சிங்கப்பூர் கலவரம்

சிங்கப்பூர் கலவரம் தொடர்பாக சீமான அவர்களின் குரலும் அதற்கான பதிலும்.

சீமான் உரை

அய்யா சீமான் அவர்களே! நான் அதே புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து இங்கு வந்து வேலை செய்பவன். அத‌னால் இந்த சிங்கப்பூர் நிகழ்வு தொடர்பாக தங்களுக்கு விளக்கம் அளிக்க விரும்புறேன். நீங்கள் தங்கள் பேச்சில் குறிப்பிட்டுள்ள‌ மற்ற நிகழ்வுகளைப் பற்றிய   முழுமையான தகவல் (பத்திரிக்கை செய்திகளைத் தவிர) என்னிடம் இல்லை. 

தயவு செய்து இது போன்ற பத்திரிக்கை செய்திகளை மட்டும் வைத்துக்கொண்டோ அல்லது செய்திகளில் அடிபட வேண்டும் என்பதற்காகவோ தவறான போக்குகளுக்குத் துணை நிற்காதீர்கள். சம்பவத்தின் ஒரு வரி இதுதான். நம் நண்பர்கள் செய்த‌து முழுத்தவறு. இதில் மாற்றுக்கருத்து இல்லை. இதனை நீங்கள் வேண்டுமானால் இங்குள்ள அனைத்து நம் நாட்டு நண்பர்களையும் கேட்டுத்தெரிந்து கொள்ளலாம். 

பிரச்சினைக்கான முக்கியக் காரணம் இரண்டு. ஒன்று மது. இரண்டாவது நம் தமிழக குறிப்பாக தென் தமிழக மாவட்டங்களில் ஒரு இயல்பு உண்டு. ஒரு திருவிழாவிலோ, அல்லது பண்டிகை நாட்களிலோ குடித்து விட்டு நண்பர்களோ, அல்லது ஓரின மக்களோ ஒன்று கூடும்பொழுது உற்சாக மிகுதியால் சண்டைகளைப் போடுவதும், கூச்சலிடுவதும், சிறு,பெரு கலவரங்கள் நடைபெறுவதும் இயல்பான ஒன்று. அந்த மன நிலைதானன். துதான் இங்கு நடந்த நிகழ்வின் ஒரு முக்கிய காரணம்.

ஒரு நபர் இறந்ததும் அவருடைய நண்பர்கள் கூச்சலிட உடனே அங்கிருந்த மற்ற சிலரும் போதை காரணமாக சேர்ந்து கொள்ள பிரச்சினை பெரிதாகியது. மற்றொன்று சிறிது நேரத்தில் அங்கு வந்த போலிஸ் எந்த வித நடவடிக்கையும் உடனடியாக எடுக்காமல் நிகழ்வை மட்டுமம் கவனித்துக் கொண்டு இருந்து கொண்டிருந்தது. இது நம்மவர்களுக்கு போலீஸே நம்மைப் பார்த்து பயந்து விட்டது என்ற எண்ணத்தைக் கொடுக்க அங்கிருந்த போலிஸ் வாகனங்கள், ஆம்புலன்ஸ் தீ வைத்து எரிக்கப்பட்டது. 

மற்றொன்று இங்குள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் விரக்தியில் இருப்பதாகக் கூறுகிறீர்கள். அதுவும் முற்றிலும் தவறு. இங்கு இருக்கும் பெரும்பாலான தொழிலாளர்கள் தன்னுடைய பணிக்காலத்தைத் தொடர்ந்து நீட்டிக்க விண்ணப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். நீங்கள் கூறுவது போல விரக்தியில் இருந்தால் அது எப்படி சாத்தியம்? அதற்கு அவர்கள் குடும்ப வறுமை, சூழ்நிலை என்று நீங்கள் காரணம் கூறினாலும் அதுவும் தவறு. ஏனெனில் இன்றைய நிலையில் கூட நம்முடைய ஊரின் கட்டுமானத் தொழிலாளியின் சம்பளத்தை விட 5 மடங்கு இங்கு சம்பளம் அதிகம். 

இங்கு இவர்கள் கேட்கும் சில சலுகைகள் கூட இங்குள்ள மற்ற வேலைகளோடும் ஒப்பிட்டுத்தான். இவர்கள் இங்கு இன்றிருக்கும் நிலையை நம் நாட்டு கட்டுமானத்தொழிலாளர்கள் அடைய‌ இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.

அதோடு இது நம்முடைய தேசம் போல் இல்லை. நம்முடய சினிமாவில் தான் ஒருவர் செய்தால் கொலை. பலர் செய்தால் கலவரம் போன்ற வசனங்களை வைத்து இளைஞர்களை தூண்டிவிட்டு வள‌ர்க்கிறோம். 

ஆனால் இங்கெல்லாம் அப்படி சாத்தியமில்லை. ஏனெனில் இந்த சம்பவம் தொடர்பாக 32 பேரை கைது செய்த காவல் துறை 28 பேரை மட்டும் குற்றவாளிகளென அறிவித்து மற்றவர்களை விடுதலை செய்து விட்டது. அந்த 28 பேரும் நேரடியாக போலிஸைத் தாக்குதல், வாகனங்களை உடைத்தல், எரித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள். மற்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட‌ 52 பேரை எந்த தண்டனையும் இன்றி நம் நாட்டிற்குத் திரும்ப அனுப்பப் போகிறார்கள்.

சம்பவம் நடந்த பிறகு சிங்கப்பூர் போலீஸ் விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டது. ஒட்டுமொத்தமாக சிங்கப்பூரின் 80 சதவித மக்கள் கூடுமிடங்களில் ரகசிய கேமராக்கள் உள்ளன. அதனால் தவறானவர்களோ அப்பாவிகளோ கைது செய்யப்படவேயில்லை.சம்பவம் நடந்த அன்று 3000 த்திற்கும் அதிகமான் தமிழர்கள் லிட்டில் இந்தியா பகுதியில் கூடியிருந்தார்கள். ஆனால் மிகச் சரியாக குற்றம் செய்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

என்னிடத்தில் கூட பல சீனர்களும், மலே இனத்தினரும் கூட சம்பவத்தில் ஈடுபட்டவர்களால் மற்றவர்கள் பாதிக்கக்கூடாது எனத்தான் கூறினர். பிரதமரும், அமைச்சர்களும் கூட மற்ற சட்ட திட்டங்களை மதிக்கும் எந்த வெளிநாட்டு ஊழியருக்கும் அரசு முழுத் துணை நிற்கும் என்றுதான் அறிவித்தார்கள்.

ஒரு வேளை 40 ஆண்டுகாலம் எந்தக் கலவரமும் நம் நாட்டில் ஏற்படாமல் இருந்து வேறு ஒரு நாட்டினர் வந்து கலவரம் செய்து, போலிஸையும், வாகனங்களையும் தாக்கினால் நாம் சும்மாயிருப்போமா என்ன?

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.