70 ஆவது சுதந்திரதினத்தைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.
முதலில் நம் அனைவரிடமும் ஓர் கேள்வி. நாம் உண்மையாகவே சுதந்திரதினத்தைக் கொண்டாடுகிறோமா, இல்லை அதனை ஓர் விடுமுறை நாளாக மட்டும் எடுத்துக்கொள்கிறோமா? உண்மையான பதில் நம்மில் பெரும்பாலானோர்க்கு உண்மையில் அது விடுமுறை தினம் மட்டுமே. நாம் மற்ற பண்டிகைகளான தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போலவா சுதந்திர தினத்தினைக் கொண்டாடுகிறோம்? இல்லவே இல்லை.
நண்பர்களே! நாம் பெற்ற அந்த சுதந்திரத்தால்தான் இன்று நாம் நாம் விரும்பும் பண்டிகைகளைக் கொண்டாடமுடிகிறது. நண்பர்களே உங்களுக்கு ஒன்று தெரியுமா? வட கொரியாவில் நீங்கள் பைபிளை வைத்திருந்தால் உங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். ஆப்ரிக்க நாடான அங்கோலாவில் நாம் இஸ்லாம் மதத்தை தழுவமுடியாது. அங்கே இஸ்லாம் தடை செய்யப்பட்ட ஓர் மதம். சிங்கப்பூரில் அதன் பிரதமரை நம்மால் கேளிச்சித்திரமாக வரைய முடியாது. அங்கே அது சட்டப்படி தடைசெய்யப்பட்ட செயல். ஆனால் நம் இந்தியாவில் நம் ஒவ்வொருவருக்கும் இந்தியாவின் முதல் குடிமகன் முதல் கடைசிநபர் வரையிலும் விமர்சிப்பதற்கான உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. இது நாம் பெற்ற சுதந்திரத்தாலேயே சாத்தியமான ஒன்று.
நண்பர்களே நாம் சுதந்திரதினத்தைக் கொண்டாடாமல் இருப்பதே அந்த சுதந்திரம் நமக்களித்துள்ள சுதந்திரத்தால் தான் இல்லையா? இத்தேசத்தின் ஒவ்வோர் நபருக்கும் சுதந்திரதினமே தலையாய கொண்டாட்டமாக இருக்கவேண்டும் என்பதே என் எண்ணம். என் எண்ணம் கண்டிப்பாக சாத்தியமான ஒன்றே என நான் எண்ணுகிறேன், நாம் அனைவரும் மனது வைத்தால்.