தேவை பஜ்ரங்கி பைஜான்கள்

தேவை பஜ்ரங்கி பைஜான்கள்

சமீபத்தில் மீண்டும் ஒருமுறை பஜ்ரங்கி பைஜான் திரைப்படத்தை பார்த்தேன். ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு இந்திய சினிமா ஆற்றிய பயன் என்று பார்த்தால் அதிகபட்சம் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவே என்பது என் எண்ணம். 95 விழுக்காடு சீர்கேடே. இது இல்லையென்றால் செழிப்போடு இருந்திருப்போம் என்ற பொருளிலல்ல, இல்லாமலிருந்திருந்தால் இத்தனை விரைவாக இத்தனை மோசமாக ஆகியிருக்க மாட்டோம் என்ற பொருளில். சமூகத்தின் பெரும்பகுதி சீரழிந்து விட்டது என்ற பொருளில‌ல்ல, சீரழிவின் பெரும்பகுதி சினிமாவால் என்ற பொருளில்.

நூற்றில் ஐந்து திரைப்ப‌டங்கள் சமூகத்தின் மேம்பாட்டிற்கான படங்களாகவோ, யதார்த்தவாத‌ படங்களாகவோ இருக்கின்றன. மற்றவையெல்லாம் சிரங்கை சொறியும் திரைப்படங்கள்.பஜ்ரங்கி பைஜான் அந்த ஐந்து விழுக்காட்டிற்குள்ளான‌ ஓர் திரைப்படம். இத்திரைப்படத்தினை ஏன் ஐந்திற்குள் உள்ள படைப்பு என்கிறேன் என்றால் படத்தின் மையக்கரு. அதாவது பாகிஸ்தானிலுள்ளவர்களை எதிரியாகப் பார்க்கவேண்டியதில்லை. அங்கும் நம்மைப் போலுள்ளவர்கள் இருக்கிறார்கள், இங்கும் அவர்களைப் போலுள்ளவர்கள் இருக்கிறார்கள்.

இரண்டு காரணங்கள்.

முதலாவது தனி மனித செயல்பாடுகளைக் கொண்டு ஒரு தேசத்தையே வெறுப்பது என்பது முற்றிலும் நம்மைத் தனிமைப்படுத்தவே செய்யும். அப்படி வெறுத்துக்கொண்டே சென்றால் கடைசியில் நான் என்னும் நிலை வரை இந்த வெறுப்பு தொடரும். ஒரு வேளை அதனைத் தாண்டி நம்மையும் வெறுக்கும் நிலைக்கு கூட‌ செல்லலாம். இதனை நாம் ஏன் செய்ய வேண்டுமெனில் நம் தேசத்தினைப் பொறுத்தமட்டில் நடைமுறையில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. பெரும்பான்மையின் ஆட்சிதான் நடைபெறுகிறது. பெரும்பான்மையென்பதாலேயே எப்பொழுதுமே அது சரியாக இருக்க வேண்டியதில்லை. அதனால் அந்தப் பெரும்பான்மையை ஓர் உன்னத நிலை நோக்கி நகர்த்த வேண்டிய நிலைமை ஓர் படைப்பாளிக்கு உண்டு. அந்தப் பெரும்பான்மையின் தற்போதைய நிலையையே மீண்டும் மீண்டும் சொறிந்து விட வேண்டியதில்லை.

