கிச்சன் என்ற சொல் சமையல்கட்டு என்ற சொல்லிருந்து எவ்வளவு தூரம் வேறுபடுகிறது? என்னால் என்றுமே கிச்சனை அத்தனை அந்நியோன்யமாக உணர முடிந்ததே இல்லை. அது முற்றிலும் நிற்பதற்கான இடம் மட்டுமே. சமைப்பதற்கான இடம் மட்டுமே. அங்கு வேறு எதுவும் செய்ய முடியாது. அங்கே தரையில் உட்கார்வதற்கு வழியே இல்லை. மிகக்குறுகலான இட வசதி கொண்டதாக இருக்கும். நகரங்களின் இடவசதிப்பற்றாக்குறையில் அதற்கு ஆகக்குறைந்த அளவிற்கே இடம் ஒதுக்கும் இன்றைய சூழ்நிலையில் வேறு வழியும் இல்லை.
ஆனால் நான் உணர்ந்த சமையல்கட்டு என்பது மிகவும் அந்நியோன்யமானது. என் அம்மாவோடும், அக்காக்களோடும் அமர்ந்து சமையல்கட்டில் பேசும் போது ஏற்படும் மகிழ்ச்சி என்பது வீட்டின் ஹாலில் அமர்ந்து பேசுவதைவிட மிக பல நூறு மடங்கு நெருக்கமானது. அம்மா சமைத்துக்கொண்டே பேசிக்கொண்டிருப்பார்கள், அக்காவும் சமையலறையிலேயே உட்கார்ந்து இருப்பார்கள். முற்றிலும் வெட்டிப்பேச்சே அங்கு மையம். அங்கு பேசப்படும் விஷயம் பலநூறு முறை முன்னர் பேசப்பட்டதாகவே இருக்கும். இருந்தாலும் ஒவ்வொரு முறையும் அது புதியதாக இருக்கும். எங்களுடைய புதிய வீட்டில் சமையல்கட்டு அமைக்கும் பொழுது அத்தனை திட்டமிட்டெல்லாம் சமையல்கட்டு அமைக்கவில்லை. ஆனாலும் இயல்பிலேயே நான் என் ஆழ்மனதில் விரும்பிய ஒரு சமையல்கட்டாகவே அது அமைந்து விட்டது. நல்ல இடவசதி. சமையல்கட்டில் இருந்து பின்புறம் செல்ல கொல்லைப்புறமாக ஒரு வழி, உள்ளே டைனிங்க் ஹால் செல்ல ஒரு வழி. ஆக எப்பொழுதும் நல்ல வெளிச்சமாகவே இருக்கும்.
அத்தோடு வெளியே செல்லும் படிக்கட்டில் அமர்ந்துகொண்டு பேசுவது என்பது அத்தனை மகிழ்ச்சியானது. ஒவ்வொரு முறையும் அம்மா வெளியே செல்லும்போதும் ஏண்டா படிக்கட்டுல உட்கார்ர? அங்கிட்டு உட்கார்ந்தா என்ன என்று சொல்லிக்கொண்டே செல்வதும் வருவதுமாக இருப்பார்கள். பாட்டி வெளியே உள்ள திண்ணையில் அமர்ந்துகொண்டு ஏதாவது அரைத்துக் கொண்டோ, பாத்திரம் கழுவிக்கொண்டோ இருப்பார்கள். அதனால் உள்ளிருந்து வெளியிலேயும், வெளியிலிருந்து உள்ளேயும் ஏதாவது போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருக்கும். இதற்கிடையில் அம்மா சமைக்க எடுக்கும் ஒவ்வொரு பொருளிலும் ஏதாவது தின்னும் பொருளிருந்தால் எடுத்து நீட்டுவார்கள். அதனையும் தின்று கொண்டே பேச்சைத் தொடர்வோம். விரும்பிய சமையலறை அமைவதென்பதே ஒரு வரம்தான் என்ன!