நீண்ட நாட்களாக கேள்விப்பட்டுக்கொண்டு இருந்த, ஆனால் வாசித்திராத ஒரு நாவல். ஜெயகாந்தன் அவர்களால் எழுதப்பெற்று தொடர்கதையாக வெளிவந்தது.
கதை நாயகி கங்கா பாலியல் ரீதியாகப் எதிர்பாராமல் பாதிக்கப்படுகிறாள். அதன் காரணமாக அவள் வாழ்வில் எதிர்கொள்ளும் நிகழ்வுகளே நாவலின் சுருக்கம். கங்கா முற்போக்கிற்கும், பிற்போக்கிற்கும் இடையில் அல்லாடும் ஒரு பெண். இந்நாவல் வெளிவந்தது 1970. பெண் கல்வி, வேலைக்கு செல்வது தொடர்பாக தீவிர விவாதங்கள் நடைபெற்ற கால கட்டம் அது. ஒரு தரப்பில் பெண் கல்வி கற்கச் செல்வதும், வேலைக்கு செல்வதும் ஒழுக்கக்கேட்டினை உருவாக்கும் என தீவிரமாக முன்வைக்கப்பட்டது. மறுதரப்பில் அதற்கு எதிரான ஆதரவுக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அச்சூழ்நிலையில் வெளிவந்த இந்நாவல் அது தொடர்பான பல்வேறு விவாதங்களை உருவாக்கியது. இந்நூலைப் பற்றிய ஓர் விமரிசனக் கட்டுரையில் எழுத்தாளர் ஜெயமோகன், அக்காலகட்டத்தில் உருவான அத்தகைய கருத்து மோதல்கள் இந்நாவல் மீதான உண்மையான ஆழமான வாசிப்பினை மழுங்கச்செய்துவிட்டதாகவும், இந்நூல் மீள்வாசிப்பு செய்யப்பட வேண்டும் என்றும் தன்னுடைய ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார்.
இருப்பினும் இந்நாவல் அக்காலத்தில் மிகப்பிரபலம் அடைந்தது. இந்நாவல், இதே பெயரில் பின்னாளில் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. அக்காலகட்டதின் பின்புலத்தை ஏற்கனவே வாசிப்பின் மூலமாகவோ அல்லது அனுபவத்தின் மூலமாகவோ அறிந்த ஒருவருக்கு இந்நாவல் காட்டும் சித்திரம் வேறாக இருக்குமென நினைக்கிறேன். இந்நூலை வாசித்த பின்னர் இந்நூல் தொடர்பான பல்வேறு விமரிசனங்களை வாசித்தேன். பல்வேறு பட்ட கோணங்களில் பல்வேறு விமரிசனங்கள். வாசிக்க வேண்டிய புத்தகம்.
ஜெயமோகனுடைய தளத்தில் இந்நூல் தொடர்பான பல்வேறு கட்டுரைகள் உள்ளன. சில இங்கே.
https://www.jeyamohan.in/98338
https://www.jeyamohan.in/98456