நன்றி: ஜெயமோகன்
http://www.jeyamohan.in/2847#.VTh_KyGqqko
பொய்யை திருப்பித்திருப்பிச் சொன்னால் அது உண்மையாகிவிடுகிறது என்பது இந்த உலகில் பல உண்மைகள் புழங்குவதிலிருந்து தெரிகிறது. இந்தப்பாதையில் பொய் கிட்டத்தட்ட உண்மையாக ஆகி நிற்கும் ஒரு பரிணாமப் படிநிலையை விளம்பரம் என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்கள். இப்பிரபஞ்சத்தில் எல்லாமே மூன்றுவகை இருப்புநிலைகள் கோண்டவை. இகம்,பரம்,விளம்பரம். நம்மிடம் இருப்பவை இகம். இல்லாதவை பரம். இருக்க நாம் ஆசைப்படுவையே விளம்பரம்.
எத்தனை முறைதிருப்பிச்சொன்னால் ஒரு பொய் விளம்பரமாக ஆகும் என்பதற்கு ஒரு கணக்கு இருக்கிறது. ‘அளக்கிறான் பயல்’ என்று கேட்பவர் நினைப்பதுதான் பொய். ”என்ன இது திருப்பித்திருப்பிச் சொல்றானே” என்று கேட்பவர் எண்ணும் போது அது விளம்பரமாக ஆகிவிட்டிருக்கிறது. ”அய்யோ அய்யோ…போதும்யா நிப்பாட்டு…கொல்லாதே” என்று கேட்பவர் கதறும்போது அது உண்மை ஆக வளர்சிதைமாற்றம் அடைந்திருக்கிறது.
விளம்பரம் என்பது தொன்மைக்காலம் தொட்டே இருந்துவந்திருக்கிறது. அப்போதெல்லாம் விளம்பர முகவர்கள் நேரடியாக நுகர்வோரை தேடிச்சென்று விளம்பரம் செய்தார்கள். உதாரணமாக ஞானப்பழத்தைக் கொண்டு சென்று ஈசன் குடும்பத்தில் விற்ற நாரதரை சொல்லலாம். மலைமீது ஏசு தியானத்தில் இருந்தபோது வந்து நின்று ஈரேழுபதிநான்கு உலகங்களின் அருமைகளைப்பற்றிப் பேசிய லூஸி·பரையும் சிறந்த விளம்பர முகவராகக் கொள்ளலாம்.
விளம்பரத்தில் ஐந்து வகை இருக்கிறது. ஒரு பொருளில் உள்ள சிறப்புகளை நம்பும்படியாக எடுத்துச் எடுத்துச்சொல்லி விளம்பரம் செய்வது. ”நம்புறாப்லதான் இருக்கூ…” என நுகர்வோர் தயங்குமிடத்தில் விளம்பரம் வெற்றிபெறுகிறது. தொலைக்காட்சிப்பெட்டியின் திரை ஐஸ்வரியா ராயின் இடுப்பைப்போல் இருப்பதாகச் சொல்லும் விளம்பரம் இதற்கு உதாரணம்.
இரண்டாவது வகை, ஒரு பொருளில் இல்லாத அருமைபெருமைகளை கொஞ்சம்கூட நம்ப முடியாதபடி எடுத்துரைப்பது. ஒரு ஆ·ப்டர்ஷேவ் கிரீமை பயன்படுத்தினால் பெண்கள் கொக்கிபோடப்பட்டவர்களைப்போல பின்னால்வருவார்கள் என்னும் விளம்பரம் உதாரணம். ”யோவ்…என்னய்யா இதெல்லாம்!” என்று நுகர்வோர் அலறிக் கூவும்போது விளம்பரம் வெற்றிபெறுகிறது. குறிப்பிட்ட சோப் அல்லாததை பயன்படுத்தி தன் மகள் கற்பிழக்கக் கூடுமென பதறியபடி தெருவில் ஓடும் தாய் இன்னொரு உதாரணம்.
