சொர்க்கத்தின் குழந்தைகள் (Children of Heaven). ஈரானியத்திரைப்படம். 1997 ல் வெளிவந்தது. மஜித் மஜித் இயக்கம். அலி, சாரா இருவரும் அண்ணன் தங்கை. மிக ஏழ்மையான குடும்பம். தந்தை வேலைக்கு செல்ல, தாய் உடல் நலமின்றி இருக்கிறார். ஒருநாள் தங்கையின் கிழிந்த ஷூவை தைத்துக்கொண்டு வரும் வழியில் அலி அதனை தவற விட்டு விடுகிறான். தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. தங்கையிடம் அதனை அம்மாவிடமும், அப்பாவிடமும் கூற வேண்டாம் எனக் கேட்கிறான்.
இரவு படிக்கும் பொழுது ரகசியமாக இருவரும் காகிதத்தில் எழுதி பேசிக்கொள்கிறார்கள். மறுநாள் எப்படி பள்ளிக்கு செல்வது என சாரா கேட்கிறாள். அவளுக்கு காலையில் பள்ளி என்பதால் தன் ஷூவை அணிந்துகொண்டு செல்லும்படியும் அவள் திரும்பி வந்தபின்னர் தான் ஷூவை அணிந்துகொண்டு செல்வதாகவும் கூறுகிறான். அது தனக்கு மிகவும் பெரியதாக இருக்கும் எனவும் அதனைப் போட்டுக்கொண்டு தன்னால் விரைவாக நடக்க முடியாது எனவும் கூறுகிறாள். அலி கெஞ்சிக் கேட்கவே சம்மதிக்கிறாள்.
அதன்படி சாரா தினமும் பள்ளி முடிந்ததும் விரைந்து ஓடி வருகிறாள். அலி வழியில் அவளுக்காக காத்து நிற்கிறான். ஷூவை மாற்றிக்கொள்கிறார்கள். இப்படியே சில நாட்கள் கடக்கிறது. அலி தினமும் பள்ளிக்கு ஓடுகிறான். என்னதான் அலி விரைவாக ஓடினாலும் பள்ளிக்கு தாமதமாகச் செல்கிறான். முதலிரு நாட்கள் மன்னிக்கும் தலைமையாசிரியர் மூன்றாவது நாள் அவனை பெற்றோரை அழைத்து வரும்படி சொல்கிறார். தன் தந்தைக்கு தெரிந்துவிடும் எனப் பயப்பட்டு அழுகிறான். அங்கு வரும் அவனது வகுப்பு ஆசிரியர் அவன் வகுப்பில் நன்றாக படிக்கும் மாணவன் எனவும் தனக்காக அவனை மன்னிக்கும்படியும் கூறுகிறார். அலி யாரிடமும் உண்மையை கூறாமல் மறைக்கிறான். அலிக்கும் சாராவுக்கும் ஒற்றை ஷூ என்பது மிகப்பெரிய பிரச்சினையாக மாறுகிறது.
பின்னர் ஒருநாள் தன்னுடைய ஷூவை பள்ளியில் வேறோர் மாணவி அணிந்திருப்பதை சாரா பர்க்கிறாள். அண்ணனிடம் சொல்லி இருவரும் அவளைப் பின் தொடர்ந்து சொல்கிறார்கள். அங்கே அவர்கள் அம்மாணவியின் தந்தை கண் தெரியாதவராக இருப்பதைப் பார்த்துவிட்டு ஷூவைக் கேட்காமல் வந்துவிடுகிறார்கள்.
