மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம். மீண்டும் வெண்முகில் நகருக்கு வந்து விட்டேன். ஆம் சில மாதங்களுக்கு முன்னர் வண்ணக்கடல் படிக்கும்போது தினமும் வாசிப்பதனைவிட ஒரே மூச்சாக ஒவ்வொரு புத்தகமாக வெளிவரும்பொழுது வாசிக்கலாம் என்ற எண்ணத்தை அடைந்தேன். அதன் காரணமாக தினசரி வாசிப்பை வெண்முரசில் இருந்து வேறு சில புத்தகங்களுக்கு மாற்றினேன். அதே சமயம் வெண்முரசு அல்லாத தங்களின் பதிவுகளையும், மற்ற புத்தகங்களையும் தொடர்ந்து வாசித்துக்கொண்டே இருந்தேன். மாதங்கள் கடந்தன.
முதற்கனல், மழைப்பாடலின் வாசிப்பின் விளைவாக மென்பொருள் துறையில் மிக ஆழமான இடத்தில் வேலை செய்யக்கூடிய இடத்தில் இந்த வாசிப்பனுவத்தின் விளைவாக மிகச் சரியான அல்லது முந்திய எனது சொற்களுக்கு மேலான சொற்களை சமைத்து பேசுவதை இயல்பாக்கிக் கொண்டேன் என்னை அறியாமலே. தினசரி வெண்முரசு வாசிப்பை நிறுத்திய இந்த சில மாதங்களில் அது போல சரியான வார்த்தைகளைக் கொண்டு சரியான தொடர்களை அமைக்கும் வல்லமை குறைந்தது போல உணரத்தொடங்கினேன். காரணத்தை திரும்பத்திரும்ப சிந்திக்க அது வெண்முரசு எனத் தெரிந்தது.
முன்பொருமுறை நீங்கள் வெண்முரசுவின் தினசரி வாசிப்பும் முக்கியமானது, புத்தக வாசிப்பும் முக்கியமானது எனக் கூறியிருந்தீர்கள். அப்பொழுது அதன் மீது எனக்கு உடன்பாடு எட்டவில்லை. ஆனால் இப்போது உண்மையாகவே கூறுகிறேன். வெண்முரசு நிகழ்காலத்தின் குரல், எனக்கான செய்தி, அறம். வரும் ஒவ்வொரு பாத்திரமும் ஏதோ எனக்கான ஒரு செய்தியை உரைக்கிறது, இன்றைய விறலி உட்பட. என்னுடைய தினசரி வாழ்வினை மகிழ்ச்சியானதாக்க, மிகச்சிறந்த வார்த்தைகளை அமைக்க அது எனக்கு தினமும் உதவுகிறது. மீண்டும் என்னுடைய தினசரித் திட்டத்தில் வெண்முரசை இணைத்து விட்டேன். இம்முறை நான் இருவனாக, ஒருவன் வண்ணக்கடலில் விடுபட்ட அத்தியாயத்திலிருந்து, மற்றொருவன் இங்கே வெண்முகில் நகரிலிருந்து. ஒருநாள் இருவரையும் ஒன்றாக்கி விடுவேன். நான் சோம்பேறித்தனத்தால் தினசரி வாசிப்பை நிறுத்தவில்லை. திட்டமிட்டே நிறுத்தினேன். அதனால் என்னால் கண்டிப்பாக மீண்டும் விடுபட்ட அனைத்தையும் வாசிக்க முடியும் என்றே எண்ணுகிறேன்.
ஒரு தொழில்நுட்பத்தின் சரியான பயன் அதனைப் பற்றி முற்றிலும் அறிதலில்லாத ஒருவருக்கும் உபயோகப்படவேண்டும் என்பதே என்று எங்கோ படித்த நியாபகம். ஆனால் எனக்கு வெண்முரசு மேனேஜ்மென்ட் மீட்டிங்கில் என்னை சிறப்பாக வழி நடத்துகிறது. தங்களுக்கு உளமாற நன்றி.