1950 களில் ப.சிங்காரம் அவர்களால் எழுதப்பெற்ற நாவல். இந்தோனேசியாவில் வாழும் தமிழ் மக்களுடைய வாழ்வியலே கதையின் கரு. இந்த நாவலே முதன்முதலாக ப.சிங்காரத்தால் எழுதப்பெற்ற நாவல். இந்நாவலின் தொடர்ச்சியாகவே புயலிலே ஒரு தோணியை எழுதினார். ஆதலால் இந்த நாவலுக்கும் புயலிலே ஒரு தோணிக்கும் ஓர் இணைப்பை உணரலாம்.
அதே கதை மாந்தர்கள், அதே காலகட்டம். ஆனால் சற்றே வேறான கதைக்களம். வேலைக்காக இந்தோனேசியாவிலுள்ள ஒரு செட்டியாரிடம் அடுத்தாள் வேலைக்கு செல்கிறான் செல்லையா. அவனுடைய செட்டியார் முதலாளியும் அவனுடைய கிராமம் என்பதானல் தன்னுடைய மகளை அவனுக்கு மண்முடித்து வைக்க எண்ணுகிறார். ஆனால் சூழ்நிலையால் இந்திய தேசிய ராணுவத்தில் இணைகிறான் செல்லையா. இந்திய தேசிய ராணுவம் நிலை குலைந்தவுடன் மீண்டும் தன்னுடைய முதலாளியிடம் வருகிறான். போர்க்காலங்களில் அனைத்து வட்டிக்கடைகளும் மூடப்பட்டதால், அவர்களுடைய வட்டிக்கடையும் மூடப்பட்டது. போர் ஓரளவிற்கு கட்டிற்குள் வந்ததும் மீண்டும் திறக்க ஆயத்தமாகிறார் செட்டியார். தன்னுடைய படைப்பிரிவிலிருந்து வெளியாகும் காலத்தில் சில மற்ற ராணுவ வீரர்களைக் கொன்றுவிட்டு செல்லையாவும், மற்ற வீரர்களும் வந்திருப்பது செட்டியாருக்கு தெரிய வருகிறது. அவன் தன்னுடைய தொழிலுக்கு சரிப்பட்டு வரமாட்டான் என நினைத்து தன் மகளை தன்னிடம் வேலை பார்க்கும் மற்றொருவனுக்கு மணம் முடிக்கிறார்.
அக்கால கட்டத்தின் காதலையும், அதிலுள்ள எல்லைகளையும் மிக அழகாகக் காட்டியுள்ளார் சிங்காரம் அவர்கள். என்னதான் ராணுவத்திலே இருந்திருந்தாலும் அவனால் அவன் முதலாளியை எதிர்த்து ஒரு வார்த்தை பேச முடியாது. செல்லையாவைக் காதலித்தாலும் அப்பாவின் பேச்சைத்தான் கேட்க வேண்டும். செல்லையாவுக்க் தன் மகளைத் தரவில்லையென்றாலும் அவனுக்கான எதிர்காலத்திற்கானவற்றை செட்டியார் செய்வது என நாவல் உண்மைக்கு அருகில். மற்றோர் சிறந்த நாவல்.