பாக்கியம் ராமசாமியால் எழுதப்பெற்று குமுதத்தில் 1963 களில் தொடர்கதையாக வெளிவந்த நகைச்சுவைத் தொடர். பின்னர் மொத்த நாவலாக வெளியிடப்பட்டது.
அப்புசாமித் தாத்தா தன்னுடைய மனைவி சீதாவுடன் நாள்தோறும் சண்டையிட்டு வருபவர். சாதாரண விளையாட்டுச் சண்டைகள். ஒருமுறை அவருடைய தாடியை அவர் மழிக்கவில்லை என்பதற்காக அவரைத் தன்னுடன் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லாமல் விடுகிறாள் சீதா. அதனால் தான் இனிமேல் தாடியை எடுக்கப்போவதில்லை என சபதம் செய்கிறார் அப்புசாமி. இந்நிலையில் இந்தியாவுக்கு வருகை தரும் ஒரு ஆப்ரிக்க இளவரசி இடீலி தனக்கான கணவன் தாடி வைத்திருப்பார் எனவும், அவர் வயதானவராய் இருப்பார் எனவும் ஒரு நாடி ஜோசியனிடம் தெரிந்து கொள்கிறாள். அப்படிப்பட்ட கணவனைத் தேடும் அவள் எதேச்சையாக அப்புசாமியை சந்திக்கிறாள். அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாள். அப்புசாமியும் தன் மனைவி சீதாவினை வெறுப்பேற்ற ஆரம்பத்தில் அவளுடன் சேர்ந்து சில சேஷ்டைகள் செய்கிறார். பின்னர் ஒரு கட்டத்தில் விஷயம் சீரியசாக அதிலிருந்து அப்புசாமியை சீதை எப்படி மீட்டெடுக்கிறாள் என்பதே கதை.
முற்றிலும் நகைச்சுவையை மட்டுமே மையமாக வைத்து தொடர் எழுதப்பட்டுள்ளது. அத்தோடு தொடர்கதையாக வெளிவந்ததால் ஒரு ஒட்டுமொத்த வடிவு நாவலுக்கு இல்லை. அவ்வப்போதைய வாரத்தின் சுவாரஸ்யத்திற்காக ஒவ்வொரு அத்தியாயத்தில் முடிவிலும் சேர்க்கப்படும் வெற்றுத் திருப்பங்கள் ஒட்டுமொத்த நாவலை முற்றிலும் சுவாரசியமற்றதாக்கிவிடுகிறது. என்னதான் நகைச்சுவை நாவலென்றாலும் குறைந்த பட்ச அளவிற்காவது லாஜிக் வேண்டாமா என்ன?
கதையின் ஆசிரியர் ஜ.ரா.சுந்தரேசன் பிராமணக் குடும்பத்தை சேர்ந்தவராகையால் கதை முழுவதுமே ஒரே பிராமணச் சாயல். பிராமணக்கதையில் பிராமணச் சாயல் வருவது ஏற்புடையதே. ஆனால் எல்லாக் கதையிலும் பிராமணச்சாயல் வருவதே இடிக்கிறது. பிராமணக்குடும்பத்தில் பிறந்து பிராமணச்சாயல் இல்லாமல் எழுத முயன்றவர்கள் குறைவு. எழுதியவர்கள் வெகு குறைவு போலும்.
2017 ல் நான் இந்நாவலைப் படிக்கிறேன். ஒட்டு மொத்த நாவலிலும் ஒரிரு இடங்களைத் தவிர்த்து நகைச்சுவை இல்லை. ஒருவேளை நகைச்சுவை என்பதற்கான வரையறை இந்த 54 ஆண்டுகளில் மாறிவிட்டதோ? இல்லை அந்தக்காலத்திலும் நகைச்சுவை இல்லாமலே நகைச்சுவைத் தொடராக பிரசுரிக்கப்பட்டதோ என்னவோ?
அதீத நேரமிருந்தால், படிப்பதற்கு வேறு புத்தகங்களே இல்லையென்றால் படிக்கலாம்.
it is not brahmin centric novel. It is based on brahmin characters. If you see seetha paati is wearing madisar. so it is natural. Again humour comes naturally in brahmin society. Other societies are little dry even todays standards. Needs talent to appreciate subtle comedy.