மூன்றாம் வகை விளம்பரம் பொருளின் தீமையைப் பற்றி எடுத்துச் சொல்வது. அதற்குச் சிறந்த உதாரணம் ஒனிடா தொலைக்காட்சிப்பெட்டி விளம்பரம்தான். சும்மா தட்டினாலே திரை உடைந்துவிடும் என்பதைச் சொல்லியே ‘அதையும் தான் பாப்பமே’ என்ற உரிமையாளர்களின் அகங்காரத்தைத் தூண்டி வெற்றிபெற்றது அந்த விளம்பரம். அதற்கு கருத்தூக்கமளித்த முதல் விளம்பரத்தை கடவுளே செய்தார் என்கிறார்கள். ஏவாளிடம் ஏடன் தோட்டத்து ஆப்பிளை எக்காரணத்தாலும் ‘திங்கப்படாது’ என்று சொன்னபின் அந்தப்பக்கமாகப்போய் அவர் கண்ணடித்ததைப் பார்த்தவர்கள் இருக்கிறார்கள்.
நான்காம் வகை விளம்பரம் பொருளுடன் எந்த சம்பந்தமும் இல்லாத விஷயங்களைச் சொல்வது. பட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால் கொட்டைப்பாக்கு காசுக்கு எட்டு என்பது இதன் சூத்திரம். ஒரு பெண் ஒருவனைக் காதலிக்கிறாள். ஆகவே அந்தக் காப்பி சுவையானது. ஒரு பையன் ஐஸ்கிரீம் சாப்பிடுகிறான். ஆகவே அந்த சோப் நல்ல சோப். இப்படி கற்பனையைத்தூண்டும் தொடர்பில்லாமைகளை விளம்பரமாக பயன்படுத்தலாம்.
ஐந்தாம் வகை விளம்பரமே நேரடியானது, தொன்றுதொட்டு வருவது. விற்பவரே நாத்தடிக்கக் கூவி விற்பது. தருமபுரி மாவட்டத்தில் சாலையில் ”செமென் வேணுமா செமென்? அம்மா செமென் வேணுமா?” என்று ஒரு கட்டுமஸ்தான ஆசாமி சைக்கிளில் கூவிக்கொண்டு சென்றான்.கோலம்போடுவதற்குரிய செம்மண்ணைத்தான் சலித்து கோணியில் கட்டி கொண்டுசென்று விற்கிறான் என அறிவதற்குள் நான் அறிவியல் வளர்ச்சியை நினைத்து இறும்பூது எய்தியிருக்கக் கூடாதுதான். ”மூளையிருக்கா?” என்று கேட்பதுபோல முளைக்கீரே என்று கத்துவது. ”அப்றம்?’ என்று அப்பளவிற்பனைக்காரர் தெருவில் உறுமிக்கொண்டு செல்வது எல்லாம் இவ்வகைப்படும்.
இதையே திநகர் கடைகளில் சிறப்பாக பயன்படுத்துகிறார்கள். ஜெயச்சந்திரன் விமானத்தை தவறவிட்டு அழைக்கப்படுவது போல நொடிக்கு இருபதுமுறை ஜெயச்சந்திரன், ஜெயச்சந்திரன், ஜெயச்சந்திரன் என்று கூப்பாடுபோடும் விளம்பரம். ”வாய் மணக்க நிஜாம் பார்க்கு. பல்கறுக்க நிஜாம் பார்க்கு செம்புள்ளிபோட நிஜாம் பார்க்கு” என்று கூச்சலிடுவது இன்னொரு உதாரணம்.
