இந்திய சினிமா தனது நூறாவது ஆண்டைக் கொண்டாடிவிட்டது. விழாவும் எடுத்தாயிற்று. இந்த நூறாண்டுகளில் இந்திய சினிமா இந்திய சமூகத்திற்காக செய்தவை என்று எண்ணினால் ஏமாற்றமே. சினிமா தொடர்பான துறையில் இருப்பவர்கள் வேண்டுமானால் சினிமாவைப் பற்றிப் புள்ளிவிபரங்களை அடுக்கி அதனை நியாயப்படுத்த முயன்றாலும் அவர்களுக்கே தெரியும் உண்மை எதுவென்று. அவர்களுக்கு வேறு வழியில்லை. சினிமாவில் உள்ளவர்கள் தங்களைத் தாங்களே உயரத்தூக்கிக் கொள்வார்கள். அதற்கென்றே உள்ளது இன்றைய ஊடகத்துறை.
இயல் இசை நாடகத்தின் பரிணாம வளர்ச்சியாக வந்த சினிமா ஆரம்பகாலங்களில் நாடகத்தினைப் போலவே செயல்பட்டு, ஒரு சராசரிக் குடிமகனை உன்னத நிலை நோக்கி நகர்த்தும் பணியை செய்தது. ஒரு நிலையில் கேளிக்கைக்காக சேர்க்கப்பட்ட ஒரு துணுக்கு மிகப்பெரிய வணிக வெற்றியடைய அன்று முதல் இன்று வரை அந்த துணுக்குகளாலேயே படம் நிறைக்கப்படுகிறது. விதி விலக்குகள் உண்டு என்றாலும் சினிமா சீரழித்த அளவுடன் ஒப்பிடும் பொழுது அதனை புறக்கணித்துவிடலாம்.
இன்றைய சினிமாவிற்கு லட்சியமெல்லாம் எதுவும் கிடையாது. அதிகம் பேருக்கு ஒரு நடிகையின் தொடையைப் பார்க்க பிடிக்கிறதென்றால் எந்த இயக்குநர் முதலில் அந்த நடிகையின் தொடையைக் காட்டுகின்ற காட்சியை வைக்கிறானோ அவனுக்கு வசூல். அவ்வளவுதான். இங்கே எந்த தர்மமும் தேவையில்லை.
சாதனையாளர்களைக் காட்டிய சினிமா பின்னர் சாமானியனைக் காட்டுகின்றேன் என்ற பெயரில் ஒரு சாமானியன் செய்யும் அனைத்து செயல்களுக்கும் நியாயம் கற்பிக்கத் தொடங்கியது. அதன் விளைவாக அனைவரும் தன் செயல்களுக்கு நியாயம் கற்பிக்கத் தொடங்கினர். சினிமா மோகம் உண்டாயிற்று. கதாநாயகர்களைக் கொண்டாடத் தொடங்கினார்கள். ஆரம்பகாலத்தில் வில்லனின் கெட்டெண்ணத்தை காட்டுவதற்காக வைக்கப்பட்ட குத்துப்பாடல்கள், கவர்ச்சி காட்சிகள் நாளடைவில் கட்டாயமாக்கப்பட்டது. படத்தின் மையக் கதாபாத்திரமே குத்துபாடல்களிலும், நீச்சல் காட்சிகளும் கதாநாயகியோடு கட்டிப் புரண்டார்கள்.
அப்பா அன்று சிலுக்கைப் பார்த்தார். பையன் இன்று மும்தாஜைப் பார்க்கிறான். அவ்வளவுதான் வித்தியாசம்.
அது மட்டுமில்லாமல் நடிகைகளை வட இந்தியா, மற்ற நாடுகள் எனக் கொண்டுவந்து தமிழ் நாட்டில் இருக்கும் கருப்பான பெண்கள் எல்லோரும் அழகற்றவர்கள் என்ற எண்ணத்தினை இயல்பாகவே அனைவர் மனதிலும் பதியவைத்து விட்டார்கள். 75 விழுக்காட்டிற்குமேல் கருப்பு நிறம் உள்ளவர்கள் வாழுமிடத்தில் அனைத்து இளைஞர்களும் சிவப்பு நிற பெண்ணை விரும்புகின்ற அவலம் இங்கு மட்டுமே.
சினிமா கலை என்கிற காலம் மலையேறிவிட்டது. இன்றைய சினிமா என்பது முற்றிலும் வணிகம் மட்டுமே. இதில் பணம் வருமென்றால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். எவருக்கும் எந்த அக்கறையும் கிடையாது. வேண்டுமானால் இன்றே சென்சார் போர்டை நீக்கிவிட்டு அனைவரும் தத்தம் மனசாட்சிப்படி திரைப்படம் எடுத்து வெளியிடலாம் என்று அறிவிக்கட்டும் பாருங்கள். பத்தே வருடங்களில் அனைத்து தமிழ் சினிமாவுமே பார்ன் சினிமாவாய் மாறியிருக்கும்.