உலகாளும் ஒரு மொழி

languageஉலகமெங்கும் மக்களால் ஒரே மொழிதான் பேசப்படப்போகிறது, எழுதப்படப்போகிறது. இதனைச் சிலர் மறுத்தும் சிலர் ஏற்றும் பேசலாம். ஆனால் அதுதான் நடைபெறுகிறது.

எந்த ஒரு மொழியும் அதன் வாழும் காலத்தை அதன் மாற்றங்களைக் கொண்டே நிர்ணயம் செய்து கொள்கிறது. காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டே, புதுப்பித்துக்கொண்டே வரக்கூடிய மொழிகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன,எஞ்சியிருக்கும்.

இன்றைய நிலையில் உலகம் முழுவது ஏறத்தாழ 7000 மொழிகள் பேசப்படுகின்றன. ஆனால் அவற்றுள் உலக மக்கள் தொகையில் ஒரு விழுக்காட்டுக்கு மேற்பட்ட மக்களால் பேசப்படும் மொழிகள் 20 மட்டுமே. இதுதான் எதார்த்தம். இந்த 20 மொழிகளுள் தமிழும் ஒன்று என நாம் மகிழ்ந்து கொள்ளலாம். ஆனால் இதன் பொருள் தமிழ் தன்னைக்காத்துக் கொள்கிறது என்பதல்ல; மற்ற மொழிகளை விட மெதுவாக வழக்கொழிந்து வருகிறது என்பதே.
ஒரு மொழி வழக்கொழிவதற்கான காரணங்களாக பின்வருவனவற்றைக் கொள்ளலாம்.

முதலாவதாக பொருளாதார,வாழ்க்கை நிலை. எந்த மொழி அதனைப் பேசும் மக்களுக்கான பொருளாதார வாழ்க்கைத்தேவைகளை நிறைவு செய்கிறதோ அதுவே வளரும். அத்தகைய வாய்ப்புகளை வழங்காத மொழி பேச்சு மொழியாக மட்டுமே எஞ்சியிருந்து பின்னர் அதுவும் அழிந்து போகும். ஏனெனில் அத்தகைய வாய்ப்புகளை அளிக்கும் மொழியை நோக்கி மக்கள் நகர்வு ந‌டைபெறும்.

ஒரு மொழி பேசும் மக்கள் வாழுமிடத்தில் வாய்ப்புகள் அதிகம் உள்ளதை அறியும் வேறோர் மொழி பேசும் மக்கள் அவ்விடத்திற்கு வரும்பொழுது, ஒரு தலைமுறை காலம் கழித்தபின்னர் அவர்கள் வழி வந்த மக்களுக்கு அவர்களுடைய ஆதி மொழி இரண்டாம் மொழியாக மாறிவிட்டிருக்கும். இப்படியாக பலமொழிகள் அதன் பொருளாதார வல்லமையாலும், தொழில் வாய்ப்புகளாலும் மற்ற சிறு வட்டார மொழிகளை கடந்த நூற்றாண்டில் அழித்தன. இன்றும் அழிக்கின்றன. இது தவிர்க்க முடியாத‌து.

இரண்டாவது சொல்வளமின்மை மற்றும் பற்றாக்குறை. எந்த மொழியும் அது உருவான காலக்கட்டத்தின் தேவைக்கேற்ப சொற்களஞ்சியத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால் காலம் செல்லச்செல்ல புதுப்புது தேவைகளுக்கேற்ப தன் சொற்களஞ்சியத்தை விரிவு செய்ய வேண்டிய கட்டாயம் எல்லா மொழிக்கு உண்டு. அப்படி தன்னை மீட்டுருவாக்கம் செய்யாத மொழி தேக்கமடைகிறது.

உதாரணமாக கடந்த ஒரு நூற்றாண்டுகால அறிவியல் கண்டுபிடிப்புகளின் பெயர்கள், அதற்கான விளக்கங்கள் அனைத்து மொழிகளிலும் இருக்கிறதா என்றால் இல்லை. இந்நிலையில் அந்த புதிய கண்டுபிடிப்பைக் கற்க விரும்பும் மக்கள், அப்புதிய கண்டுபிடிப்பு தொடர்பான தகவல்களை அந்த‌ மொழி வாயிலாகவே அறிந்துகொள்ள‌ முடியும். அப்புதிய கண்டுபிடிப்புக்கான புதிய சொற்களை உருவாக்காத மொழி பேசும் மக்கள் அந்த தொழில்நுட்பத்தைக் கற்க விழையும் போது தங்களுடைய மொழி உபயோகத்தை இயல்பாகவே குறைக்கின்றனர். மொழி தேய்கிறது. தமிழ் ஆங்கிலத்தால் விழுங்கப்படும் நிலையின் அடிப்படை இதுவே.

