அமெரிக்காவைச் சேர்ந்தவர், பிரபல விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன். 1083 புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றவர்.
எரிந்து சாம்பலாகாத இழைகளைக் கொண்ட மின்சார பல்பை உருவாக்க அயராது உழைத்துக் கொண்டிருந்தார்.
பல ஆண்டுகள் இரவும் பகலும் அரும்பாடுபட்டு கடைசியில் ஒரு நாள் தன் முயற்சியில் முழு வெற்றியும் பெற்றார்.
அப்போது அதிகாலை மூன்று மணி.
மின்சார பல்பு பிரகாசமாக எரிவதைக் கண்டு மகிழ்ச்சியில் திளைத்த அவர், தூங்கிக்கொண்டிருந்த தன் மனைவியைத் தட்டி எழுப்பினார்.
“ஏய்! பார் இந்த அதிசயத்தை!”
“என்ன?”
“இருட்டை வெளிச்சமாக்கி விட்டேன்!”
கண்களைத் திறந்த அவர் மனைவி, ‘சட்’டென்று மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள்.
“என்ன இது ஒரே வெளிச்சம்! கண்கள் கூசுகின்றன. தூக்கம் கெடுகிறது. உடனே விளக்கை அணைத்து விட்டுப் பேசாமல் படுங்கள்!” என்று கூறிவிட்டுத் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.
தாமஸ் ஆல்வா எடிசன் அசைவற்று நின்றார்.
பிறகு சிரித்தார்.
நிறைவான சிரிப்பு!