மாதொருபாகன் நாவலை முன்வைத்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று அதன் விளைவாக எழுத்தாளர் பெருமாள் முருகன் தன் எழுத்துக்களை திரும்பப் பெற்று விட்டார். இனிமேல் தான் எழுதப்போவதில்லை எனவும் தான் எழுதிய அனைத்து நாவல்களையும் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் அறிவித்து விட்டார். எதிர்ப்பாளர்கள் மறுப்பை வெளிப்படுத்திய விதம் முற்றிலும் தவறு. இதில் மாற்றுக்கருத்து கிடையாது.
எதிர்ப்பாளர்கள், மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் சொன்னபடி பதிலுக்கு ஒரு மறு நாவலையோ அல்லது விளக்கவுரையோ எழுதி கடுமையாக எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கலாம். அதனைவிடுத்து மூன்றாம் தர எதிர்ப்பை காட்டத் தொடங்கியதால் இன்று இது மிகப்பெரும் பூதாகரமாகி உலகம் கவனிக்கும் செய்தியாகி விட்டது.
அரசு அவரது புத்தகங்களை தடை செய்யாமல் இருக்கிறது என்று எதிர்ப்பாளர்களும்,எதிர்ப்பாளர்களை அரசு முற்றிலுமாக ஒடுக்காமல் விட்டு விட்டது என எழுத்தாளர்களும் அரசைக் குற்றஞ்சாட்டுகின்றனர். இதில் அரசின் தற்போதைய நிலையே சரியென எனக்குப்படுகிறது. ஏனெனில் எழுத்தாளர்கள் உலகை தங்களை நோக்கி, புது யுகத்தை நோக்கி விரைவாக இழுக்கிறார்கள். மற்றோர் புற மக்கள் தத்தம் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் காக்கப்படவேண்டுமென தங்கள் பக்கம் இழுக்கிறார்கள். ஆனால் அரசாங்கம் இவர்கள் இருவரையும் போன்று ஒற்றைத்தன்மையான நிலையை எடுக்க இயலாது. குடிகளைப் பாதுகாப்பதுவே அரசின் முதல் கடமை. ஏனெனில் ஒரு அரசாங்கம் ஒரு எழுத்தாளனைப்போல் அதீத அளவில் புதிய முயற்சிகளை மேற்கொள்ள இயலாது. நல்ல நோக்கம் கருதியே கூட ஒரு புது முயற்சி செய்யினும் அது பிழையாகப் போகுமெனின் அவ்வரசின் கீழுள்ள அனைவரையும் பாதிக்கும். அதனால் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களும் தனியேதான் முயற்சி செய்தாக வேண்டும். இதுவே இன்றைய நிலை. அதனைப் போலவே மற்றவர்களும் அவர்கள் வழி நோக்கி உலகை இழுக்கட்டும். உலகம் தனக்கான இடத்தை கண்டுகொள்ளட்டும். அந்நிலைப்புள்ளியில் வாழ்வோரை அரசு பாதுகாக்கட்டும்.