ஹிட்லரின் இளமைக்காலம், முதலாம் உலகப்போரில் அவருடைய பங்கு, இரண்டாம் உலகப்போர் மற்றும் அதன் தொடக்கத்திற்கான காரணங்கள், முடிவு போன்ற நிகழ்வுகளின் தொகுப்பே இந்நூல்.
ஹிட்லரின் மனதில் சிறுவயதிலேயே எப்படி யூதர்கள் மீதான வெறுப்பு உண்டானது என்பது ஆச்சரியமான ஒன்று. முதலாம் உலகப்போரின் போது இருந்த மற்ற ஜெர்மானியக் கட்சிகள் யூதர்களே ஜெர்மனியின் தோல்விக்கும், ஜெர்மனியின் வளர்ச்சிக்குத் தடையெனவும் முழங்கினர். அது அவர்களின் கட்சி வளர்ச்சிக்கு அவசியமான ஒன்றாக இருந்தது. அது ஹிட்லரின் மனதில் ஆழப்பதிந்ததன் தாக்கத்தினை பின்னாளில் அவருடைய கொள்கைகளிலும், அவர் ஆற்றிய உரைகளிலும் அறியலாம்.
மற்றொன்று இரண்டாம் உலகப்போரிற்கான காரணங்கள் உருவான விதம். முதலாம் உலகப்போருக்குப் பின்னர் ஜெர்மன் ராணுவத்திற்காக கட்சி ஒன்றினை உளவு பார்க்கும் ஹிட்லர் பின்னர் அதனில் இணைந்து அக்கட்சியின் தலைமைக்கு உயர்ந்து அரசைக் கைப்பற்ற முயற்சி செய்கிறார். அதற்காக அவருடைய கட்சி தடை செய்யப்படுகிறது, அவரும் சிறையில் அடைக்கப்படுகிறார். பின்னர் விடுதலையாகி தேர்தல் மூலம் ஆட்சியினைக் கைப்பற்றி இரண்டாம் உலகப்போரினைத் துவக்கி தோல்வியில் முடிகிறார்.
ஹிட்லர் பற்றியும், இரண்டாம் உலகப்போருக்கான காரணங்கள் பற்றியும், இரண்டாம் உலகப்போரின் முக்கிய நிகழ்வுகள் குறித்தும் அறிந்து கொள்ள சிறந்த தொடக்க நூல்.