நான் சென்ற வருடம் (2015) பொங்கல் முடிந்ததும் எழுதிய ஓர் கட்டுரை. இன்றும் அதே நிலைதான்.
மஞ்சு விரட்டு இப்போதைக்கு இல்லை. முடிவாகிவிட்டது. பொங்கல் சமயத்தில் வழக்கம் போல அனைத்துக் கட்சிகளும், சில சாதி அமைப்புகளும் குரலெழுப்பிவிட்டு தங்களின் அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட்டார்கள்.ஒருவேளை இவ்வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வரும்பொழுதோ அல்லது வேறு ஏதும் அறிக்கை விடுவதற்கு இல்லையெனும்போதோ களத்தில் இவர்களின் குரலைக் கேட்கலாம். பொங்கல் சமயத்திலேயே இப்பதிவை எழுதியிருந்தால் வழக்கம் போல வெற்றுக்கூச்சலாகவே போயிருக்கும் என்பதால் இப்பொழுது இடுகிறேன்.
ஒன்று தமிழக அரசியல் கட்சிகள் இந்த விஷயத்தில் ஒன்றும் செய்ய மாட்டார்கள். அதீத மக்கள் வெறுப்பு ஏற்படும் பொழுதுமட்டும் தீவிரமாக இருப்பது போலக் காட்டிக்கொள்வார்கள். திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, கம்யூனிஸ்ட் என யாரும் விதிவிலக்கல்ல. பிரச்சினை பெரிதாகும்போது மட்டும் உள்நுழைந்து முடிந்தவரை அரசியல் மட்டும் செய்துவிட்டுப் போவார்கள். இவர்களின் அரசியல் காரணங்களுக்காக ஏதாவது நல்லது நடந்தால் உண்டு. இல்லையேல் மற்றவர்களைக் குறை கூறிவிட்டு அடுத்த விஷயத்துக்கு போய்விடுவார்கள். அதனால் அரசியல் சாராத ஏதாவது ஒரு பொதுநல அமைப்போ, தன்னார்வ இயக்கமோ,இதில் தீவிரமாக ஈடுபட்டு பொதுமக்களிடம் எடுத்துச் சென்றால் மட்டுமே அரசும், அரசியல் கட்சிகளும் இதில் ஆர்வம் காட்டும். இதுவே இப்போதைக்கு சாத்தியமெனத்தோன்றுகிறது.
அதிலும் உள்ள சிக்கல் என்னவென்றால் அப்படிப்பட்ட ஏதோ ஒர் அமைப்பின் முயற்சியாலேயே இந்த மஞ்சுவிரட்டு இன்று நிறுத்தப்படும் நிலைக்கு வந்துள்ளது. அவர்கள் மீதும் முற்றிலுமாக குற்றம் சொல்ல முடியாது. அவர்கள் அவ்வாறு கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள், அல்லது புரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களில் 10 விழுக்காடு நபர்கள் கிராமங்களில் இருந்து வந்தவர்களாக இருந்தால் அதிசயம். அவர்களுக்கு தெரிந்த தகவல்களின் அடிப்படையிலேயே இந்நிகழ்வைப் புரிந்து கொண்டுள்ளார்கள். மஞ்சு விரட்டை நேரலையில் பார்த்து கண்ணீர் வடிப்பவர்கள். அந்த நேரலை பணத்திற்காக தொலைக்காட்சிகள் ஒளிபரப்பக்கூடியவை. அவர்களைப் பொறுத்த வரையில் காளை துன்புறுத்தப்படுகிறது. அதனைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்பதே. வழக்கு தொடுக்கிறார்கள். தடை வாங்குகிறார்கள். ஒளிபரப்பிய தொலைக்காட்சியோ அடுத்த ஒளிபரப்புக்கு சென்று விடுகிறது. விவசாயிக்கே அடி.
தனக்கு சாப்பிட எதுவும் இல்லையென்றாலும் கூட மாட்டுக்காக புண்ணாக்கும் பருத்திக்கொட்டையும் வாங்கிவரும் பலரை கண்கூடாகக் கண்டிருக்கிறேன். தான் வளர்க்கும் மாட்டிற்கு பெயர் வைத்திருப்பார்கள், வீட்டில் ஒருவனைப் போலவே பாவிப்பார்கள். ‘செவலையனக் கொண்டுபோய் தண்ணிகாட்டிகிட்டு வாடா’ என்பது போன்றவற்றை தினம் நூறு தடவைக் கேட்டிருக்கிறேன். அவர்களுக்கு மாடும், மனிதனும் வேறல்ல. மாடு போல் வேலை செய்வார்கள், மாட்டை பிள்ளையாகக் கருதுவார்கள்.
மாட்டை குளிப்பாட்டி சந்தனம், குங்குமம் இட்டு மாலை அணிவித்து பொங்கல் கொடுத்து கோவிலின் மஞ்சுவிரட்டு திடலுக்கு அழைத்துவருவார்கள். அவர்களுக்கு அதுதான் வாழ்க்கை.அவர்களா மாட்டினை துன்புறுத்துவார்கள்?
மஞ்சு விரட்டு என்றதும் அலங்காநல்லூர், பாலமேடு என்று பிரமாண்டமாகவே நினைக்கிறார்கள் ஆர்வலர்கள். வேண்டியதில்லை. மிகச் சிறிய அளவில் அந்தந்த கிராமத்து மாடுகளைக் கொண்டு நடத்தப்படும் மஞ்சு விரட்டுகளே அதிகம். அவர்களால் தான் மஞ்சு விரட்டு உயிர்ப்போடு இருந்தது. அவர்களுக்கு தங்கள் தரப்பினை விவாதிக்க தெரியாது. அரசு என்ன சொன்னாலும் தன்னளவிலோ, வீட்டளவிலோ புலம்பிவிட்டு ஏற்றுக்கொள்வார்கள். இதுவே ஒரு நகர வாழ் மக்களின் பழக்கவழக்கத்தில் இவர்கள் குற்றம் சொல்லட்டும். ஆயிரம் பேர் வழக்கு தொடர்வார்கள், கட்டுரை எழுதுவார்கள். அதனால் அங்கெல்லாம் விட்டுவிட்டு விவசாயியின் வயிற்றில் அடிப்பார்கள், கிராமத்தில் தாங்கள் தலைமுறை தலைமுறையாகக் கொண்டாடி வந்ததை தலைநகரிலிருந்து நிறுத்தி விடுவார்கள்.
என்ன செய்வான் அவன்? வாதாட மாட்டான், கட்டுரை எழுத மாட்டான். ‘அரசாங்கம் தடை விதிச்சிடுச்சு’ என்ற எளிமையாகக் கடந்து செல்வான். இருக்கும் மாடுகளை விற்பான். யாராவது கேரளாவிலிருந்தோ, ஆந்திராவிலிருந்தோ வந்து காளையை அடிமாட்டிற்காக வாங்கி செல்வார்கள். ஆர்வலர்கள் அங்கேயெல்லாம் செல்ல மாட்டார்கள். ஏனென்றால் மாட்டுக்கறி சாப்பிடுபர்கள் உலகெல்லாம் உண்டு. சண்டைக்கு வந்து விடுவார்கள். இவர்கள் கிராமத்தில் காளையை தன் பிள்ளையெனக் கருதும் விவசாயியிடம் தன் கருத்துப்புலமையெல்லாம் காட்டுவார்கள். அவன்தானே திருப்பி சண்டைக்கு வரமாட்டான்? விடுங்கள் இன்னும் கொஞ்சபேர்தான் இருக்கிறார்கள். அவர்களையும் கொன்று விடுவோம்.