ஒற்றைப்படையாகும் உலகம்

நான் சில ஆசிய நாடுகளுக்கு சமீபத்தில் பயணம் செய்தேன். அப்பயணங்களின் போது நான் உணர்ந்த மிகப் பொதுவான ஒரு விஷயம் எல்லா நாடுகளும் தங்களுடைய சுயத்தை இழந்து ஒற்றைப்படையாக ஆகிக்கொண்டிக்கின்றன என்பதையே. ஒருவேளை நாம் இந்தியா தவிர்த்து வேறு எந்த ஆசிய நாட்டிற்கும் செல்லாதவராக இருப்போமேயானால் மற்ற நாடுகள் முற்றிலும் வேறானவையாக இருக்கும் என்று எண்ண வேண்டியதேயில்லை போலிருக்கிறது. காரணம் பெரும்பாலான நாடுகளில் அங்கிருக்கும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை மறந்துவிட்டுப் பார்த்தால் அது முற்றிலும் நம்முடைய இந்தியாவின் ஓர் இடமாகவே தெரிகிறது.

ஆம், தெற்காசியாவின் அனைத்து நாடுகளும் ஓர் பொதுவான கட்டுமானத்திற்குள் பெரும்பாலும் வந்துவிட்டன. உதாரணமாக இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து என்றதும் என் நினைவில் வருபவை அந்நாடுகளின் தனிச்சிறப்பு மிக்க கட்டுமானங்கள். கூம்பு வடிவ மற்றும் இலைக் கீற்று போன்ற கூரைகளைக் கொண்ட கட்டிடங்கள். ஆனால் இன்றுள்ள தாய்லாந்தோ இந்தோனேசியாவோ அப்படியில்லை. நம் சென்னையில், எப்படி ஒரு வணிக வளாகத்தில் உள்ள கடைகள் உள்ளனவோ அதனைப் போலவே அச்சு அசலாக இருக்கிறது. ஒரே வேறுபாடாக‌ அங்கே இந்தோனேசிய மொழியிலும், தாய் மொழியிலும் எழுதி வைத்திருக்கிறார்கள். அவ்வளவுதான்.( உடன் ஆங்கிலமும் உண்டு. விரைவில் ஆங்கிலம் முழு இடத்தையும் ஆக்கிரமித்துக் கொள்ளும்.அது தனிக்கதை.)

சரி வணிகக்கட்டுமானங்களைத் தவிர்த்து கலாச்சாரக் கட்டுமானங்களைப் பார்த்தோமேயானால் அவைகளும் இதற்கு விது விலக்கல்ல. உதாரணமாக சமீபத்தில் கட்டப்பட்ட கலாச்சாரச் சின்னங்கள் அனைத்தையும் உலகப் பொதுக்கட்டுமானத்தின் படியே கட்டியிருக்கிறார்கள். ஆனால் அதன் மேலுள்ள அழகுபடுத்தக் கூடிய இடங்களில் மட்டும் கூம்பு மற்றும் கீற்று போன்ற வடிவங்களைச் செய்துள்ளார்கள். கண்டிப்பாக இதுவும் பின்னாளில் கலாச்சாரமாகி பின்னர் மெதுவாக மறக்கப்பட்டு ஓர் வெற்றுக் கட்டிடமாக ஒற்றைத் தன்மையை அடைந்துவிடும்.

இதற்கு மிக முக்கியமான காரணம் என நான் எண்ணுவது தகவல் தொடர்பு மற்றும் வணிகம். இன்றைய அதீத வேகம் கொண்ட தகவல் தொடர்பின் வழியாக உலகின் ஓர் மூலையில் கண்டறியப்படும் ஓர் தொழில்முறை மிக விரைவாக உலகின் கடைக்கோடியை அடைந்து விடுகிறது. உதாரணமாக கட்டுமானத்தைப் பொறுத்தவரை கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு கட்டிடம் அது கட்டப்படும் இடத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கட்டுமானப் பொருள்களைக் கொண்டே கட்டுவதாக இருந்தது. ஓர் கிராமத்தில் கட்டப்படும் ஓர் வீட்டிற்கு தேவையான செங்கல் அருகிலுள்ள ஓர் சூளையிலிருந்தும், மரம் அக்கிராமத்திலிருந்தோ அல்லது சுற்று வட்டாரக் கிராமத்திலிருந்தோ கிடைக்கும். அதனால் அவ்வீடு அதற்குரிய தனித்தன்மையைக் கொண்டிருந்தது. ஆனால் பின்னாளில் வந்த தொழில் மயமாக்கல், வணிக மற்றும் நுகர்வோர் சமூகங்களால் இந்தியாவின் ஒரு மூளையில் கிடைக்கும் ஓர் சுண்ணாம்பு மண் இந்தியாவின் ஒட்டுமொத்த சந்தைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் கட்டுமானத்தில் இருந்த தனித்துவம் அழிந்து ஓர் ஒற்றைப்படையாக மாறியது. இதன் தொடர்ச்சியாக பெறு நிறுவனங்கள் இலாப நோக்கில் உலகின் எங்கோ ஓர் மூலையில் கிடைக்கும் ஓர் பொருளை ஒட்டு மொத்த உலகிற்கும் விற்பனை செய்து அதீத இலாபம் ஈட்டத் தொடங்கினர். அதன் இன்றைய விளைவே உலக நாடுகளின் ஒற்றைத் தன்மை.

