எனது இந்தியா! (உப்பு வேலி ) – எஸ். ராமகிருஷ்ணன்

எனது இந்தியா! (உப்பு வேலி ) – எஸ். ராமகிருஷ்ணன்

Uppu

பெர்லின் சுவரைவிட, சீனப் பெருஞ்சுவரைவிட மிகப் பெரிய முள் வேலி ஒன்று இந்தியாவின் குறுக்காக அமைக்கப்பட்ட கதை அறிவீர்களா? 4,000 கி.மீ நீளமும் 12 அடி உயரமும் கொண்டது அந்த வேலி. வரலாற்றின் இருட்டுக்குள் புதையுண்டு போயிருந்த இந்தியாவின் நீண்ட முள் வேலி ஒன்று சமீபத்தில் உலகின் கவனத்துக்குள் வந்திருக்கிறது. இது தெரியாது. The Great Hedge of India என்ற, ராய் மார்க்ஸ்ஹாமின் மகத்தான ‘சுங்க வேலி’ எனும் புத்தகம் இந்திய வரலாற்றியல் ஆய்வில் மிக முக்கியமான ஒன்று.

இந்தியாவை ஆண்ட வெள்ளை அரசின் கொடுங்கோன்மைக்கு சாட்சியாக உள்ள இந்த மாபெரும் சுங்க வேலியைப் பற்றி, 2001-ம் ராய் மார்க்ஸ்ஹாம் ஆராய்ந்து எழுதும் வரை, இந்திய வரலாற்றியல் அறிஞர்களுக்கேகூட காந்தி ஏன் உப்புச் சத்தியாக்கிரகத்தை நடத்தினார் என்பதற்கு இன்று வரை எவ்வளவோ காரணங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன. ஆனால், இந்த ஒரு புத்தகம் காந்தியின் செயல்பாட்டுக்குப் பின்னுள்ள வரலாற்றுக் காரணத்தை தெள்ளத்தெளிவாக எடுத்துச் சொல்கிறது.பிரிட்டிஷ்காரர்களால் இந்தியா எந்த அளவுக்குச் சுரண்டப்பட்டது என்பதற்கு, இந்த நூல் மறுக்க முடியாத சாட்சி. ஒரிசாவில் தொடங்கி இமயமலை வரை நீண்டு சென்ற இந்த முள் தடுப்பு வேலி எதற்காக உருவாக்கப்பட்டது தெரியுமா?இந்தியாவுக்குள் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு உப்பு கொண்டு செல்லப்படக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட தடுப்பு வேலிதான் இது. இப்படி, வேலி அமைத்து உப்பு வணிகத்தை தடுக்கக் காரணம், பிரிட்டிஷ் காலனிய ஆட்சி… உப்புக்கு விதித்திருந்த வரி.

waren_hasting

வங்காளத்தைத் தனது பிடியில் வைத்திருந்த கிழக்கிந்தியக் கம்பெனி, உப்புக்கு வரி விதித்தால், கொள்ளை கொள்ளையாகப் பணம் சம்பாதிக்கலாம் என்று திட்டமிட்டது. சந்திரகுப்தர் காலத்திலேயே உப்புக்கு வரி விதிப்பது நடைமுறையில் இருந்திருக்கிறது. கௌடில் யரின் அர்த்தசாஸ்திரம், உப்புக்குத் தனி வரி விதிக்க வேண்டும் என்பதையும், உப்பு வணிகத்தைக் கண்காணிக்கத் தனி அதிகாரி நியமிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் உப்பின் பயன்பாடு பற்றிக் குறிப்பிடும் பேராசிரியர் தொ.பரமசிவன், ‘உப்பு விற்பவர்களை சங்க இலக்கியத்தில் உமணர்கள் என்று அழைக்கிறார்கள். நெல்லின் நேரே வெண் கல் உப்பு என, உப்பு விலையும் நெல் விலையும் சமமாக இருந்திருக்கிறது. சோழர் காலத்தில் நெல்லின் விலையும் உப்பு விலையும் அருகருகே இருந்தன. பழந்தமிழ் நாட்டின் மிகப் பெரிய சந்தைக்குரிய உற்பத்திப் பொரு ளாக உப்புதான் விளங்கியிருக்கிறது. உப்பு விளையும் களத்துக்கு அளம் என்று பெயர். பெரிய உப்பளங்களுக்கு அரசர்களின் பட்டப் பெயர்களைச் சூட்டியிருக்கிறார்கள். பேரளம், கோவளம் (கோ அளம்) என்ற பெயர்களில் வழங்கப்பட்டுள்ளன. சோழ, பாண்டிய அரசர்கள் உப்புத் தொழிலை அரசின் கட்டுக்குள்ளேயே வைத்திருந்தார்கள் என்கிறார்.