இச்சமயத்தில் அலியின் அப்பாவுக்கு அவருடைய முதலாளி ஒரு புல் வெட்டும் கருவியைத் தருகிறார். அதனைக் கொண்டு நகரத்தின் உயர்குடியினர் வாழும் பகுதிக்கு வேலை தேடி தந்தையோடு விடுமுறை நாளில் செல்கிறான் அலி. அங்கே தோட்ட வேலை செய்வதால் அவனுடைய அப்பாவுக்கு பணம் கிடைக்கிறது. அது அவர் ஒரு வாரம் செய்யும் வேலைக்கான கூலி எனவும், ஒரே நாளில் கிடைத்து விட்டதாகவும் கூறுகிறார். திரும்ப வரும்பொழுது அலியிடம் என்ன வேண்டுமெனக் கேட்கிறார். அலி தங்கைக்கு ஒரு புது ஷூ வாங்கலாம் என்று கூறுகிறான். ஆனால் திடீரென்று அவர்கள் சைக்கிள் ப்ரேக் பிடிக்காமல் அவர்கள் விழுந்து விடுகிறார்கள். மருத்துவமனையில் அனைத்து பணமும் செலவாகி விடுகிறது.
மற்றோர் நாள் பள்ளியில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் ஒன்றிற்கான அறிவிப்பு வெளியாகிறது. தன்னிடம் நல்ல ஷூ இல்லாததால் அதில் கலந்து கொள்ளாமல் போகும் அலி, பின்னர் அதில் இரண்டாம் இடம் பெற்றால் பரிசு ஷூ எனத் தெரிந்ததும் கலந்து கொள்கிறான். தன் தங்கையிடம் தான் அதில் வெற்றி பெற்று விடுவேன் என்றும் அதனைக் கடையில் கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக சாராவுக்கு ஒரு ஷூ வாங்கித் தருவதாகவும் சொல்கிறான். ஆனால் அவன் முதலாவதாக வந்து விடுகிறான். தனக்கு இரண்டாம் இடம் கிடைக்கவில்லை என்றதும் அழுகிறான் அலி.
வீட்டிற்கு வரும் அலி தன் தங்கையிடம் தன்னால் இரண்டாம் இடத்திற்கு வர முடியவில்லை எனக் கூறுகிறான். சாரா என்ன சொல்வதென்று புரியாமல் விழிக்கிறாள். அதற்குள் அம்மா அழைக்கவே ஓடிப்போகிறாள். வருத்தத்தோடு அலி அமர்கிறான். அதே சமயத்தில் அலியின் அப்பா அலி கூறியதை நினைவில் வைத்திருந்து இருவருக்காகவும் புது ஷூக்களை வாங்குகிறார். அத்தோடு படம் நிறைவைடைகிறது.
மீண்டும் உண்மைக்கு அருகில் ஒரு திரைப்படம். இந்த திரைப்படம் இயல்பாக இருக்கவேண்டும் என்பதற்காக மக்களுக்குத் தெரியாமல் படம் பிடிக்கப்பட்டது. ஒண்ணரை மணி நேரம் திரைப்படம். முதல் காட்சி முதல் கடைசி காட்சி வரை அத்துனை இயல்பு. அலியாக நடித்திருக்கும் ஆமீர் ஃபரூக் ஹாசிமியனும், சாராவாக நடித்திருக்கும் ஃபகாரே சித்திகிவும் ஆகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சாரா தன்னுடைய ஷூவை இன்னொரு மாணவி அணிந்திருப்பதைப் பார்த்ததும் அடுத்த இடைவேளைகளில் அனைவருடைய கால்களையும் பார்த்துக் கொண்டே செல்லும் காட்சி, சாரா தாமதமாக வந்த பின்னர் அலி திட்டும் பொழுது உன்னால் தான் இதெல்லாம் நான் அம்மாவிடம் சொல்லப் போகிறேன் என்று சொல்லும் சாராவிடம் “போய் சொல்லு அவங்களாலே வாங்கித்தர முடியாது பாவம்!” என அப்பா அம்மாவுக்காக அலி பேசும் காட்சி என் பெரும்பாலும் மனதை நெருட வைக்கும் காட்சிகள். அருமையான ஒரு பதிவு.