டொலென்டினோ அமைதி ஒப்பந்தம் என்பது பிப்ரவரி 19, 1797 ல் நெப்போலியனால் ஆளப்பட்ட புரட்சிகர பிரான்ஸிற்கும் அப்போதைய போப்பால் ஆளப்பட்ட பப்பல் தேசத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட அமைதி ஒப்பந்தம் ஆகும்.
அமைதி ஒப்பந்தம் எனக்கூறப்பட்டாலும் இது பப்பல் நாடுகளுக்கு வேறு வழி இல்லாத ஒரு நிலையிலேயே கையெழுத்தானது. நெப்போலியனின் புரட்சிகளின் விளைவாக ஏற்பட்ட போர் வெற்றிகளைத் தொடர்ந்து ஆஸ்திரியா,ஆர்கோலா போன்ற நாடுகள் நெப்போலியனின் கீழ் வந்தன. அதனைத் தொடர்ந்து வடக்கு இத்தாலியில் நெப்போலியனுக்கு எதிரியே இல்லாத ஒரு நிலை உருவானது. அதனால் பப்பல் நாடுகளையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர விரும்பி பப்பல் நாடுகளுடன் நடைபெற்ற ஒன்பது மாத பேச்சு வார்த்தைகள் பயனளிக்காததன் பொருட்டு 1797 பிப்ரவரியில் 9000 பிரெஞ்சு வீரர்கள் பப்பல் தேசத்தில் ஊடுருவினர். அதன் தொடர்ச்சியாக போரிட இயலாததால் டோலண்டினோ ஒப்பந்தத்திற்கு பப்பல் நாடுகள் உடன்படவேண்டியதாயிற்று.
இவ்வொப்பந்தத்தின்படி 36 மில்லியன் லிரே எதிர்கால இழப்பீடாக பிரான்சிற்கு வழங்கப்பட்டது.
ஏவிக்னான் நகரம் பப்பல் நாட்டிலிருந்து பிரிக்கப்பட்டு பிரான்சுடன் இணைக்கப்பட்டது. மேலும் ரோமாக்னா பகுதி பப்பல் நாட்டிலிருந்து பிரிக்கப்பட்டு சிசால்பின் குடியரசு எனும் பிரான்சின் அயல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.
அத்தோடு பப்பல் தேசத்தின் பாரம்பரிய ஓவியங்கள், கலைப்பொருட்கள் பிரான்சின் லூவரே அருங்காட்ட்சியகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. எந்த பொருளைக் கொண்டுசெல்லலாம் என முடிவெடுக்கும் உரிமையும் பிரான்சிற்கே வழங்கப்பட்டது.