விளம்பரங்களில் இதுவே ஆக வெற்றிகரமான வழிமுறை என்பதை நிரூபித்தது கோபால் பல்பொடி. தினமும் இலங்கை வானொலியில் பன்னிரண்டாயிரத்தி நாநூறு முறை கோபால்பல்பொடி என்று கூவிக்கூவி பெரும்பாலானவர்கள் மனதில் பல்பொடி என்னும் சொல்லுடன் கோபாலும் இணைந்து விட்டது. இதை எல்கெஜிவிளைவு என்று விளம்பரத்துறையில் சொல்கிறார்கள். எல்கேஜியில் குழந்தை ‘அமர்ந்து’விட்டதென்றால் அதன் பின் ”அம்மா எனக்கு ஒரு ஏ ·பார் ஆப்பிள் வேணும்” என்றுதான் கேட்கும்.
கோபால்பல்பொடியின் விளைவுகள் அழுத்தமான பண்பாட்டு மாற்றங்களை தென்மாவட்டங்களில் கொண்டுவந்திருக்கின்றன.கோபால்கள் எல்லாமே பல்பொடி என்று அழைக்கப்பட்டார்கள். அதேபோல ஆற்றோர கடையில்போய் ஒரு கோபால் என்றால் பல்பொடிப்பொட்டலம் கிடைக்கும். செங்கல்தூளை நுகர்பொருளாக்க முடியுமென்றால் எதையுமே எதுவாகவும் ஆக்க விளம்பரத்தால் முடியுமென நிரூபித்தது அந்த விளம்பரம்.
சிலப்பதிகாரத்திலேயே விளம்பரத்துக்கு பாலியல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆய்ச்சியர் வாளிப்பான பெண்களாக இல்லாமலிருந்தால் மதுரையம்பதி மாந்தர் பால்தயிர்வெண்ணை வாங்கியிருப்பார்களா என்ன? இன்றுவரை இந்த விஷயம் தொடர்கிறது. சம்பந்தப்பட பெண்ணின் தொப்புள் நன்றாக இருக்கிறது என்பதற்காக நாம் பேரீச்சைப்பழ தேனை வாங்கி பிள்ளைகளுக்குக் கொடுத்துக்கொண்டுதானே இருக்கிறோம்?
நடிகர்களை விட்டு வருமானவரி கட்டச்சொல்லும் விளம்பரத்தைக் கண்டு ஊக்கம்பெற்று திருடர் ஒருவரே தோன்றி வெளியூர் செல்லும் போது வீட்டைப்பூட்டி தகவலை பக்கத்து போலீஸ் ஸ்டேஷனில் சொல்லிவிட்டுப் போங்கள் என்று அறிவுறுத்தும் விளம்பரம் ஒன்றை தயாரிக்க சென்னை போலீஸ் துணைக்கமிஷனர் முயன்றதாகச் சொல்லப்படுகிறது. போலீஸே போதும், திருடன் எதற்கு என்று கமிஷனர் சொல்லிவிட்டாராம்.
விளம்பரம் பண்பாட்டுக்கூறுகளுடன் நுட்பமாக உரையாடுகிறது. அதை கவனித்து அறியும் விளம்பரநிபுணர்கள் வெற்றி பெறுகிறார்கள். உதாரணமாக பிவிசி பைப்புகள் விற்பனைக்கான விளம்பரம் ஒன்றில் அந்தபைப்பின் வழியாக தண்ணீர் கொட்டோ கொட்டென்று கொட்டுவதுபோல காட்டி கொங்கு மண்டலத்தில் வெற்றிபெற்றார்கள். அவ்விளம்பரம் மதுரை வட்டாரத்தில் எடுபடவில்லை. அதே பிவிசி பைப்பை சிலம்பாகச் சுழற்றியபடி வந்த ஒரு மீசைக்காரச் சண்டியர் ஒயிலாக நின்று ”உறுதியானது” என்று சொன்னபோது தீயாகப் பற்றிக்கொண்டது என்பது வரலாறு.
