ரஷ்ய மொழியில் தஸ்தோயேவ்ஸ்கியால் எழுதப்பெற்று 1867 ல் வெளிவந்த The Gambler நாவலின் தமிழாக்கம். தமிழாக்கம் ரா.கிருஷ்ணையா.
இந்நாவலின் மையக் கதாபாத்திரம் Alexei Ivanovich, தன்னுடைய அனுபவங்களை கூறுவது போன்ற நாவல். ரஷ்ய ஜெனரலின் குழந்தைகளுக்கு பாடம் கற்றுத் தரும் ஆசிரியராக வேலை செய்கிறான் Alexei Ivanovich. அவன் ஒருதலையாக ஜெனரலின் சகோதரர் மகள் Polina மீது காதல் கொள்கிறான். அவளுக்கு அவனுடைய காதல் தெரிந்தாலும் அதனை ஏற்காமலும் மறுக்காமலும் அவனுடன் பழகி வருகிறாள். அவளுடைய சிற்றப்பாவாகிய ஜெனரலின் மனைவி இறந்துவிட்டமையால் அவரது இரண்டு குழந்தைகளைப் பராமரித்து வருகிறாள் Polina. ஜெனரல் தான் பெற்ற கடனுக்காக தன்னுடைய சொத்துக்களை de Criet யிடம் அடமானம் வைக்கிறார். அவர் ரஷ்யாவில் நோயுற்றிருக்கும் தனது பாட்டி இறப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தில் கடனை அடைத்து விடலாம் என நம்புகிறார்.
இதனிடையில் ஜெனரலுக்கு Blanche மீது காதல். ஆனால் அவளும் அவள் தாயும் பணமிருப்பவர்களை மட்டும் அடைய விரும்புபவர்களாக இருக்கிறார்கள். ஒருநாள் Alexei யும் Polina வும் பூங்காவில் உலாவிக்கொண்டிருக்கையில் வம்புக்கிழுப்பதற்காக அங்கு வரும் ஒரு கோமான் தம்பதியினரை Alexei சீண்டச் செய்கிறாள். அதன் விளைவாக தன்னுடைய வேலையை இழக்கிறான் Alexei . வேலையை இழக்கக் காரணமான கோமானிடம் விவாதிக்க செல்லும் அவன் Polina வேண்டுகோளால் அதனை செய்யாமல் விடுகிறான்.
இந்நிலையில் ரஷ்யாவிலிருந்து பாட்டி ஆரோக்கியமாக வந்து விடுகிறாள். அதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இந்நிலையில் அங்கிருக்கும் சூதாட்ட விடுதியினை பார்க்க செல்லும் பாட்டி அங்கிருக்கும் பரிசுகளைப் பார்த்ததும் தானும் சூதாட்டத்தில் விளையாடுகிறார். முதல் நாளில் 8000 ரூபிள்களை வெல்லும் பாட்டி ஆர்வ மிகுதியால் அடுத்தடுத்த நாட்களில் தன்னுடைய ஒரு லட்சம் ரூபிள்களை இழந்து விடுகிறார். அதனால் விரக்தி அடையும் அவர் தான் வந்த சிகிச்சையைக் கூட எடுக்காமல் ரஷ்யா திரும்புகிறார்.
அதனால் ஜெனரலுக்கு பணம் ஏதும் கிடைக்காது என்று தெரிய வருகிறது. அதனால் Blanche அவரை விட்டு பிரிந்து செல்கிறாள். அத்தோடு de Criet உம் தன்னுடைய கடன் திரும்ப வராது என ஜெனரலுடைய சொத்துக்களை ஏலம் விட முடிவு செய்கிறார். அவருக்கும் Polina மீது ஒரு வித ஈர்ப்பு. அது Polina வுக்கும் தெரியும். ஆனால் அவள் தன்னுடைய சித்தப்பாவின் கடனுக்காக அதனைப் பொறுத்துக் கொள்கிறாள். ஆனால் கடன் திரும்ப வராததால் de Criet அவளையும் வேண்டாமென நீங்கி செல்கிறார். அவளுக்காக அவருடைய கடன்களில் ஐம்பதாயிரத்திற்கான பத்திரங்களை ஜெனரலிடமே விட்டுவிட்டு செல்லும் de Criet, அதனை பெற்றுக்கொள்ளும்படியும் Polina விற்கு கடிதம் எழுதிவிட்டு செல்கிறார்.
