சமீபத்தில் ஒருநாள் தொலைக்காட்சியில் ஒரு பழைய திரைப்படத்தின் காட்சி ஒளிபரப்பானது. அந்தக் காட்சியில் தன் வீட்டு வறுமையை தன் தம்பிக்கு தெரியாமல் மறைப்பாள் அக்கா. தம்பியை டாக்டராக்க வேண்டும் என்பது அவள் கனவாக இருக்கும். அந்த அக்கா பத்மினி, தம்பி முத்துராமன். அப்படத்தின் பெயர் தெரியாததால் என் அம்மாவிடம் காட்சியை விளக்கிக் கேட்டேன். பட்டென்று பதில் வந்தது, சித்தி என்று.
அப்படத்தைப் பார்த்தேன். எஸ்.எஸ். வாசன் அவர்களின் இயக்கத்தில் 1966 ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது. இசை எம்.எஸ்.விஸ்வநாதன். நான் பிறப்பதற்கு கால் நூற்றாண்டு காலம் முன்னர் வந்த திரைப்படம். அதனால் அந்த திரைப்படத்தை இந்த காலகட்டத்தோடு ஒப்பிட்டு பார்க்கக்கூடாது என்ற எண்ணத்தோடு பார்த்தேன்.
எட்டு தங்கைகள், ஒரு தம்பியோடு பிறந்த ஒரு பெண் அவர்களுக்காக தன்னுடைய காதலை தியாகம் செய்து, இரண்டாம் தாரமாக ஒருவரை மணக்கிறார். ஆனால் அவரோ சில காலம் கழித்து சொன்னபடி அவர் குடும்பத்தையும், தம்பியின் படிப்பையும் பார்த்துக் கொள்ள முடியாது என கை விரிக்கிறார். இந்நிலையில் எப்படி அனைவரையும் அந்த பெண் கறை சேர்க்கிறாள் என்பதே கதை.
இன்றைக்கும் கச்சிதமாகப் பொருந்தக்கூடிய மிகச்சிறந்த திரைக்கதை. எந்த ஒரு கதாபத்திரமும் தொய்வடைவதே இல்லாத கதை அமைப்பு. நான்கைந்து கதாபாத்திரங்களையே நிர்வகிக்க முடியாத சமீபத்திய பல படங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தில் எம்.ஆர்.ராதா,பத்மினி, ஜெமினி கணேசன், முத்துராமன், நாகேஷ்,வி.கே.ராமசாமி இன்னும் எனக்குப் பெயர் தெரியாத பல நடிகர்கள். ஆனாலும் அனைவருடைய கதாபாத்திரமும் சிறப்பாகவும், நேர்த்தியாகவும், இயல்பாகவும் கதை ஓட்டத்தோடு பின்னப்பட்டிருப்பதை கண்டு நான் வியந்தேன்.
இன்றைய படங்களை நான் முற்றிலுமாக குறை சொல்லவில்லை. ஆனால் கண்டிப்பாக காலம் செல்லச் செல்ல ஆகச் சிறந்தவையே எஞ்சி நிற்கும் என்பது விதி. அப்படிப்பார்த்தால் கண்டிப்பாக 60 ஆண்டுகளுக்கு முன் வந்த இப்படத்தோடு ஒப்பிடும் அளவுக்குக் கூட பல படங்கள் இப்போது இல்லை.
இந்தப்படத்தில் நான் வியந்த மற்றோர் அம்சம் வசனம். இத்தனை சிறப்பாக இப்போழுது கூட வசனம் இருக்கிறதா என்று நினைத்தால் சில படங்களைத் தவிர மற்றவை ஏமாற்றத்தையே தருகின்றன. Timing Dialog ஆகட்டும், இல்லை சின்னச் சின்ன பாடல்களாகட்டும் பிரமாதம்.
பின்னாளில் இந்தத் திரைப்படம் அதே பத்மினியின் நடிப்பில் இந்தியில் என்ற பெயரில் 1977 ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது.
வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாகப் பாருங்கள். Youtuble ல் இருக்கிறது. இணைப்பு கீழே.