எங்கு பார்த்தாலும் டிசிஎஸ் நிறுவனத்தின் வேலை நிறுத்தத்தினைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். என்னதான் அங்கே நடக்கிறது என்ற உண்மை நிலை தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். போதாதற்கு சமூக வலைத்தளம், வாட்ஸ் அப் போன்றவற்றில் அதனைப் பகிர்ந்து கொள்ளவும் செய்கின்றனர். இதனால் சமீபத்திய நாட்களில் தேசத்தில் பெரும்பாலானவர்களால் விவாதிக்கப்படும் செய்தியாயிருக்கிறது.
இச்சூழ்நிலையில் மென்பொருள் துறை மீது எப்பொழுதுமே வெறுப்போடு இருக்கும் ஒரு சாரர், இதனை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு தங்களின் ஆதங்கத்தையெல்லாம் கொட்டித் தீர்க்கின்றனர். அவர்களால் தான் விலைவாசி உயர்ந்தது, வாடகை உயர்ந்தது,அவர்களுக்கு எப்பவுமே பொறுப்பில்ல சார் என்னும் வெட்டிப்பேச்சுகளாக. இவற்றுள் உள்ள இரண்டாம் தர கருத்துக்களை நாம் ஒதுக்கிவிட்டால் மட்டுமே நமக்கு ஒரு தெளிவு கிடைக்கும். ஏனெனில் இம்மாதிரியான நிகழ்கால நிகழ்வுகளை வெற்று கூச்சல்களாக மாற்றும் கூட்டம் மிக அதிகம். ஏதாவது செய்தியில் ஒன்றைப் பார்த்துவிட்டு வந்து அதனை தானே கள ஆய்வின் மூலம் கண்டதைப் போல விவரிப்பார்கள். ஒரு நல்ல வாசகனோ, இல்லை ஒரு நல்ல விமரிசகனோ அவர்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்வான். அத்தோடு அவர்களை கண்டுகொள்ளாமலும் செல்வான். அப்படி செல்வதே அவர்களுக்கான நமது பதிலாக இருக்கவேண்டும் என்பதே என் எண்ணம். அதன் வழியே அவர்களைக் கடந்து செல்வது. அவர்களும் சென்றுவிடுவார்கள், இந்த பரந்துபட்ட தேசத்தில் பேசுவதற்கான தகவல்களுக்கா பஞ்சம்?
சரி, டிசிஎஸ் விஷயத்திற்கு வருவோம். நம்மை வேலைக்கு எடுக்கும் பொழுதே இது போன்ற அனைத்து விஷயங்களையும் சொல்லித்தான் வேலைக்கு எடுத்தார்கள். எல்லாவற்றிற்கும் ஒப்புக்கொண்டே நாம் வேலையில் சேர்ந்தோம். கண்டிப்பாக வேலை இழப்பு வருந்தக் கூடிய ஒரு நிகழ்வுதான். ஆனால் அதற்கு நிறுவனத்தை மட்டும் எப்படி குறை சொல்ல முடியும்? இன்றும் வெட்டியாகவே வந்து செல்லும் பல ஊழியர்களை இரண்டு மூன்று மட்டங்களில் எனக்குத் தெரியும். ஆனால் அவர்களுடைய வருமானம் சீனியர் என்ற காரணத்தினால் பல மடங்கு அதிகமாக இருக்கும், ஆனால் வேலை அப்படி அல்ல. இதில் உள்ள வருந்த வேண்டிய ஒரு விஷயம், நன்றாக வேலை செய்யாதவர்களால் நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட முடிவில் நன்றாக வேலை செய்பவர்களும் மாட்டிக்கொண்டதுதான்.
சரி, நாம் வாங்குவதைவிட இரண்டு மடங்கு சம்பளத்தில் வேலை கிடைத்தால் இருக்கும் வேலையை விட்டு போவோமா? இல்லையா? அதனைப்போலத்தான் நிர்வாகமும். நம்மால் முடிந்த அளவிற்கு நாம் நமக்கு நல்லதை செய்து கொள்கிறோம். கம்பெனியும் அதனால் முடிந்த அளவிற்கு தேவையான நன்மைகளை செய்து கொள்கிறது. இதில் எப்படி குற்றம் காண முடியும்?
