லூவர் அருங்காட்சியகம் பிரான்ஸிலுள்ள ஓரு உலகப்புகழ் பெற்ற அருங்காட்சியகம். அங்கு 4500 ஆண்டுகளுக்கு முன்னரிருந்த புராதானச்சின்னங்கள் முதல் 18 ஆம் நூற்றாண்டு வரையிலான பல்வேறு பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. உலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஒவியம் இங்குதான் உள்ளது.
இந்த அருங்காட்சியகம் பற்றிய சில தகவல்கள்.
இந்த அருங்காட்சியகம் 60 சதுர கிமீ பரப்பளவில் செய்ன் நதிக்கரையில் அமைந்துள்ளது.
வருடத்திற்கு 97 லட்சம் மக்கள் இங்கு வருகின்றனர்.
உலகிலேயே அதிக மக்களால் கண்டுகளிக்கப்பட்ட அருங்காட்சியகம் இதுதான்.
மொத்தம் 380000 க்கும் அதிகமான நினைவுச் சின்னங்கள் உள்ளன.அவற்றுள் ஒவியங்கள் மட்டும் 35000க்கும் அதிகம்.
முதன்முதலாக இரண்டாம் பிலிப் மன்னனால் 12 ஆம் நூற்றாண்டில் வசிப்பதற்காக கட்டப்பட்டது. பின்னர் பல்வேறு மன்னர்களால் மாற்றம் செய்யப்பட்டது.
பின்னர் 14 ஆம் நூற்றாண்டில் ஐந்தாம் சார்லஸ் மன்னன் வெர்செய்ல்ஸ் மாளிகைக்கு தன்னுடைய வசிப்பிடத்தை மாற்றிய பின்னர் சில ஒவியர்கள் தங்குவதற்காக வழங்கப்பட்டது.
பின்னர் பல்வேறு மன்னர்களால் சேர்க்கப்பட்ட கலைப்பொருள்கள், வரலாற்று சின்னங்கள், ஓவியங்கள் ஆகியவற்றைக் கொண்டு 1750 ல் ஒரு கண்காட்சி இந்த லூவர் அரண்மனையில் 15 ஆம் லூயிஸ் மன்னனால் நடத்தப்பட்டது.
பின்னர் நெப்போலியன் காலத்தில் போர் நடவடிக்கைகள், ஒப்பந்தங்கள் மூலமாக பல்வேறு உலகப்புகழ் பெற்ற ஓவியங்கள், புராதானச்சின்னங்கள் இந்த அருங்காட்சியகத்தில் சேர்க்கப்பட்டன.
இரண்டாம் உலகப்போரின்போது இவையெல்லாம் அபகரிக்கப்பட்டுவிடும் என்ற எண்ணத்தில் வெவ்வேறு இடங்களில் மறைவாக வைக்கப்பட்டன.
அவற்றுள் உள்ள பல்வேறு பொருட்கள் உரிமையாளரை வற்புறுத்தி பெறப்பட்டவை என்ற குற்றச்சாட்டு எப்போதும் உண்டு.
அதனால் பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் அருங்காட்சியகத்தின் எந்த ஒரு பொருளையும் அதன் உரிமையாளர் மீண்டும் எடுத்துக்கொள்ளும் வண்ணம் அனுமதி அளிக்கப்பட்டது.
இதன் காரணமாக பல்வேறு நபர்கள் தங்களுடைய புராதானப் பொருட்களை நிருபித்து பெற்றுச் சென்றனர்.
இந்த அருங்காட்சியகம் பிரான்ஸ் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் பெரும்பாலான நடவடிக்கைகளை லூவர் நிர்வாகமே செய்து கொள்ளும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு,ஊழியர்களின் ஊதியம், நிர்வாகம் இவற்றுக்கான செலவை அரசும் பிற செயல்களுக்கான செலவுகளை லூவர் நிர்வாகமும் ஏற்றுக்கொள்கின்றன.
இதனால் வருமானத்திற்காக லூவர் அருங்காட்சியகத்தின் சில பகுதிகள் திரைப்படங்களின் ஒளிப்பதிவிற்காக வாடகைக்கு விடப்படுகின்றன.
மேலும் வருமானத்தை அதிகரிக்கவும், கூட்டத்தினை சமாளிக்கவும் பிரான்ஸில் மேலும் பல நகரங்களில் இந்த அருங்காட்சியகத்தின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலும் எந்தவித கட்டுமான மாற்றமும் பெறாத இந்த அருங்காட்சியகத்தின் முகப்பில் கண்ணாடியால் ஆன பிரமீடு 1988 ல் பிரான்ஸ் அரசால் அமைக்கப்பட்டது.
பிரான்ஸ் அரசாங்கம் மற்றுமொரு லூவர் அருங்காட்சியகத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சாடியாத் தீவில் அமைக்க அந்நாட்டு அரசுடன் 130 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த அருங்காட்சியகம் பறக்கும் தட்டு வடிவில் அமைக்கப்படுகிறது. கட்டுமானப் பணிகள் 2015 ஆம் ஆண்டு நிறைவு பெறும் என எதிபார்க்கப்படுகிறது.
அங்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் புராதான சின்னங்கள் கொண்டுவரப்பட்டு ஆண்டுக்கு 4 கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்படும்.
இந்த செயல்பாடு 15 ஆண்டுகளுக்குத் தொடரும்.
உலகின் பல்வேறு பகுதிகளின் தலைவர்களிடமிருந்து நன்கொடையும், பலர் தங்களிடமுள்ள புராதான சின்னங்களையும் இந்த அருங்காட்சியகத்துக்கு வழங்கி வருகின்றனர்.