அதனால் கோபமடையும் Polina அவருடைய ஐம்பதாயிரத்தை அவர் முகத்தில் விட்டெறிய நினைத்து Alexei யிடம் கூறுகிறாள். அதனால் வேகம் கொண்டு சூதாட்ட விடுதிக்கு செல்லும் Alexei, இரண்டு லட்சம் ரூபிள்களை வென்று வந்து அவளிடம் ஐம்பதாயிரத்தைத் தருகிறான். திடீரென்று அவனுடைய முகத்திலேயே அதனை விட்டெறிந்து விட்டு ஓடி விடுகிறாள் Polina. இதனால் விரக்தியடைகிறான் Alexei. பின்னாளில் அவள் நோய்வாய்ப்பட்டதை அறிகிறான்.
இந்நிலையில் இவனிடம் 2 லட்சம் ரூபிள்கள் இருப்பதை அறியும் Blanche, Alexei யை மயக்கி தன்னுடன் பாரீஸ் அழைத்துச் செல்கிறாள். அங்கே ஒரு மாத காலம் அவனுடன் இருந்து அவனுடைய பணம் முழுவதையும் செலவழித்து விடுகிறாள். பின்னர் அங்கு அவளைத் தேடி வரும் ஜெனரலையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு விடுகிறாள்.
அதனால் அங்கிருந்து செல்லும் Alexei பிழைப்புக்காக ஒவ்வொரு சூதாட்ட விடுதியாக அழைகிறான். இருந்த ஒட்டு மொத்த பணத்தையும் அழிக்கும் அவன் பின்னொரு நாளில் Polina தன்னை உண்மையாக காதலித்ததை அறிகிறான். அப்பொழுது மீண்டும் திருந்தி வாழ்க்கையை தொடங்க வேண்டும் என எண்ணுகிறான். இருக்கும் பணத்தை வைத்து மீண்டும் சூதாடி பணத்தை வென்று வாழ்க்கையை தொடங்கவேண்டுமென எண்ணி சூதாடுகிறான். மீண்டும் இருக்கும் அனைத்தையும் இழக்கிறான்.
இந்நாவல் தஸ்தோயேவ்ஸ்கி தன்னுடைய சொந்த அனுபவங்களினைக் கொண்டு எழுதப்பட்டதாக கூறப்படுவதுண்டு. ஏனெனில் தஸ்தோயேவ்ஸ்கி ரூலெட் ஆட்டத்தில் அடிமையாகிக் கிடந்தவர். இந்நாவல் சூதால் அழியும் மூவரில் மையம் கொள்கிறது. ஒன்று பாட்டி, அடுத்தது ஜெனரல், அப்புறம் Alexei. மூவருமே சூதால் ஆரம்பத்தில் கவரப்பட்டு, பின்னர் தங்களுடைய மொத்த சொத்துக்களை இழந்தவர்கள். அக்காலகட்டத்திய ரஷ்ய, பிரெஞ்சு, ஜெர்மானிய, ஆங்கிலேய மக்களிடத்திலிருந்த மற்ற இன மக்கள் மீதான எண்ணங்களை சிறப்பாக வடித்திருப்பது நாவலின் சிறப்பு. 1867 ஆம் ஆண்டில் வெளிவந்த நாவல் இன்றுக்குமான நாவலாகத் திகழ்வதே அதன் உச்சம். கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நாவல்.