ரஷ்யாவின் ஜார் மன்னர்களின் ஆட்சி புரட்சியின் மூலம் ஒடுக்கப்பட்டு கம்யூனிச அரசு புரட்சியின் வழியாக 1917 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நிகழ்வே ரஷ்யப்புரட்சி. ஒற்றை வரியில் கடந்து சென்றாலும் 1900 களின் ஆரம்பகால ஆண்டுகளிலேயே ஜார் மன்னர்களுக்கு எதிரான கலகங்கள் தொடங்கி அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்று வந்தன. குறிப்பாக பண்ணையடிமை முறைக்கு எதிரான கலகங்கள்.
இதற்கிடையில் ஆங்காங்கே சில பெயர்களில் சில குழுக்கள் போராட்டங்களை ஒருங்கிணைத்தன. ஆனாலும் அவையெல்லாம் ஒருங்கிணையாமல் நடைபெற்றன. அச்சமயத்தில் மார்க்ஸ் எங்கல்ஸ் இருவரின் சிந்தனைகளும் பரவலாகப் பரவிக்கொண்டிருந்தன.
இந்நிலையில் லெனினுடைய பிரவேசம் ஆரம்பமாயிற்று. தன்னுடைய சகோதரனின் வாயிலாக மூலதனம் புத்தகம் அவருக்கு அறிமுகமாயிற்று. இதற்கிடையில் அவருடைய சகோதரர் ஜார் மன்னனைக் கொலை செய்ய முயற்சி செய்தமைக்காக தூக்கிலிடப்பட்டார்.
இதன் பின்னர் தீவிர புரட்சியில் ஈடுபட்ட லெனின் மாணவர்களை தீவிர அரசியல் புரட்சி வட்டத்தில் இணைத்தமைக்காக நாடு கடத்தப்பட்டார். அங்கே பல்வேறு மார்க்சிய நூல்களை வாசித்த லெனின் பின்னர் விடுதலைக்குப்பின்னர் மற்றுமொரு மார்க்சியக் குழுவை உருவாக்கினார்.
இதன் பின்னர் பிளக்கானோவ், மார்க்ஸ் போன்ற கருத்தாக்க வாதிகளை பல்வேறு சமயங்களில் சந்தித்திருந்த லெனின் ஜார் அரசை வீழ்த்துவதற்காக தொழிலாளர் போராட்டங்கள் வாயிலாக முயன்றார். பல்வேறு பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிய, ஒவ்வொரு புதிய போராட்டமும் அதற்கு முந்தைய போராட்டத்தினை விட வீரியமாக இருந்தது. ஜார் அரசாங்கத்திற்கு தெரியாமல் மறைந்திருந்து இத்தகைய நடவடிக்கைகளில் சில காலம் ஈடுபட்டார். பின்னர் 1917 ல் நடைபெற்ற போராட்டத்தில் ஜார் அரசு நீக்கப்பட்டு கம்யூனிச அரசு லெனின் தலைமையில் அமைக்கப்பட்டது.
ரஷ்யப்புரட்சி தொடர்பான நிகழ்வுகளை தொகுத்து இந்நூலில் விவரித்திருக்கிறார் என்.ராமகிருஷ்ணன். ஒட்டுமொத்த உலகில் அமைக்கப்பட்ட முதல் கம்யூனிச அரசு அது. மிக விரிவாக வாசிக்கவேண்டிய நிகழ்வாக இருப்பினும் ஆரம்ப கால புரிதலுக்காக இந்த புத்தகத்தினை வாசிக்கலாம்.