அதுபோலவே, சென்னை ராஜதானியின் உப்பு கமிஷன் ஆண்டு அறிக்கை வாசிக்கையில்,மொகலாயர்கள் காலத்தில் உப்புக்கு வரி விதிக்கும் முறை இருந்தது தெரிய வருகிறது. ஆனால், அந்த வரி மிகச் சொற்பமானது. ஒரு மூட்டை உப்புக்கு இந்து வணிகராக இருந்தால் 5 சதவீதம் வரியும், இஸ்லாமியராக இருந்தால் 2.5 சதவீத வரியும் விதிக்கப்பட்டது.756-ல் நவாப்பை தனது கைப்பாவையாக மாற்றிக் கொண்ட காலனிய அரசு, உப்பு மீதான தங்களது ஏகபோக உரிமையைக் கைப்பற்ற முயற்சித்தது. குறிப் பாக, பிளாசி யுத்தத்துக்குப் பிறகு, வங்காளத்தில் உள்ள மொத்த உப்பு வணிகத்தையும் கிழக்கிந்தியக் கம்பெனி தனது நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி எடுத்தது. இந்தியாவின் மையப் பகுதியான உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் வட கிழக்கு மாநிலங்கள், இமயமலை சார்ந்த நிலவெளி ஆகிய அனைத்துப் பகுதிகளும் தங்களது உப்புத் தேவைக்கு, தென்பகுதி கடலோரங்களையே நம்பி இருந்தன. இந்தியாவில் உப்பு அதிகம் விளைவது குஜராத்தில். இன்றும் அதுதான் உப்பு விளைச்சலில் முதல் இடத்தில் இருக்கிறது. பெரும்பாலான வட மாநிலங்களுக்கு குஜராத்தில் இருந்தே உப்பு சென்றது. உப்பு வணிகம் குஜராத்தில் பராம் பரியமாக நடைபெற்று வருகிறது. உப்பு காய்ச்சப்பட்ட பாரம்பரிய இடங்களில் ஒன்றுதான் காந்தி உப்புச் சத்தியாக்கிரகம் நடத்திய தண்டி. தண்டி என்பது கலங்கரை விளக்கத்தைக் குறிக்கும் சொல். இது ஒரு பாரம்பரிய உப்பளப் பகுதி. அது போல, குஜராத்தில் நிறைய உப்பளங்கள் இருக் கின்றன. குஜராத் போலவே ஒரிசா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களிலும் உப்பு விளைச்சல் அதிகம். வங்காளத்தில் கிடைக்கும் உப்பு, நெருப்பில் காய்ச்சி எடுக்கப்படுவது. அது தரமற்றது என்று அந்த உப்புக்கு மாற்றாக வங்காளிகள் சூரிய ஒளியில் விளைந்த ஒரிசா உப்பையே விலைக்கு வாங்கிப் பயன்படுத்தினார்கள்.

வங்காளத்தை நிர்வகித்து வந்த வாரன் ஹேஸ்டிங், ஒரிசாவில் இருந்து வங்கத்துக்குக் கொண்டுவரப்படும் உப்புக்கு கூடுதல் வரி விதித்ததுடன், அரசிடம் மட்டுமே உப்பை விற்க வேண்டும் என்ற புதிய நிபந்தனையையும் விதித்தார். அதாவது, ஒரு மூட்டை உப்புக்கு இரண்டு ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டது. அதில், ஒன்றரை ரூபாயை வரியாக கிழக்கிந்தியக் கம்பெனி பிடுங்கிக்கொண்டது. இதனால், உப்பு காய்ச்சுபவர்களும் உப்பு வாங்குபவர்களும் பாதிக்கப் பட்டார்கள்.உப்பளங்களைக் கண்காணிக்கவும் அரசிடம் மட்டுமே உப்பு விற்பனை செய்ய வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்தவும், சால்ட் இன்ஸ்பெக் டர்கள் நியமிக்கப்பட்டனர். கூடுதலாக உப்பை அரசுக்கு வாங்கித் தரும் துணை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. இதன் வழியே, கம்பெனி லட்சக் கணக்கில் பணத்தை வாரிக் குவிக்கத் தொடங்கியது. 1784-85ம் ஆண்டுக்கான உப்பு வரியில் கிடைத்த வருமானம் 62,57,470 ரூபாய்.இந்தக் கொள்ளையால் அதிக ஆதாயம் அடைந்த கிழக்கிந்தியக் கம்பெனி, இந்தியா முழுவதும் உப்பு வணிகம் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும் என்று முடிவு செய்தது. அதற்காக, உப்பு கொண்டுசெல்லப்படும் வழிகள் அடையாளம் காணப்பட்டன. அதன் ஊடாகத் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, ஆங்காங்கே சுங்கச் சாவடிகள் உருவாக்கப்பட்டு, உப்பு கொண்டுசெல்வது கண்காணிக்கப்பட்டது.

