பெரும்பாலும் அதீத கேளிக்கைகள் நடைபெறும் நிகழ்வுகளுக்கு செல்லும் வழக்கம் இல்லாத நான் சமீபத்திய காலங்களில் அத்தகைய நிகழ்வுகளுக்குச் செல்கிறேன். அங்கே நான் கண்ட சில கேளிக்கை நிகழ்வுகள் சென்று வந்த சில நாட்களுக்குப் பின்னரும் என் மனதில் நீடித்துக்கொண்டே இருந்தது, முற்றிலும் கேளிக்கைக்காகவே இத்தனை வளம் வீணடிக்கப்படுகிறதே என.
உதாரணமாக ஓர் மிகப்பிரமாண்டமான செயற்கை நீரூற்று. அங்கே அது கண்டிப்பாக தேவையில்லைதான். அதனைக் காண்பதனைத்தவிர வேறொன்றும் எவரும் எதுவும் செய்யவில்லை.மிக மோசமான நிலையில் வாழும் மக்களின் வாழ்க்கையினை மிக நெருக்கமாக கண்டிருக்கிறேன். அங்கே நீர் என்பது மிக மிக அத்தியாவசியமான ஒன்று. அதனை மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதுவதைக் கண்டிருக்கிறேன். அங்கே நீரைப் பணமாகக் கருதவில்லையெனினும் வீட்டில் நீரை யாராவது வீணடிக்கும் போது வசவு கிடைக்கும். இங்கே நீரை ஓர் உதாரணத்திற்காக மட்டுமே கூறுகிறேன். பொதுவாக கண்டிப்பாக இந்த வளம் இங்கே உபயோகப்படுத்தப்படவேண்டியதில்லை என்னும் நிலையில் அதீத வளம் வீணடிக்கப்படுவதையும், கண்டிப்பாகத்தேவை என்னும் இடத்தில் வளம் பற்றாக்குறையாக இருப்பதையும் மிக அருகில் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.
இதன் காரணம் என்னவாக இருக்கும்?
உணவுத்திருவிழா என்ற ஒன்று தாய்லாந்தில் நடைபெறுகிறது தினமும். உலகின் அனைத்து உணவுகளும் அங்கே கிடைக்கும். முன்பதிவு செய்தால் போதும். ஒரே கட்டணம். ஒரு மிகப்பெரிய அரங்கில் உலகின் அனைத்து வகை உணவுகளையும் வைத்துவிடுகிறார்கள். வேண்டும் உணவை எடுத்து உண்ணலாம். அமர்வதற்கு மேசைகளும் உண்டு. உணவு குறைந்தவுடன் அங்குள்ள பணியாளர்கள் அதனை மீண்டும் நிரப்பி விடுவார்கள். சீன உணவு, மேற்கத்திய உணவு, இந்திய உணவு, ஜப்பானிய உணவு, தாய்லாந்து உணவு என ஏராளம். நான் கண்டவர்களில் ஏராளம்பேர் அனைத்து உணவுகளையும் உண்டு மகிழ முயன்றார்கள். ஆனால் தான் பழக்கப்பட்ட உணவைத்தவிர புதிய உணவினை அவர்களால் அதிக அளவில் உண்ண இயலவில்லை. அது உண்மைதான். மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் சொன்னது போல சுவை என்பது மனப்பழக்கம் தானே. ஒரே கட்டணம் என்பதால் ஒரு உணவு பிடிக்காது போனவுடன் அதனை கொட்டிவிட்டு அடுத்த உணவுக்கு சென்று விடுகின்றனர். ஜப்பானியன் ஒருவன் இந்திய உணவினை வீணடிக்கிறான். இந்தியன் சீன உணவை வீணடிக்கிறான். என்னால் உறுதியாகக் கூற முடியும் குறைந்த பட்சம் 30 விழுக்காடு உணவு குப்பைக்கு சென்றது. அதுதான் தினமும் நிகழும். இது தவிர மீதமாகும் உணவு வேறு. ஏனென்றால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு தயாரிக்கும் இடத்தில் கண்டிப்பாக மீதமாகும்.மூன்று வேளை உணவிற்காக கஷ்டப்படும் பலரையும் நான் அறிவேன்.
இவையெல்லாம் உதாரணங்களே. ஓர் முனையில் வளம் அதீத அளவிற்கு முற்றிலும் கேளிக்கைக்காகவும் மகிழ்விற்காகவும் செலவிடப்படுகிறது. மற்றோர் முனையில் அடிப்படைத் தேவைக்கான வளத்திற்கே பற்றாக்குறை.
ஆம் அதுவே இந்த உலகின் நியதி. உச்சம் ஒருபுறமும் இல்லாமை ஒரு புறமும் இருப்பதன் வழியாகவே உலகம் தன் சமநிலையை மீட்டுக்கொள்கிறது. புதிய இடத்திற்கு தன்னை இட்டுச்செல்கிறது. அதீத உற்சாகத்தில் இருப்பவனே ஒரு புதிய கண்டுபிடிப்புக்கான விதையை விதைக்கிறான். அப்படிப்பட்ட ஒருவனே செல்போனைக் கண்டுபிடித்தான். இன்று அது அனைவருக்கும் அவசியமானதாகப்படுகிறது. அது கண்டறியப்பட்ட ஆரம்ப காலத்தில் மிகவும் ஆடம்பரமான பொருளாகக் கருதப்பட்டது. இல்லாதவனின் அடிப்படை உரிமையில் அதற்கு இடம் இல்லை. அதற்காக அதனைக் கண்டறியாமல் இருந்திருந்தால் இன்று அப்படி ஒன்றே இருந்திருக்காது.
அதீத எளிமையாய் வாழ்பவர்கள் உலகை தங்கள் பக்கம் நோக்கி இழுக்கிறார்கள். அதீத கேளிக்கை கொண்டாடுபவர்கள் உலகை தங்களை நோக்கி இழுக்கிறார்கள். அதன் வழி உலகம் தனக்கான இடத்தை கண்டு நிலை கொள்கிறது. எவர் ஒருவர் தான் கண்டடைந்ததை நிருபணம் செய்கிறாரோ அப்புள்ளிக்கு உலகம் தன்னை நகர்த்திக்கொள்கிறது. நீங்களும் நானும் ஒன்று இந்த இரு முனைகளில் ஒன்றில் இருக்கலாம். அல்லது உலகின் சமநிலைப்புள்ளியில் உலகோடு சேர்ந்து இயங்கலாம். அதாவது புது செல்போன் வாங்குவது, திரைப்படம் பார்ப்பது, அரசியல் கருத்து தெரிவிப்பது, ஃபேஸ்புக்கில் சாட் செய்வது, முதியோர் இல்லத்துக்கு செல்வது என.நன்றி.