அழகிரிசாமி அவர்களின் பத்து கதைகளை தொகுத்து அம்ருதா பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள சிறுகதை நூல். தொகுத்தவர் திலகவதி. ராஜா வந்திருக்கிறார்,அக்கினிக் கவசம்,திரிபுரம்,புன்னகை,புது உலகம்,தியாகம்,தரிசனம்,முருங்கைமர மோகினி,மனப்பால், சிறுமைக்கதை ஆகிய பத்துக்கதைகளை தேர்வு செய்துள்ளார். இதில் ராஜா வந்திருக்கிறார் தமிழக பள்ளிகளில் பாடத்திட்டமாக உள்ள கதை. பெரும்பாலானவர்கள் படித்திருக்கும் வாய்ப்பு உண்டு. மிக அழகாக ஓர் ஏழைக்குடும்பத்தின் சித்திரம் வெகு இயல்பாக அக்கதையினூடே ஓடுவது அக்கதையில் நான் மிகவும் ரசித்த ஒன்று.
நான் மிகவும் ரசித்த மற்ற கதைகள் முருங்கை மர மோகினி மற்றும் திரிபுரம். ஒரு முருங்கைக்காய் மீது தீராக் காதல் கொண்டு அதனை யாருக்கும் தெரியாமல் பறித்துக்கொண்டு வந்து அதனை சாப்பிடும் பொழுது அதனை வேண்டாமென ஒதுக்கி விடுவதே கதை. நம் வாழ்வின் ஆசைகளும் அப்படித்தானே. அனைத்துக் கதைகளின் மற்றோர் சிறப்பென நான் கருதும் ஓர் விஷயம் கதைகள் வாழ்வின் ஓர் தருணத்தில் தொடங்கி மற்றோர் தருணத்தில் முடிந்து விடுபவையாகவே உள்ளன. கதைகளை முற்றுப்பெறச் செய்யும் நோக்கில் கதை சுருக்கப்படவில்லை. விரிந்து செல்லும் ஒரு புனல் போல கதை நின்று விடுகிறது. விரித்துச் செல்வது வாசகரின் வாசிப்பே.
வாசிக்க வேண்டிய சிறுகதை தொகுப்பு.