நான் கண்ட மற்றோர் உண்மை பெரு நிறுவன‌ங்கள் அந்தந்த மண்ணின் கலாச்சார சில்லறை விற்பனையை முற்றிலுமாக அழித்துவிட்டன என்பதே. நான் பயணம் செய்த எல்லா நாடுகளிலும் கே.எப்.சி போன்ற பன்னாட்டு நிறுவங்கள் எல்லா பக்கமும். அதே போலவே கோக்,பெப்சி போன்ற பானங்களும் எங்கும் கிடைக்கிறது. ஆனால் அந்தந்த நாடுகளின் சிறப்பாக அறியப்பட்ட பொருட்களையும், உணவுகளையும் ஒரு சில இடங்களில் மட்டுமே காண முடிகின்றது. அதுவும் கூட அந்த நாட்டின் சிறப்பு அது என்ற வியாபார உத்தியாக்காகவே பெரும்பாலும் பேணப்படுகிறது. இதுவே படிப்படையாக வளர்ச்சியடைந்து அனைத்து பொருள்களும் அனைத்து நாடுகளிலும் கிடைத்து அந்தந்த மண்ணின் சுய அடையாளம் அழிகின்றது. இதிலுள்ள சிக்கல் என்னவெனில் இப்பெரு நிறுவனங்களினால் அவ்வப்பகுதியைச் சார்ந்த சிறு நிறுவனங்களும், கடைகளும் முற்றிலும் அழிந்து போகும். இதுவே இன்றைய நிலை.

உதாரணமாக தனக்குத் தெரிந்த ஒருவர் வைத்திருக்கும் ஒரு காய்கறிக்கடையில் தன் தோட்டத்தில் விளைவதை விற்கும் பல விவசாயிகளை நான் அறிந்திருக்கிறேன். அவர்கள் மிகப்பெரிய விவசாயிகள் அல்லவெனினும் தன் வீட்டளவிற்கு விவசாயம் செய்து தன்னிறைவு அடைபவர்கள். ஆனால் இதுவே ஒரு மிகப்பெரும் சங்கிலித் தொடர் நிறுவனம் உலக‌ நாடுகள் முழுவதும் தன்னுடைய கிளைகளைத் தொடங்கும் போது அவர்களிடம் தனக்குத் தெரிந்த கடைக்காரரிடம் தினம் விளைவதை விற்று பணம் பெறுவதைப் போல பெற ஒரு விவசாயியால் முடியாது. இதற்கு நிறுவனத்தின் செயல்முறை, விலைக் கட்டுப்பாடுகள், விதிமுறைகள் எனப் பல காரணங்கள் இருக்கலாம். விளைவு அச்சிறு விவசாயி தன் விவசாயத்தை விடுவார், அச்சிறு காய்கறி வியாபாரியும் அந்நிறுவனத்தின் போட்டிக்கு ஈடு கொடுக்க முடியாமல் தன் வியாபாரத்தை விடுவார். இதுவே இன்றைய உலக நாடுகளின் நிலை. இதன் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருவது கவலை தரும் ஓர் விஷயம்.

மற்றோர் முக்கிய ஒற்றைப் படைத் தன்மை மொழி அழிவு. எல்லா நாடுகளும் ஆங்கிலத்திற்கு மாறிக்கொண்டிருக்கின்றன. அந்தந்த நாடுகளின் அரசாங்கங்கள் மொழியை காக்க வேண்டிய ஓர் கட்டாயத்திற்காக சட்டங்களையும், கலாச்சார நிகழ்வுகளையும் செயல்படுத்துகின்றன. ஆனால் அவையெல்லாம் இயல்பாக இல்லாது போவதால் அவையெல்லாம் வெற்று கலாச்சாரமாக மட்டுமே எஞ்சி அழிந்து கொண்டிருக்கின்றன‌. ஆங்கிலத்தினை அலுவல் மொழியாக கொள்ளாத எந்த ஒரு அரசாங்கமும் ஆங்கிலத்தினை வளர்ப்பதற்கான எந்த செயல்பாட்டினையும் செய்யாமலேயே ஆங்கிலம் அந்த நாடுகளிலெல்லாம் வேரூன்றுவதை சற்று கூர்ந்து நோக்கினால் எவரும் உணர முடியும். காரணம் ஆங்கிலம் இயல்பாக மக்களிடம் சென்றடைகிறது. அதற்கு பல காரணங்கள் இருக்கிறது. வேலை வாய்ப்பு, வேற்று மக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய கட்டாயம், தனக்கு வேண்டிய தகவல் ஆங்கிலத்தில் இருப்பது என.

இன்றைய நிலையில் உலகின் பெரும்பாலான நாடுகளில் வணிகம் ஆங்கில மயமாகி விட்டது. எந்த ஒரு நிறுவனம் மேலும் மேலும் வளர்கிறதோ அந்நிறுவனம் ஆங்கிலத்தைக் கட்டாயமாக ஏற்க வேண்டியது இன்றைய வியாபார உலகின் நியதியாகிவிட்டது. ஆக தத்தம் மொழியைக் காக்க விரும்பும் அரசுகள் அதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அவை இயல்பாக நடைபெற வேண்டும். அப்போது மட்டுமே அது நிலைத்து நீடிக்கும்.

இந்த நிலை கடந்த இரு நூற்றாண்டு கால நிகழ்வுகளின் விளைவு. இதனை அத்துனை விரைவாக மாற்றிவிட கண்டிப்பாக முடியாது. ஆனால் தொடர்ந்த கருத்துப் பரிமாற்றங்கள் மூலமாகவும், விவாதங்கள் மூலமாகவும் இந்த எண்ணத்தை முன்னெடுக்கலாம். அதுவே இப்போதைக்கு வழி.

1 Comment

  1. எல்லா இடமும் சுத்தி சரமாறியாக அடிவாங்கி திரும்ப சரியாகிடுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.