இசைத்தமிழ் வசைத்தமிழ், நாடகத்தமிழ், இயல்தமிழ், அயல்தமிழ் என பலவகைகள் தமிழில் இருப்பதைப்போல விளம்பரத்தமிழும் தனியாக உள்ளது. இந்தத்தமிழ் அதற்கே உரிய மந்திர அமைப்பு கொண்டது. ஓம், நமஹ போன்ற முன் பின் இணைப்புச்சொற்கள் மூலமே நான் வரிகளை மந்திரமாக ஆக்குகிறோம். அதேபோல ‘இப்போது’, ‘புதிய’ போன்ற சொற்கள் விளம்பரச்சொற்றொடர்களை உருவாக்குகின்றன. ‘நறுமணம் மிக்க அகல்யா மஞ்சள் தூள்’ என்னும் சொற்றொடரை ”இப்போது புதிய நறுமணம் மிக்க அகல்யா மஞ்சள் தூள்” என்று மாற்றும்போது விளம்பரச்சுவை மிகுந்திருப்பதை நீங்களே உணர்வீர்கள்.
இதைத்தவிர இன்னும் பல சிறப்புகளும் விளம்பரத்தமிழுக்கு உண்டு. எழுவாய் பயனிலை அமைப்பில் அவற்றுக்கே உரிய தனித்தன்மைக¨ளைக் காணலாம். ‘இப்போது புதிய ஹமாம் நறுமணம் உங்கள் கைகளே!’ என்னும் வரியின் சொல்லிணைவுகளின் சாத்தியங்களை அறிந்தாலொழிய நல்ல விளம்பரவரிகளை எழுதமுடியாது ”இப்போது, நிர்மா, பாடுங்கள் தூயவெண்மை அதிக பளிச் பாரினிலே” போன்ற சொற்றொடர்களை நாம் தேன்சிட்டு வகையைச்சேர்ந்தவை என்று சொல்லலாம். முன்னாலும் பின்னாலும் குப்புறவும் அப்புறவும் பறக்க அவற்றால் இயலும்.
விளம்பரங்களை எளிய மக்கள் பல்லாயிரம் கோணங்களில் புரிந்துகொள்கிறார்கள். லியோ காப்பி ஆண்கள் சமைக்கும் வீடுகளுக்கு மட்டும் உரியது என்று எண்ணிய ஒருவரை எனக்குத்தெரியும். சன்ரைஸ் காபியை தனக்கு கணவர் போட்டுத்தரவில்லை என்று மனஸ்தாபம் கொண்ட ஒரு மனைவியைப்பற்றி கேள்விப்பட்டிருகிறேன். ஆனால் விஷ்பர் நாப்கின் மீது நீலநிறமான மையைக் கொட்டியபின் பொருத்திக்கொண்ட ஒரு கிராமத்துப் பெண்ணைப்பற்றி கேள்விப்பட்டது கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம்.
பொதுவாக மக்கள் விளம்பரங்களைக் கூர்ந்து கவனிக்கிறார்கள். உட்வர்ட்ஸ் கிரைப் வாட்டர் குடும்பத்தில் ‘நீ சின்னக்குழந்தையாக இருக்கறச்சே அதான் குடுத்தேன்” என்று சொல்லும் பாட்டிவரிசையில் அத்தனைபேரும் பெண் வீட்டில் அமர்ந்து தின்பது நியாயமா என்று ஒரு மாமா என்னிடம் கவலையுடன் கேட்டார். நானும் ‘அதானே’ என்று கவலையுடன் எண்ணிக்கொண்டேன்.
