மகாபாரதக் கதாபாத்திரங்களை அக்காலக் கட்டத்தில் அவர்களின் ஊடே பயணிக்கும் ஒருவன் விளக்குவதைப் போல விவரிக்கும் நூல். மகாபாரதத்தின் மீதான ஆர்வம் தணியாததால் இந்த நூலை வாசித்தேன். மகாபாரதக் கதை நிகழ்ந்த இடங்களுக்கு பயணம் செய்து அதன் விளைவாக தான் உணர்ந்தவற்றை கதாபாத்திரங்களின் ஊடே பயணம் செல்வது போல் விளக்கியிருக்கின்றார் ராமகிருஷ்ணன்.
படித்து முடிக்கும் பொழுது மகாபாரதத்தினை நம் கண்முன்னே கண்டதுபோல, அந்தக் காலக் கட்டத்திலே வாழ்ந்தது போல ஒரு உணர்வை ஏற்படுத்துவதே இந்நூலின் வெற்றி. இப்படியெல்லாம் மகாபாரதத்தினை உள்வாங்கிக்கொள்ளலாமோ என்ற எண்ணத்தை வாசிக்கும் ஒவ்வொரு பக்கமும் ஏற்படுத்துகிறது. இத்துணை சிறப்பாக இந்த நுலை எழுத வேண்டுமானால் மகாபாரதத்தினை எவ்வளவு நுட்பமாகப் படித்திருக்க வேண்டும் என எண்ணும்பொழுது ஆசிரியர் மீதான மதிப்பு உயர்கிறது.
இந்தப் புத்தகத்தை வாசித்து முடிக்கும் பொழுதும் மகாபாரதப்பயணத்தின் தொடக்கத்திலேயே நிற்கிறேன். மகாபாரதம் முடிவற்றது என்ற எண்ணமே மீண்டும் தழைத்தோங்குகிறது.
நன்றி.