உப்பு, இன்றியமையாத பொருள் என்ப தால் உழைக்கும் மக்கள் எவ்வளவு பணம் கொடுத்தாவது உப்பை வாங்குவார்கள் என்ற கிழக்கிந்தியக் கம்பெனியின் பேராசை பலிக்கத் தொடங்கியது. ஒரு தொழிலாளி உப்புக்காக மாதந்தோறும் இரண்டு ரூபாய் செலவழிக்க வேண்டிய நிர்பந்தம் உருவானது. அந்தப் பணம் அவனது ஒரு மாத சம்பளத்தைவிட அதிகம். 50 பைசா பெறுமான உப்பு, ஒரு ரூபாய் வரியோடு சேர்த்து விற்கப்பட்ட கொடுமையை வெள்ளை அரசு நடைமுறைப்படுத்தியது.உப்பு கொண்டுசெல்வதைத் தடுக்கும் நடவடிக் கைகளுக்கு எதிராக நாடோடி இன மக்களான உப்புக் குறவர்களும், தெலுங்கு பேசும் எருகுலரும், கொரச்சர்களும் உப்பைக் கடத்தி விற்க முற்பட்டார்கள். அதை, கடத்தல் என்று சொல்வதுகூட தவறுதான். தங்கள் பாரம்பரியமான தொழிலைத் தடையை மீறி செய்தார்கள் என்பதே சரி.உப்பு வணிகம் செய்வது தங்களது வேலை, அதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது என்று சவால்விட்ட நாடோடி இன மக்களை ஒடுக்கு வதற்காக, அந்த இனத்தையே குற்றப்பரம்பரை என்று அடையாளப்படுத்தி, கைது செய்து சிறையில் அடைக்க அரசு முயற்சி செய்தது.தலைச் சுமை அளவு உப்பு விற்ற உப்புக் குறவர்கள் ஒரு பக்கம் என்றால், உப்பளத்தில் இருந்து நேரடி யாக உப்பு வாங்கி, வண்டிகளிலும் கோவேறுக் கழுதைகளிலும் ஏற்றிச் சென்று, லம்பாடிகளும் பஞ்ஞாராக்களும் காலனியக் கட்டுப்பாடுகளை மீறி உப்பைப் பிற மாகாணங்களில் விற்றார்கள். பண்டமாற்று செய்துகொண்டார்கள். அவர்களைத் தடுக்க வன்முறையை ஏவிவிட்டதோடு, அவர்களை திருடர்கள் எனவும் குற்றம் சாட்டியது பிரிட்டிஷ் அரசு.

உப்பு வணிகத்தைத் தங்கள் கைகளுக்குள் கொண்டுவர வேண்டும் என்றால், மாபெரும் முள் தடுப்பு வேலி ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற திட்டம் அப்போதுதான் தீட்டப்பட்டது. இந்த வேலி, ஒரிசாவில் தொடங்கி இமயமலையின் நேபாள எல்லை வரை நீண்டு செல்வதற்காக வரைபடங்கள் உருவாக்கப்பட்டன. 1823-ல் ஆக்ராவின் சுங்க வரித் துறை இயக்குநர் ஜார்ஜ் சாண்டர்ஸ், இதற்கான ஆரம்பப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினார். ஒரிசாவின் சோனப்பூரில் தொடங்கிய இந்தத் தடுப்பு வேலி, மெள்ள நீண்டு கங்கை, யமுனை நதிக் கரைகளைக் கடந்து சென்று அலகாபாத் வரை போடப்பட்டது. அந்த நாட்களில் இந்த வேலி மூங்கில் தடுப்பு ஒன்றால் அமைக்கப்பட்டு இருந்தது. அதைக் கடந்து செல்ல முடியாதபடி பெரும் பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. 1834-ல் சுங்கவரித்துறை இயக்குநராக வந்த ஜி.எச்.ஸ்மித், இந்தத் தடுப்பு வேலியை அலகாபாத்தில் இருந்து நேபாளம் வரை நீட்டிக்கும் பணியைச் செய்தார்.

நன்றி: எஸ்.ராமகிருஷ்ணன்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.