ஒருவழியாக டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி என்பது முடிவாகிவிட்டது. காங்கிரஸை எதிர்த்து அரசியல் செய்து அவர்கள் ஆதரவிலேயே ஆட்சியும் அமைக்க வேண்டிய சூழ்நிலை. ஆம் ஆத்மி காங்கிரஸ் நிபந்தனை இல்லாத ஆதரவு அளித்திருப்பதாகக் கூற, ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க முடிவு செய்து அறிவிப்பு வெளியானவுடன் ஷீலா தீட்சித்தோ நிபந்தனையற்ற ஆதரவு என்று நாங்கள் கூறவில்லை என முதல் குண்டை போட்டிருக்கிறார். மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்தும் செயல்பாட்டின் அடிப்படையில் ஆதரவு, ஆறு மாதத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என கூறியிருக்கிறார்.
இந்நிலையில் மக்களிடம் கருத்துக்கேட்டுத்தான் ஆட்சி அமைப்பதாக ஆம் ஆத்மி ஆட்சி அறிவித்து இருக்கிறது. முதலில் யாருடனும் கூட்டணி இல்லை என அறிவித்த கெஜ்ரிவால் பின்னர் தன் நிலையை மாற்றிக் கொண்டுள்ளார்.
இதற்கு முக்கிய காரணங்கள் மூன்று.
ஒன்று தேர்தலில் இரண்டாவதாக வந்தாலும் கூட ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனைத் தவற விடக்கூடாது.
இரண்டாவது மீண்டும் தேர்தலை சந்தித்தால் அது அரசிற்கு வீண் செலவு. அதற்கு ஆம் ஆத்மியே முழுக்காரணம் என்ற தோற்றம் ஏற்படுத்தப்படும். மேலும் அது அக்கட்சியின் அடிப்படை நிலைக்கு எதிரான செயல்பாடு என முன் வைக்கப்படும்.
மூன்றாவது காங்கிரஸின் ஆதரவோடு ஆட்சி அமைத்து பின்னர் அது ஆதரவை விலக்கிக்கொண்டாலும் கூட மக்களிடம் காங்கிரஸின் மீது மீண்டும் வெறுப்புதான் ஏற்படும். இன்னும் அதிகமான இடங்களில் வெல்லலாம் என்பது.
ஆனால் இப்போது அமைய உள்ள இந்த மைனாரிட்டி அரசினால் எத்துனை சிறப்பாக செயல்பட முடியும் என்பதே இப்போதைய பிரச்சினை. கெஜ்ரிவால் இதை சிறப்பாக கையாள்வார் என நம்புவது மட்டுமே இப்போதைக்கு முடியும். ஏனெனில் அவர் நம் மற்ற அரசியல்வாதிகளைப் போலில்லை என்பதை அவரது கடந்த கால செயல்பாடுகளிலிருந்து அறியலாம். மற்றொன்று இந்திய அரசின் உயரிய பதவியாக கருதப்படும் சிவில் சர்வீஸ் அரசுப்பணியாளராக இருந்தவர். இத்துனை அரசியல் இடர்ப்பாடுகளுக்கு இடையிலே தன் கட்சியை வழிநடத்தியவர்.
உண்மைதான். இருப்பினும் முழு அதிகாரத்தோடு டெல்லியில் ஒரு ஆட்சியில் அமைந்தால் கூட மற்ற மாநில அதிகாரங்களோடு டெல்லி அரசை ஒப்பிட இயலாது. ஏனெனில் டெல்லியின் பல்வேறு அதிகாரங்கள் மத்திய அரசின் வசம் உள்ளன காவல் துறை உட்பட. இது தேசிய தலைநகராக இருப்பதால், முதன் முதலாக சட்டமன்றம் அமைப்பதற்கான வெளியிடப்பட்ட அரசாணை 1991 லேயே இதற்கான வரையறைகள் மற்ற யூனியன் பிரதேசங்களைப் போலில்லாமல் அமைக்கப்பட்டது.
