ராமச்சந்திர குஹாவால் எழுதப்பட்டது. ஆங்கிலத்தில் எழுதப்பெற்ற நூல் ஆர்.பி.சாரதியால் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிறந்த மொழியாக்கம். புத்தகம் இரு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது.
சரி, ஏற்கனவே இந்திய வரலாற்றினைப்பற்றி ஏராளமான புத்தகங்கள் வெளிவந்துள்ளனவே, அவற்றில் இல்லாத அப்படி என்ன சிறப்பு இந்தப்புத்தகத்திற்கு?
இரண்டு முக்கியமான காரணங்கள்.
முதலாவது, இதுவரையான இந்திய வரலாற்று நூல்கள் இந்தியப் போராட்ட நிகழ்வுகளை அதிகமாக விவரித்து சுதந்திரத்தோடு நின்று விடும், அல்லது இந்திய மன்னர்களது காலங்களில் அதீத கவனம் செலுத்துவதாய் இருக்கும். இந்த நூல் தொடங்கக் கூடிய காலமே 1940களின் பிற்பாதி. ஏறக்குறைய இந்திய சுதந்திரம் உறுதி செய்யப்பட்ட காலம். சுதந்திர இந்தியாவின் உள்நாட்டு கலவரங்கள், இந்து முஸ்லீம் போராட்டங்கள், பஞ்சகாலங்கள், சீன பாகிஸ்தான் போர்கள், எல்லையோர மக்களின் தனி நாடு கோரிக்கை, அதனை இந்திய தலைவர்கள் கையாண்ட விதம், அவர்களின் தோல்விகள், சறுக்கல்கள் என விரைகிறது இப்புத்தகம். நான் இவற்றை இங்கே ஒற்றை வரியில் கூறியிருந்தாலும் புத்தகத்தில் இவை கிட்டத்தட்ட 500 பக்கங்களில் விவரிக்கப்பட்டிருக்கிறது. அத்தனை அடர்த்தியான தகவல்கள்.
இரண்டாவது, புத்தகத்தில் ஒற்றை வரி கூட ஆசிரியரின் கருத்தோ, எண்ணமோ கிடையாது. உதாரணமாக பல நூல்களில் நேரு நினைத்தார், காந்தி நினைத்தார் என நூலாசிரியர்கள் குறிப்பிடுவதை நாம் காணலாம். அந்த வரலாற்று நபரின் ஏதோ ஒரு செயல்பாட்டின் அடிப்படையில், ஒரு நூலாசிரியர் அந்த முடிவுக்கு வந்து அதனை எழுதுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த நூலில் அதனைப் போல ஒற்றை வரி கூட கிடையாது. நேரு எண்ணினார் என்றால் அது ஒரு ஆதாரத்தின் அடிப்படையிலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது நேரு தான் எண்ணியதாக யாருக்காவது எழுதிய கடிதம் இருக்கும். எல்லாவற்றிற்கும் அந்தந்த வரிகளிலேயே ஆதாரம் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த நூலின் ஒட்டு மொத்த 500 பக்கங்களும் விவரிக்கும் காலகட்டம் என்பது 1945 முதல் 1964 வரை மட்டுமே. இந்திய வரலாற்றினை சுதந்திர காலத்திலிருந்து அறிந்து கொள்ள விரும்பும் ஒருவர் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்.