மூன்றாவது புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய‌ சிந்தனைகள். ஒரு மொழியினைப்பேசும் மக்கள் தங்களுடைய‌ சிந்தனைகளையும், புதிய கண்டுபிடிப்புகளையும், அவற்றுக்கான‌ பெயரையும், விளக்கத்தையும் தங்கள் மொழியிலேயே அளிக்கின்றனர். அப்புதிய கண்டுபிடிப்போ சிந்தனையோ உலகின் தேவையாக ஆகும்பொழுது அந்த மொழிக்கான முக்கியத்துவம் அதிகரிக்கிறது. ஆக புதிய கண்டுபிடிப்புகள் இல்லாத மொழியும் வழக்கொழிகிறது.

நாலவதாக தொடர்பு. கடந்த ஒரு நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் சாதனங்களின் வழியாக உலக நாடுகள் அனைத்தும் ஒரே நிலம் என்பதுபோல் நெருங்கிவிட்டன. முன்பு ஒரு நாட்டிலிருந்து மற்றோர் நாட்டுக்கு செல்ல‌ நாட்கள், மாதங்கள் ஆகின. இன்று உல‌கத்தின் ஒரு மூலையில் இருந்து மற்றோர் மூலைக்கு 15 மணிநேரத்தில் சென்றுவிட முடியும். எதிர்காலத்தில் இன்னும் குறையலாம். தினமும் வேலைக்கு வெளிநாடுகளுக்கு செல்லும் காலம் வரும். இப்ப‌டிப்பட்ட நிலையில் உலக மக்களோடு தொடர்பு கொள்ள ஒரு பொது மொழி தேவையாக இருக்கிறது. அதன்காரணமாகவும் குறிப்பிட்ட மொழி பேசும் வட்டார மக்கள் தங்கள் மொழியை விடுத்து ஒரு பொது மொழியை நோக்கி நகர வேண்டியிருக்கிறது.

ஐந்தாவதாக இணையம். இன்றைய நிலையில் இணையம் என்ற ஒன்று இல்லாத வாழ்வென்பது பெரும்பாலான நாடுகளில் இல்லை. இணையத்தை முற்றிலும் ஒதுக்கிவிட்டு ஒரு முழுமையான வாழ்க்கையை வாழ்வதென்பது இன்று இந்தியாவில் பெரும்பாலும் சாத்தியம் இல்லை.

ஆக உலக மக்களுக்கு கட்டாயத் தேவையான‌ இணையத்தில் அதற்கான‌ தொடர்புக்கு ஒரு பொது மொழி தேவையாகி அதனை ஆங்கிலம் எடுத்துக்கொண்டது. (ஆங்கிலத்தோடு ஒப்பிடுகையில் மற்ற இணைய மொழிகள் வெகு குறைவு மட்டுமே, மேலும் இணையத் தொழில்நுட்பத்தின் கட்டமைப்பு முழுவதுமே ஆங்கிலத்திலேயே)

ஆங்கிலம் கோலோச்சியதற்கு ஆங்கிலம் பேசும் இங்கிலாந்து மக்களால் உலகின் இன்றைய பல்வேறு நாடுகள் ஆளப்பட்டிருந்தமை ஒரு காரணம். எனவே அங்கெல்லாம் ஆங்கிலம் அறியப்பட்டிருந்தது. மற்றொன்று பெரும்பாலான கடந்த நூற்றாண்டின் கண்டுபிடிப்புகள் எல்லாம் ஆங்கிலம் பேசும் மக்களால் கண்டறியப்பட்டன. எனவே தேவை கருதி உலகம் தனக்கும் மற்ற மக்களுக்கும் தெரிந்த பொது மொழியான ஆங்கிலத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது.

இருப்பினும்,எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பும் எத்தனை காலம் தாழ்த்தி வருகிறதோ அத்தனை வீரியம் கொண்டிருக்கும் என்பதே வரலாறு. உதாரணம் அலைபேசி. கடந்த பத்தாண்டுக்கு முன்னால் செல்பேசி என்பது என்னவேன்றே தெரியாத மக்கள் 80 விழுக்காடு இருந்த தேசத்தில் இன்று 20 வயதில் இருந்து 60 வயது வரையுள்ளவர்களில் பெரும்பாலும் அனைவரிடமும் அலைபேசி இருக்கிறது. இந்த வளர்ச்சியை வீட்டு இணைப்பு தொலைபேசிகள் அதனுடைய மொத்தக் காலத்தில் எப்பொழுதும் அடையவேயில்லை.

காலம் தாழ்த்தி வந்தாலும் வீரியத்தோடு வந்தது அலைபேசி. அதுபோல இன்றைய நிலையில் ஆங்கிலத்திற்கே உலகாளும் ஒரு மொழியாகும் வாய்ப்பு இருந்தாலும், மேற்கூறியதுபோல வீரியத்தோடு ஏதேனும் ஒரு மொழி, கண்டுபிடிப்பு, பொருளாதார வளம் போன்றவற்றில் மேலே வந்து உலகாலும் ஒரு மொழியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நன்றி.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.