திடீரென்று பணத்தை அச்சடித்திருக்கிறது. ஆனால உற்பத்தி எப்போதும்போல்தான் இருக்கிறது.
சரி பணத்தை புழக்கத்தில் விட்டாயிற்று. அடுத்தென்ன நடக்கும்? ஒட்டு மொத்த மக்களிடம் முன்பு 50000 ரூபாய் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இப்போது அரசு ஒரு 50000 ரூபாய் அச்சடிப்பதாகவும் வைத்துக்கொள்வோம். புழக்கத்தில் விட்டபின் மக்களிடம் மொத்தம் 1 லட்சம் ரூபாய் இருக்கும்.
மக்கள் முன்பு 50 ஆயிரம் ரூபாய் இருந்தபோது வாங்க முயற்சித்த பொருள்களை இப்போது 1 லட்சம் ரூபாயைக்கொண்டு வாங்க முயற்சிப்பர். பொருள்களின் விலை தானாக உயரும். ஏனென்றால் பொருள்களின் உற்பத்தி திடீரென்று உயரவில்லை. ஆக முன்பு 50 ரூபாய் கொடுத்து வாங்கிய ஒரு பொருளை இப்பொழுது 100 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியிருக்கும்.
இப்படியாக பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்துவிடும். முன்னைய 50 ரூபாயின் மதிப்பை இப்பழுதுள்ள 100 ரூபாயால் தான் அடைய முடியும்.
மேலும் நாம் இறக்குமதி செய்த பொருளுக்கு கொடுக்க வேண்டிய தொகையும் அதிகரித்திருக்கும். ஏனென்றால் மேற்கூறிய தகவல்தான், 50 ரூபாய் கொடுக்க வேண்டிய ஒருவருக்கு இனி 100 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும். ஏனென்றால் முந்தைய 50 ரூபாயின் மதிப்பும், இப்போதைய 100 ரூபாயின் மதிப்பும் சமம்.
அதனால்தான் பணமதிப்பு வீழ்ச்சி ஏற்றுமதிக்கு இலாபமெனவும், இறக்குமதிக்கு நட்டமெனவும் கூறுகின்றனர்.