ஜெயமோகன் சிங்கப்பூரில் உடனுறை எழுத்தாளர் திட்டத்தின் கீழ் இருமாதங்கள் பணியாற்றினார். பள்ளி மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தினை மேம்படுத்தவும், எழுதப் பயிற்சி அளிக்கவுமான ஓர் திட்டம்.
அவர் சிங்கப்பூரில் இருப்பதனால் இந்த வருட இலக்கிய முகாமை சிங்கப்பூரில் நடத்த திட்டமிட்டனர். இரண்டு நாள் நிகழ்வு. செப்டம்பர் 17 மற்றும் 18. 19ம் தேதி கண்டிப்பாக முடித்தாக வேண்டிய பணி எனக்கிருந்தது. வெள்ளிக்கிழமை இரவு பன்னிரண்டு மணி வரை வேலை செய்தேன். முடிக்க முடியவில்லை. செல்வதா இல்லை பணியைத் தொடர்வதா என பெரிய குழப்பம். இருப்பினும் செல்வது என முடிவெடுத்துவிட்டேன். மாலை ஐந்து மணிக்கு நிகழ்வு முடிந்ததும் மீண்டும் வேலையைத் தொடர்ந்து செய்தேன். இரவு பதினோரு மணி வரை. மறுநாள் காலையில் சீக்கிரம் எழுந்து மீண்டும் வேலை செய்தேன். எட்டரைக்கு முடித்துவிட்டு அடித்துப் பிடித்துக்கொண்டு ஓடினேன். இதில் ஆறுதலான விஷயம் என்னவென்றால் நிகழ்ச்சி நடைபெற்ற இடம் எனது வீட்டின் அருகில். சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவு. அப்படி என்னதான் இருந்தது அந்நிகழ்வில்?
மிகச்சிறந்த நிகழ்வு. மிக சிறப்பாக ஒருங்கமைத்திருந்தார்கள். ஆரம்பத்தில் எனக்கு இரண்டு நாள் நிகழ்வென்பதனால் சற்றேனும் சலிப்படைந்து விடுமோ என்ற எண்ணமிருந்தது. ஆனால் முதல்நாள் கம்பராமயணப் பாடல்கள் முடிவடைந்த உடனேயே அந்த எண்ணம் முற்றாக அகன்றது. குறிப்பாக ஜெயமோகன் அவர்கள், அவ்வப்பொழுது இயல்பாக எழும் சோம்பலை இல்லாமலாக்குவதற்காக நகைச்சுவைத்துணுக்குகளை கூறிக்கொண்டே இருந்தார். அவர் மட்டுமல்லாமல் அரங்கசாமி மற்றும் குறிப்பாக ஈரோடு செந்தில் ஆகியோரது நகைச்சுவைத்துணுக்குகளும் நாள் முழுவதையும் மிகவும் மகிழ்ச்சிகரமானதாக ஆக்கிக்கொண்டே இருந்தன. அத்தோடு இரண்டு நாள் உணவும் மிகச்சிறப்பு. அதில் பாயாசம் உச்சம். அன்னமிட்ட நண்பருக்கு ஆயிரம் நன்றிகள்.
அடுத்து இரண்டு நாட்களின் அறிதல்கள். ஜெயமோகன் கூறுவதுபோல குறைவாகக் கூறி பின்னதை ஊகிக்கவிடுவதாகவே அமைந்தது. இந்த இரண்டு நாட்களிலும் நிகழ்வுகளின் அமர்வுகளிலும், தனிப்பட்ட உரையாடல்களிலும் நமக்கு அறிவு அளிக்கப்பட்டதைவிட அதற்கான வாயில்கள் காட்டப்பட்டன என்றே நான் எண்ணுகிறேன். உதாரணமாக கம்பராமாயணம். அதன் இனிமையின் ஒரு துளி நமக்கு புகட்டப்பட்டது. நாம் மயங்கினோம். அடுத்தது தற்போது கிடைக்கும் பதிப்புகளில் கோவைப்பதிப்பு விளக்கவுரையுடன் மிகச்சிறப்பான ஒன்று என்ற தகவல். அவ்வளவுதான். மற்றவை நம் கையில்.
அது மட்டுமின்றி சிறுகதைகள், கவிதை, வரலாறு, இலக்கியம் எனப் பல தளங்களிலும் விவாதம் நீண்டது. ஆனால் எந்த தருணத்திலும் சலிப்பே தோன்றவில்லை. அத்துனை ஆர்வமாகவும், ஈர்ப்பாகவும் இருந்தது.