சமீபத்தில் என்னை மிகவும் பாதித்த புகைப்படம் இது. நெல் வயலுக்கு டிராக்டரில் கொண்டுவந்து நீர் பாய்ச்சுகிறார்கள் இல்லை ஊட்டுகிறார்கள். தமிழகத்தின் தேனி மாவட்டத்தில்தான் இந்த நிலை. கேரள எல்லையை ஒட்டி மேற்கு மலைத்தொடருக்கு அருகே இருக்கும் மாவட்டத்திலேயே இந்நிலையென்றால் மற்ற மாவட்டங்களின் நிலைகளை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கிக்குடிப்பதையே மிகப்பெரிய ஆச்சரியமாகப் பார்த்தவன் நான். நெல்வயலுக்கு நீர் ஊட்டுவதைப் பார்க்கும்பொழுது இனம்புரியாத வலி இந்த நெஞ்சுக்குள்.
எப்பொழுதாவது எங்கள் கிராமத்தில் இருந்து சென்னைக்கோ அல்லது பிற ஊர்களுக்கோ செல்லும் பொழுது வழியில் பேருந்து எங்காவது நிற்கும்பொழுது அண்டாவில் குடிநீர் வைத்திருப்பார்கள், ஒரு சங்கிலி டம்ளரோடு. அதைத்தான் பெரும்பாலும் எல்லோரும் குடிப்பார்கள். யாராவது ஒரு சிலர் குடிநீர் பாட்டிலை வாங்குவார்கள். அவர்களை ஆச்சரியமாகப் பார்ப்பேன். அவர்கள் தங்களை மேன்மை பொருந்திய மக்களாக நினைத்திருப்பார்களோ என்னவோ? குடிக்கும் நீரை காசு குடுத்து வாங்குவார்களா என்ன என்று எனக்குத் தோன்றும்.
ஆனால் இன்று நிலைமை அப்படியா என்ன? எந்த இடத்திலும் அண்டாவும் இல்லை, தண்ணீரும் இல்லை. ஆனால் குடிநீர் பாட்டில்கள் இருக்கின்றன. யாரைக் குற்றம் கூற முடியும்? எல்லோர் பக்கமும் அவரவர் நியாயங்கள், காரணங்கள். வாழ்க குடிநீர் பாட்டில் கம்பெனிகள்.
ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் வெளியிட்டுள்ள குடிநீர் பற்றாக்குறை தொடர்பான அறிக்கையின்படி உலகின் பதினோரு நகரங்கள் விரைவில் நீரற்ற நிலைக்கு செல்லப் போகிறதாம். அதில் ஒன்று பெங்களூர் நகரமாம். இதனை ஐக்கிய நாடுகள் ஏன் சொல்ல வேண்டும்? நானே சொல்கிறேன், இதை வாசிக்கும் நீங்களும் நானும் மரணிப்பதற்குள் நீர் இல்லா நிலையைப் பார்த்துவிட்டுதான் சாகப்போகிறோம். பெங்களூருதானே நம்ம ஊருக்கென்ன என்று நினைக்காதீர்கள். பெங்களூரு திங்கட்கிழமை என்றால் சென்னை வெள்ளிக்கிழமை, உங்கள் ஊரும் என் ஊரும் அடுத்த வெள்ளிக்கிழமை, அவ்வளவுதான்.
நாளுக்கு நாள் நம்முடைய ஏரிகளும் சுருங்கிக்கொண்டே வருகின்றன. குடியிருப்புகளை ஆக்கிரமித்திருந்த ஏரிகளை மக்கள் மீட்டுக்கொண்டு வருகிறார்கள் போலும்.
வருடா வருடம் அரசு ஏரிகளின் தூர்வார்லுக்கென ஒதுக்கும் தொகையை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆனால் ஏரிகளின் கொள்ளளவும், பரப்பளவும் மட்டும் குறைந்து கொண்டே போகின்றது. இந்த கணக்கு மட்டும் எனக்குப் புரிபடுவதே இல்லை.
யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்?