1960 களில் ப.சிங்காரம் அவர்களால் எழுதப்பெற்ற நாவல். இந்தோனேசியாவில் வாழும் தமிழ் மக்களுடைய வாழ்வியலே கதையின் கரு. அத்தோடு கதை மாந்தர்களின் நினைவின் வழியாக இந்திய கிராமங்களினுடைய வாழ்வியலும் விவரிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் சிவகங்கை மற்றும் அதன் சுற்று வட்டாரக் கிரானங்கள். நாவல் பாண்டியன் என்னும் இளைஞனைச் சுற்றியே நகருகின்றது. பாண்டியன் பிழைப்பிற்காக இந்தோனேசியா சென்று, பின்னர் இந்தோனேசியாவிலிருந்து மலேயாவிற்கு செல்வது, அங்கே நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்வது என கதை நீள்கிறது.
நாவல் நடைபெறும் காலம் இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலகட்டம். அப்போதைய வாழ்க்கை முறைகள், ஜப்பான் ராணுவத்தின் நெருக்கடிகள் என அக்கால நிகழ்வுகள் சிறப்பாகப் பதிவாகியுள்ளது. அத்தோடு அக்கால கட்ட கிராமத்து மக்களுடைய வாழ்க்கை முறையும். உதாரணமாக வட்டித்தொழிலில் ஈடுபட்டிருந்த செட்டியார்களைப் பற்றிய விளக்கங்களும், அவர்களுடைய தொழில் முறைகளும்.
என்னைப் பொறுத்த வரையில் கதைக்களம் நான் வாழும் பகுதியைச் சேர்ந்தது என்பதனால் என்னால் நாவலில் உள்ள சில வார்த்தைகளையும், சொலவடைகளையும் மிக நெருக்கமாக உள்வாங்கிக்கொள்ள முடிந்தது. சிவகங்கை வட்டாரப் பகுதிகளில் மட்டுமே நான் கேட்ட சில சொலவடைகள் இந்நாவலில் பல இடங்களில் உண்டு. அடுத்த முறை இந்த வார்த்தைகளை யாரேனும் உச்சரிக்கும் போது எனக்கு அதன் பின்னுள்ள வரலாறே நினைவுக்கு வரும் என நினைக்கிறேன். சிறந்த நாவல்.