விளம்பரங்கள் சமூக யதார்த்தத்தின் கண்ணாடிகள் அல்ல. சமூகம்தான் விளம்பர யதார்த்தத்தின் கண்ணாடி. விளம்பரங்களில் வரும் அழகிய மனைவி அன்பான கணவன் கொழுகொழுவென்று குழந்தைகள் கொண்ட குடும்பத்தை அடைவதற்காக சமூகம் அல்லும் பகலும் பாடுபடுவதை நாம் அறிவோம். அவர்கள் கோல்கேட்டால் பல்தேய்த்து, ஹென்கோவால் துணி ஊறவைத்து, அதற்கு உஜாலா சொட்டு நீலம் போட்டு, விர்ல்பூல் வாஷிங் மெஷினில் துவைத்து அணிந்துகொண்டு, நெஸ்க·பே சன்ரைஸ் குடித்து, தேவைப்படும்போது விஸ்பர் ஒட்டிக்கொண்டு, கில்லட் டிவின்பிளேடால் ஷேவ்செய்து, ஹீரோஹோண்டாவில் போய்வந்து, மார்ட்டின் கொசுவாயுவை பொருத்தி தூங்கிவிழித்ததுமே மீண்டும் கோல்கேட்டைப் பயன்படுத்தி இலட்சியக்குடும்பவாழ்க்கையை வாழ முனைகிறார்கள்.
குழந்¨தைகள் மொழியைக் கற்றுக்கொள்ளவும் விளம்பரங்கள் உதவுகின்றன. நம் பிள்ளைகள் பள்ளியில் ஆங்கிலம் படிக்கின்றன. வீட்டில் நாம் பெரும்பாலான நேரங்களில் அவசர கைசோலியால் இருப்பதனால் அவர்களுடன் பேசுவது குறைவு. சின்னப்பிள்ளைகளாக அவை இருக்கும்போதே தொட்டிலுடன் அவற்றை தள்ளி டிவி பக்கமாக வைத்துவிடுகிறோம். ஆகவே நம் குழந்தைகள் டிவியின் மடியில் விளம்பரம் கேட்டு மொழிப்புலன் விழிக்கப்பெறுகின்றன. தாய்மொழிக்கல்வி முழுக்க முழுக்க விளம்பரத்தினால் அமைகிறது. ”தம்பி மூச்சா போனியாடா?” என்று கேட்கும் பாட்டிக்கு நம் குழந்தைகள் ”எப்பவுமே!” என்றுதானே பதில்சொல்கின்றன?
விளம்பரம் நம் காலப்பிரக்ஞையை ஒரு கட்டொழுங்குக்குள் கொண்டுவந்திருக்கிறதென்பதை நாம் இன்னமும் உணர்வதில்லை. நவீன கிறித்தவ போதகர் ஒருவர் ஆண்டவரானவர் பூமியை ஆறுநாட்களில் படைத்துவிட்டு ஏழாவது நாள் விளம்பர இடைவேளை விட்டு விட்டார் என்று மேடையில் முழங்கினாராம். பெரும்பாலான தேவாலயநிகழ்ச்சிகள் பதினைந்துநிமிடப்பேருரையும் ஐந்துநிமிட விளம்பரப்பாடல்களுமாகத்தானே செல்கின்றன?
ஆகவே பள்ளிகளில் இருபத்தைந்து நிமிடம் வகுப்பு நடத்தப்பட்டதுமே நான்கு நிமிடம் விளம்பரமும் ஒருநிமிடம் பள்ளியின் அடையாள அறிவிப்பும் முன்வைக்கபட வேண்டும். ஆசிரியர்களே விளம்பரத்தைச் சொல்லலாம். ஆடிப்பாடிச் சொல்லும் ஆசிரியர்களே கிடைப்பார்கள். அதன்மூலம் கல்வித்துறைக்கு வந்து கொட்டப்போகும் கோடிகள் இந்தியக் கல்விமுறையின் முகத்தையே மாற்றிவிடாதா என்ன?
கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் போல அதிகமாக தொலைக்காட்சியில் தோன்றும் அமைச்சர்கள் காவல் உயரதிகாரிகள் போன்றவர்கள் நெற்றியிலும் மார்பிலும் விளம்பரப்பட்டைகளை அணியலாம். அவர்களே கூட விளம்பர வாசகங்களைச் சொல்லலாம். ”நகரில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க காவல்துறை உறுதி பூண்டிருக்கிறது.பொதுமக்கள் பீதியடையவேண்டாம் என இதனால் கேட்டுக்கொள்ளப் படுகிறது. வாங்கி அணியுங்கள் ராம்ராஜ் பனியன்கள் ஜட்டிகள். சிட்டி கமிஷனர் சிவகுமார் விரும்பி அணிவது ராம்ராஜ் பனியன்கள் ஜட்டிகள்! ஆம்,.ராம்ராஜ் பனியன்கள் ஜட்டிகள்!” என்று சிட்டி கமிஷனர் சிவகுமார் பேசுவதை நாம் கேட்கும் நாள் வரத்தானே போகிறது. அதன்பின் நம்முடைய வரிச்சுமை பெரிதும் குறைய வாய்ப்பிருக்கிறது.