அதோடு கடந்த பதினைந்து ஆண்டுகளாக கோலோச்சிய மென்பொருள் துறை சற்றே சரிவடையத் தொடங்கி இருக்கிறது. இதற்கான காரணங்களாக நாம் இவற்றைக் கூறலாம்.
முதலாவதாக ஐடி துறை என்பது மிக உயர்வாகப் பார்க்கப்பட்டதால் பெரும்பாலும் அனைவரும் பத்தாண்டுகளுக்கு முன்பு சாஃப்ட்வேர் இஞ்சினியர் என்று ஐடியை நோக்கமாகக் கொண்டு படித்தனர். அதனால் கடந்த பத்தாண்டுகளில் சராசரியாக எழுபது விழுக்காடு பட்டதாரிகள் ஐடியை நோக்கியே வந்தனர். அதனால் மென்பொருள் துறைக்கான மனித வளம் மிக அதிகமாகக் கிடைத்தது. 100 வேலைக்கு பத்து பட்டதாரிகள் என்ற நிலை மாறி பத்து வேலைக்கு 100 பட்டதாரிகள் என்று ஆனது. விளைவு ஊதியம் குறைக்கப்பட்டது.
மற்றொன்று பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புதான் அனைத்து பெரு நிறுவனங்களும் மென்பொருள் துறைக்கு தங்களை மாற்றிக்கொள்வதில் தீவிர ஆர்வம் காட்டினர். அதனால் அத்துறையில் வேலை வாய்ப்பு பெருகியது. இன்றும் கூட மென் துறையின் தேவை இருந்தாலும் இன்றைய மேம்பட்ட தொழில்நுட்பத்தின் காரணமாக மனித வள ஆற்றல் குறைவாகவே போதுமானது. இன்று நிலைமை மாறிவிட்டது. அனைவரும் பெரும்பாலும் கணினி, இணையம் போன்றவற்றில் அடிப்படை அறிவினை பெற்றுவிட்டார்கள். அதனால் மிகப்பெரிய விஷயமாக மென்பொருள் துறையைப் பார்த்து செலவு செய்ய தயாராக எந்த நிறுவனமும் இல்லை. ஆயிரம் பேருக்கு கூலி கொடுத்து மற்றோர் நிறுவனத்துக்கு கொடுப்பதை விட நூறு நபர்களை வேலைக்கு எடுத்து நேரடியாக மென்பொருட்களை வாங்கி நிர்வாகம் செய்து விடலாம்.
அதாவது மென்பொருள் துறையின் ஒருபுறம் மனித வளத்திற்கான தேவை குறைந்து வருகிறது, மற்றோர் புறம் மென்பொருள் பட்டப்படிப்பை முடித்தவர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். விளைவு வெளியேற்றம்.
இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படைப் புரிதல் என்னவென்றால் டிசிஎஸ் சிடிஎஸ் விப்ரோ போன்ற சேவை கம்பெனிகளில் மிகப்பெரிய அளவில் ஆட்குறைப்பினை இனி வரும் காலங்களில் தவிர்க்க முடியாது. காரணம் இப்போதைய காலத்தில் சேவைக் கம்பெனிகள் இரண்டாம் நிலை வேலை அதாவது ஒரு தொழில்நுட்பத்தை கம்பெனிகளுக்கு ஏற்றவாறு customize செய்து கொடுக்கும் வேலையை செய்து கொடுக்கின்றனர். அவற்றுக்கான தேவை இனி வரும் காலங்களில் மென்பொருள் துறையில் குறைவு. ஏனெனில் உற்பத்தி செய்பவர்களே அவர்களுடைய client ற்கு தேவையான அனைத்தையும் செய்து தருகின்றனர். இடையில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான தேவை இப்போது உள்ள அளவு இருக்காது. அதனை உணர்ந்து நம் எதிர்காலத்திற்கு திட்டமிடுதலே இப்பிரச்சினைய தீர்ப்பதற்கான சரியான வழியாக இருக்கும் என்றே நான் கருதுகிறேன்.