ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள், அரசிலும், ஏனைய அரசு நிறுவனங்களிலும் புகுத்தும் இந்துத்துவ செயல்பாடுகளை விவரிக்கும் நூல். தனித்தனிக் கட்டுரைகளாக வெளிவந்தவற்றை ஒன்று சேர்த்து வெளியிட்டுள்ளனர். அதனால் இதற்கு ஒட்டுமொத்த வடிவமென்ற ஒன்று இல்லை. எந்தக் கட்டுரையை வேண்டுமானாலும் படிக்கலாம்.
இந்த நூலை அதன் தலைப்பின் பொருட்டே தேர்வு செய்தேன். காரணம் இந்நூல் இந்துத்துவத்தின் அனைத்து முகங்களையும் காட்டுமென்று. ஆனால் அதன் கோர முகத்தினை மட்டும் மிகவும் கோரமாகக் காட்டியிருக்கிறது.
பெரும்பாலான தகவல்களும் குற்றச்சாட்டுக்களும் 1998 க்கும் 2004 க்கும் இடைப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிக்காலத்தினைப் பற்றியவை. அக்காலத்தில் பாரதிய ஜனதா அரசு மேற்கொண்ட இந்துத்துவம் சார்ந்த ஒற்றைப்படை நிலைப்பாடுகளையே இக்கட்டுரைகள் விவரிக்கின்றன. உதாரணம், கல்வித்துறையில் இந்துத்துவத்தினை புகுத்திய நிகழ்வுகள், பாடத்திட்டத்தில் வரலாற்றுப் புத்தகங்களில் இந்து தேசியவாதிகளின் விவரங்களை அதிகப்படுத்துதல், இந்து அல்லாதவர்களின் முக்கியத்துவத்தைக் குறைத்தல், அனைத்து அரசு அமைப்புகளிலும் இந்துத்துவம் சார்பானவர்களை பணியமர்த்துதல், சிறுபான்மையினருக்கு எதிரான செயல்பாடுகளுக்கு நேரடியாகவோ மறைமுகவோ ஊக்கமளித்தல் போன்றவை.
ஆர்.எஸ்.எஸ் ன் செயல்பாடுகளை இவரின் அதீத விவரணைகளைத் தவிர்த்துப்பார்த்தால் கூட அவையெல்லாம் மதச்சார்பின்மைக்கான ஆபத்தாக இருப்பதை அறிந்து கொள்ள இக்கட்டுரைகள் உதவுகின்றன. உதாரணமாக சிறுபான்மையினர் தொடர்பான கலவரங்களின் வழக்குகளின் போது பாரதீய ஜனதா ஆட்சியில் இருந்த காலங்களில் அவையெல்லாம் எப்படி நீர்த்துப் போயின? அரசு எப்படி மறைமுகவாகவோ அல்லது நேரடியாகவோ ஆதரவளித்தது போன்றவற்றை சில கட்டுரைகளில் சிறப்பாக விவரித்துள்ளார்.
காந்தி, நேரு போன்ற மதச்சார்பற்ற தலைவர்களுக்கு நிகராக சாவர்க்கர், கோல்வால்கர் போன்ற இந்து தேசியவாதிகள் பாரதீய ஜனதா அரசினால் எப்படித் திட்டமிட்டு மிகப்பெரிய சுதந்திர போராட்டத் தலைவர்களாக சித்தரிக்கபடுகிறார்கள் போன்றவற்றை சில கட்டுரைகளில் நன்கு ஆழமாக விவரித்துள்ளார் மார்க்ஸ்.
எந்த அளவிற்கு இந்துத்துவர்களின் பிற மத வெறுப்பு ஏற்கப்படக்கூடியது இல்லையோ அந்த அளவிற்கு இந்துத்துவ வெறுப்பு நிலைப்பாடும் ஏற்புடையது அல்ல. அதுவே இந்நூலின் ஒவ்வொரு கட்டுரையிலும் உள்ளது. அத்தகைய ஒற்றைச் சார்பு நிலையே இந்தக் கட்டுரைகளின் மிகப்பெரிய குறை. அதுவே ஒற்றைப்படையாக, இந்துத்துவத்தினை/இந்துக்களை முன்முடிவுகளோடு அணுக்கக்கூடியவர்களுக்கான நூலாக இதனை ஆக்குகிறது. நான் இந்த நூலினை வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹாவின் புத்தகங்களினைப் போல எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தேன். ஏனெனில் இப்புத்தகத்தில் அத்தகைய நடுநிலைமை முற்றிலும் இல்லை.
உதாரணமாக இந்துத்துவ வாதிகளின் தவறுகள் மிக விரிவாக பல பக்கங்களுக்கு விவரித்து எழுதப்படுகின்றன. ஆனால் அது தொடர்பான இஸ்லாம் சார்ந்த தவறுகள் ஒற்றை வரியில் கடந்து செல்லப்படுகின்றன. பெரும்பாலான கட்டுரைகள் இந்த வகையிலேயே இருக்கின்றன. இந்தப்புத்தகம் இந்துத்துவத்தின் பன்முகங்களை மட்டுமே பேசுவதாக இருக்கலாம், அதற்காக ஒரே நிகழ்வின் ஒரு பக்கத்தினை மட்டும் பல பக்கங்களுக்கு சொல்லிவிட்டு மறுபக்கத்தினை சொல்லாமல் அல்லது ஒற்றை வரியில் சொல்லிவிட்டு செல்வது எத்துனை அபத்தம்? அதையே செய்திருக்கிறார் மார்க்ஸ்.
அத்தோடு இந்துத்துவ தவறுகளை சுட்டிக்காட்டும் தலைவர்களையும், நீதிபதிகளையும் புகழ்வது, அவர்களை நேர்மையாளராகக் காட்டுவது, அதுவே அவர்கள் இந்துத்துவர்களைப் பாராட்டும்பொழுதோ அல்லது இந்துத்துவர்கள் அல்லாதவர்களை விமர்சிக்கும்பொழுதோ அவர்களை ஆர்.எஸ்.எஸ் ன் ஆதரவாளராகக் காட்டுவது போன்றவை ஏறத்தாழ அனைத்து கட்டுரைகளிலும் உள்ளன.
மற்றொன்று வார்த்தைகளை தன் நிலை சார்ந்து உபயோகப்படுத்தியுள்ளமை. ஒரு நிகழ்வின் இரு தரப்பு செயல்பாடுகளை வேறு வேறு வார்த்தைகளைக் கொண்டி குறிப்பிடுவது. இந்துத்துவ மதவெறிக்கும்பல் என்று ஒருபுறம், மறுபுறம் விரக்தியடைந்த இளைஞர்கள் என. இந்துத்துவ சக்திகள் என ஒருபுறம், இஸ்லாமிய இளைஞர்கள் என மறுபுறம். இதுபோன்ற சொல்லாடல்களால் இந்தப்புத்தகம் ஒரு நடுநிலையாளருக்கான புத்தகமாக இல்லை. ஒரு தரப்பு புத்தகமாக மட்டுமே இருக்கிறது. வாசிக்கலாம்.