பாரசீகக் கவிஞர் உமார் கய்யாமின் பாடல்களை கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் தமிழில் மொழிபெயர்த்திருந்தார். அந்தப் பாடல்களையும் அதற்கான பொருள்களையும் கமலா முருகன் என்பவர் தொகுத்திருக்கும் நூல் இது.
நேரடியான மொழிபெயர்ப்பு கிடையாது. அதாவது தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் அந்தக் கருவை நம் மொழியில் வடித்துள்ளார். ஒரு கவிதையில் கம்பராமயணம் பற்றிக் கூட உண்டு.
பொதுவாக இந்த நூலில் உள்ள பாடல்கள் மூன்று வகையாக இருக்கின்றன. ஒன்று வாழிவின் நிலையாமை பற்றிய பாடல்கள்.
உதாரணமாக,
புலர்ந்து விடியும் பொழுதினிலே
பொய்கைக் கரையஞ் சோலையிலே
மலர்ந்து நல்ல மணம் வீசி
மகிழும் மலர்கள் ஆயிரமாம்;
உலர்ந்து வாடிச் சேற்றினிலே
உதிரு மவையும் ஆயிரமாம்;
கலந்த உலக வாழ்வை இதில்
கண்ணாற் கண்டு தெளிவாயே!
மலர்ந்த மலர்களைக் காணும் நாம் உதிர்ந்து விழும் மலர்களை நோக்குவதில்லை, அது போலவே இவ்வுலக வாழ்வு என்ற பொருளில்.
இரண்டாவதாக இறைவன் என்பவன் எல்லோரிடத்திலும் ஒரே மாதிரியாக இருப்பவன். அவனிடத்தில் தன்னை வணங்குபவர், வணங்காதவர், நன்மை செய்தவர், தீமை செய்தவர் போன்ற வேறுபாடுகள் கிடையாது போன்ற பாடல்கள்.
மூன்றாவது வாழ்வினை அனுபவிப்பது. உதாரணமாக மது போன்றவை. நம்மைப் படைத்த இறைவனே அதனையும் படைத்ததனால் அவை தவறாகாது. தவறு சரியெல்லாம் நமக்கு நாமே கற்பித்துக் கொண்ட கற்பிதங்கள் போன்ற பாடலகள்.
நம்முடைய முந்தைய வாசிப்புக்கு ஏற்ப இப்பாடல்களின் பொருள்கள் நமக்கு ஆழமாகத் தோன்றும். வாசிக்க வேண்டிய நூல்.