இரண்டாவது ஒரு படைப்பாளி என்பவர் தன்னை இரு இடங்களில் நிலைப்படுத்திக் கொள்ளலாம். ஒன்று உன்னத லட்சியவாதத்தில், இரண்டு நிகழ்கால யதார்த்தவாதத்தில். அதாவது ஒருவர் உள்ளதை உள்ளபடியே அப்படியே படைக்கலாம். அது யதார்த்தம். அது அதற்குப்பிந்தைய காலத்திற்கான ஆவணம். இன்றைய நிலையை உள்ளது உள்ளபடியே எடுக்கக்கூடிய ஒரு திரைப்படம் சில நூறு ஆண்டுகள் கழித்து அக்கால கட்டத்தில் இருப்போருக்கு இன்றைய நிலையை துல்லியமாக அறிய உதவும். அல்லது ஒரு திரைப்படத்தை தான் விரும்பும் லட்சியவாதத்தின் அடிப்படையில் எடுக்கலாம். அது உண்மையாகவோ அல்லது தற்போதைய நிலையில் நடைமுறைச் சாத்தியம் இல்லாததாகவோ கூட இருக்கலாம். ஆனால் அது முக்கியமானது, ஓர் படைப்பாளி தான் விரும்பும் லட்சியவாதத்தினை தன் படைப்பில் காட்டும்பொழுது அது அதனை நோக்கிய மக்களின் பயணத்தினை விரைவுபடுத்துகிறது அல்லது அது தொடர்பான கருத்தாக்கம் இல்லாதவர்களிடத்தே ஒரு லட்சிய உலகை முன்வைக்கிறது.

சுருக்கமாக ஒரு யதார்த்த படைப்பு என்பது எதிர்கால சமூக‌த்தின் கடந்த காலத்திற்காக, ஒரு லட்சியவாத படைப்பு என்பது நிகழ்கால சமூகத்தின் எதிர்காலத்திற்காக.

ஆனால் ஓர் சமூகத்தினை ஆளும் அரசாங்கம் என்பது இதன் இடையிலேயே செயல்பட முடியும். அதாவது யதார்த்தவாதத்திற்கு மேலாக, லட்சியத்திற்கு கீழாக. சமூகத்தினை முதல் படிக்கட்டில் இருந்து மேலேயுள்ள படிக்கட்டுக்கு கொண்டு செல்லவேண்டியிருக்கிறது.

ஒருபக்கம் முற்றிலுமாக ல‌ட்சியத்தினை எடுத்துக்கொள்ளும் அரசாங்கம் முழுமையான நடைமுறை சாத்தியம் இல்லாமையால், சமூக அமைதியின்மைக்கு வழி வகுக்கிறது. மக்களை ஒருபடியிலிருந்து அடுத்த படிக்கு எடுத்துச் செல்வது பெரும்பான்மை சமூகத்திற்கு சாத்தியமாகிறது. அதுவே 10 படிகளைத் தாண்டச்சொல்லும்போது சாத்தியமில்லாததாகிறது.

மறுபக்கம் முற்றிலுமாக யதார்த்தத்தினை எடுத்துக்கொள்ளும் அரசாங்கம் சமூகத்தினை முன்னேற்ற முடியாமலாகிறது. சமூகம் முதல் படியிலேயே நின்றுவிடுகிறது.

இப்பார்வையிலேயே பஜ்ரங்கி பைஜான் திரைப்படத்தினை ஓர் லட்சியவாதப் படைப்பாக பார்க்கவேண்டியுள்ளது. அதிலுள்ளது போல் இன்றைய நிலையில் இல்லாமல் இருக்கலாம். அப்ப‌டைப்பிலுள்ள காட்சிகளெல்லாம் அவை சார்ந்த தொழில்களிலும், பதவிகளிலும் இருப்போருக்கு நகைப்புக்குரியதாககூட‌ இருக்கலாம். ஆனால் அது லட்சியவாதம். அருகருகே இருக்கும் இரு தேசமக்கள் இயல்பானவர்களாகவும், அன்பானவர்களாகவும் மற்றவர்களை அரவணைப்பவர்களாகவும் இருப்பதாகக் காட்டக்கூடிய ஓர் படைப்பு எந்த நிலையிலும் முக்கியமானதே. அதுவும் நமக்கு, மிகவும் முக்கியமானது.

1 Comment

  1. Kannan

    Good Article. Keep up righting.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.