முழு அதிகாரம் இருந்தாலே முழுமையாக செயல்பட முடியாத நிலையில் டெல்லி அரசின் செயல்பாட்டினை எப்படி எதிர்பார்க்கலாம்?
முதலில் காங்கிரஸின் ஆதரவிற்காக எந்த விசயத்திலும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என ஆம் ஆத்மி அறிவித்த கையோடு கடந்த 15 ஆண்டுகால காங்கிரஸ் அரசின் ஊழல்கள் தொடர்பான விவரங்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனை வெறுமனே காங்கிரஸ் கண்டிப்பாக வேடிக்கை பார்க்காது. ஒருவேளை நாடளுமன்றத்தேர்தல் வரை வேண்டுமானால் எதுவும் செய்யாமல் இருக்கலாம்.
ஆனால் அதன் பிறகு நாடளுமன்றத்தேர்தலின் முடிவு எப்படியிருந்தாலும் காங்கிரஸ் ஆம் ஆத்மி கட்சிக்கு பிரச்சினைகளை கொடுக்கத் தொடங்கி விடும்.
நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்றால் சில காலம் கழித்து டெல்லியிலாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என முயலலாம். நமக்கு எப்பொழுதுமே மாற்றம் தேவை. இக்கரைக்கு அக்கரை பச்சையாகவேத் தெரியும். எனவே ஒரு வேளை வெல்ல வாய்ப்பு உண்டு.நாடாளுமன்றத் தேர்தலில் வென்றால் மக்களின் மனப்போக்கில் மாற்றம் ஏற்பட்டு விட்டதாக எண்ணி ஆதரவை வாபஸ் பெற்று டெல்லியை மீண்டும் வெல்ல முயலலாம்.
காங்கிரஸ் எப்படி ஆதரவை விலக்கிக் கொள்ளும்?
ஒரு வேளை அதன் மீதான ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதரவை திரும்பப் பெறலாம். அதனை உடனே ஒரு நாளில் செய்யவில்லையென்றாலும் கூட படிப்படியாக மக்கள் விரோத அரசு, வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு, என ஆதாவது காரணம் சொல்லி ஆட்சிக்கான ஆதரவை விளக்கிக் கொள்ளும். அப்போது வேறு வழியில்லாமல் மீண்டும் அனைவரும் தேர்தலை சந்திக்க வேண்டித்தான் இருக்கும்.
ஒருவேளை காங்கிரஸின் ஆதரவிற்காக அதன் மீதான ஊழல்களை கண்டுகொள்ளாமல் விடுவது அல்லது வேறு ஏதாவது வழியில் சம்ரசம் செய்து கொள்வது என ஆம் ஆத்மி செயல்படுமானால் அது மீண்டும் மற்ற அரசியல் கட்சிகளின் வரிசையில் தான் சேரும். மக்களிடமும் அதற்கான ஆதரவு குறையத்தொடங்கி விடும். ஏனெனில் மற்ற கட்சிகளிலிருந்து வேறுபட்டு இருப்பதன் காரணமாகத்தான் அதற்கான ஆதரவு இத்துணை விரைவாகப் பெருகியது. இது அதன் தலைவர்களுக்கும் தெரியும். அதனால் இத்தகைய சமரசங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.
எனவே காங்கிரஸின் ஊழல்களை ஆம் ஆத்மி விசாரிக்கத் தொடங்கும். காங்கிரஸ் அதன் ஆதரவை விலக்கிக் கொள்ளும். தேர்தல் வரும்.
ஆனால் இந்நிலையில் என்னுடைய கேள்வியெல்லாம் இத்தனை தூரம் பயணித்து மீண்டும் தேர்தலை சந்திப்பதை விட பேசாமல் மீண்டும் தேர்தலை சந்தித்து முழுமையான அரசை கெஜ்ரிவால் அமைத்தால் என்ன? தற்காலிகத் தீர்வை விட நிரந்தரத் தீர்வே தலைநகருக்குத் தேவை.