விளம்பரத்தில் புரட்சிகரமான மாற்றங்கள் எதிர்காலத்தில் நிகழ வாய்ப்பிருக்கிறது என்று நண்பர் ஷாஜி சொல்கிறார். புதிய வகையான ஊடகங்களைக் கண்டுபிடிக்கலாம். உதாரணமாக சென்னைநகரமெங்கும் திரியும் பசு,நாய், பன்ற் போன்ற உயிரினங்களைப் பிடித்து அவற்றின் உடலில் வண்ணத்தால் விளம்பரங்கள் வரைந்து உலவவிட்டால் எத்தனை லட்சம்பேர் திரும்ப்பத்திரும்ப பார்ப்பார்கள்? பசுவின் பின்பக்கம் புனிதமானதாகையால் ஊதுவத்தி போன்ற பூசைப்பொருட்கள் மற்றும் ஆன்மீக விஷயங்களை விளம்பரம்செய்ய உகந்தது
ஏன், நம் ஊரில் காக்காய்களைப் பிடித்து அவற்றின் கழுத்துக்களில் சிறிய விளம்பர அட்டைகளை தொங்கவிட்டால் என்ன? சென்னையில் மட்டும் குறைந்தது ஒருகோடி காக்காய்கள் இருக்காதா என்ன? அவை சென்று சேராத இடமுண்டா? புறாக்களைக்கூட பயன்படுத்தலாம். இது நம்முடைய பாரம்பரியத்துக்கு உகந்ததும் கூட. நளன் அன்னப்பறவையை விளம்பரத்துக்குப் பயன்படுத்தியிருக்கிறானே?
சமமான பரப்பை முழுக்கவே விளம்பரத்துக்குப் பயன்படுத்தலாம் என்பதனால் அவையெல்லாமே கோடிகளை அறுவடைசெய்யும் வயல்கள் என இப்போது கண்டடையப்பட்டிருக்கிறது. அரசு அலுவலகங்கள் பொதுச்சுவர்கள் எல்லாமே ஏற்கனவே விளம்பரமயமாகியிருக்கின்றன. அரசு ஊழியர்களுக்கு சீருடை அறிவித்து அச்சீருடையின் முன்னும் பின்னும் விளம்பரங்களை பொறிக்கலாம். அரசுக்கு கோடானுகோடிகள் வந்து கொட்டக்கூடிய ஒரு சாத்தியத்தை யாரும் கவனித்ததாகவே தெரியவில்லை. நம் நாடெங்கும் உள்ள சாலைகளை முழுக்க விளம்பரங்கள் வரைய வாடகைக்கு விடலாமே? அந்நியன் படம் பார்த்த பின்னருமா அந்த எண்ணம் எழவில்லை?
”இந்த பூமி கடவுளின் சான்றுபத்திரம்” என்றார் ஆன்மீக உபதேசகர் ஓரல் ராபர்ட்ஸ். கடவுளின் விளம்பரப்பலகை என்று சொல்வது இன்னும் ஆன்மீகமாக தெரிகிறது. இதை நாம் மானுடத்தின் விளம்பரமாக மாற்றுவதே உழைப்பின் வெற்றி. நிலவிலிருந்து பார்க்கும்போது பூமி ஒரு மாபெரும் விளம்பர உருண்டையாக தெரியும் பொன்னாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது என்றே எண்ணுகிறேன்.