மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு
இந்தக்கடிதத்தினை தங்களுக்கு இன்னும் சில நாட்கள் கழித்தே எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். இருப்பினும் முன்னரே எழுதினால் தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பதில் எழுதுவீர்கள் என்று நம்பியே இப்பொழுதே எழுதுகிறேன். முதலில் சந்திரசேகர் அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த வருத்தங்கள். எனக்கு அவரைப்பற்றி தெரியாது. தங்களின் மூலமே தெரியும். இருந்தாலும் சரியான தூக்கம் மிக அவசியம் என்ற ஒற்றை சொல் எனக்கு மிக முக்கியமானதாகப் பட்டது. சரியான அளவில் திட்டமிட்டு நாட்களை கடத்தும் எனக்கு கடந்த சில வாரங்களாக நான் திட்டமிட்டபடி தூக்கம் அமையவில்லை. அதனையே வழக்கமாக்கிக் கொள்ளலாம் என்ற நிலை வந்த தருணத்தில், அந்த வார்த்தை எனக்கு மிக முக்கியமான ஒன்று. ஒரு சிறிய திருப்பம். அது சிறியதே என்றாலும் சற்றே காலம் கடந்த பின்னர் இந்த விலக்கம் எத்துனை பெரிய மாற்றமாக இருக்குமென என்னால் உணரமுடிகிறது. அதற்கு நன்றி.
மற்றொன்று, நேற்று வெளியான தீர்ப்பு. நேற்று முழுவதும் சமூக வலைத்தளங்களில் இதனைப் பற்றியே பொங்கினார்கள். இருந்தாலும் இன்றைய அதிகார அடுக்கு நன்கு அறியும் இந்த ஃபேஸ்புக், ட்விட்டர் கும்பல் கடல் நுரை போல, பயங்கரமாக பொங்கும், ஆனால் ஒன்றும் இராது என. அவர்களும் இன்றும் நாளையும் இதனை வைத்து சில ஒற்றை வரி கருத்துக்களை தெரிவித்து விட்டு அடுத்த செய்திக்கு போய்விடுவார்கள்.
ஆனால் என்னால் சற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதெப்படி இத்துனை விவரமாக நிருபிக்கப்பட்டும், அடுத்த தீர்ப்பில் முற்றிலுமாக இல்லையென்றாகி விட்டது? 100 லிருந்து 0. நம் தேசம் அத்தனை கீழ்த்தரமாக ஆகிவிட்டதா? அதிகாரமும் பணமும் உள்ளவர்களுக்கு சட்டமென்பதே இல்லையா? அவர்கள் அதிலிருந்து விலக்கு பெற்றவர்களா? கண்டிப்பாக இந்த தீர்ப்புக்கு முன்னதாக நடைபெற்ற உள் வேலைகள் நமக்குத் தெரியாதுதான். இருந்தாலும் ஐந்து வருடத்தில் இரண்டு கோடியில் இருந்து 66 கோடியான சொத்து, எப்படி சேர்க்கப்பட்டிருக்கலாம் என்பதை சிறு குழந்தை கூட அறியுமே. என்னுடைய கேள்வியெல்லாம் நாங்கள் அப்படித்தான் தீர்ப்பு வழங்குவோம்? என்ன செய்ய முடியும் உங்களால் என்று இத்துனை வெளிப்படையாக நம் முகத்தில் காறி உமிழ்கிறார்களே? நம்மால் ஒன்றுமே செய்ய முடியாதா? என்ன செய்வது நாம்? எல்லாவற்றையும் மறந்துவிட்டு மீண்டும் ஊழல்வாதிகளுக்கே வாக்களீக்க வேண்டுமா? இது தொடர்பாக என்னால் யாரிடமும் விவாதிக்க முடியவில்லை. எல்லோரும் நேற்றைய இன்றைய செய்தித்தாள், சமூக ஊடக செய்திகளை மட்டுமே பேசுகிறார்கள். அதற்கு மேல் எதுவும் அவர்களால் பேச முடிவதில்லை. என் தேசத்தினைப் பற்றிய பெருமையே கொண்டிருந்த என் முகத்தில் இந்த தீர்ப்பு காறி உமிழ்கிறது. தங்கள் கருத்தினை அறியும் ஆர்வத்தில் இதை எழுதியிருக்கிறேன். நன்றி.