அராத்து அவ்வப்போது ஃபேஸ்புக்கில் எழுதிய குறுங்கதைகளை உயிர்மை பதிப்பகம் நூலாக வெளியிட்டிருக்கிறார்கள். எதேச்சையாக கண்ணில் பட்ட நூல், இந்நூலின் வெளியீட்டு விழாவில் சாருவும், ஜெயமோகனும் கலந்துகொண்ட நினைவு. அதனால் இப்புத்தகத்தை வாசிக்கலாம் என நினைத்து எடுத்து வந்தேன்.
ஒட்டுமொத்த நாவலின் பெரும்பான்மை பேசுபொருள் உடலுறவு. காமம் அல்ல. இதற்கு பாலுறவுக் கதைகளாகவே வெளியிடப்படும் கதைகள் எவ்வளவோ பரவாயில்லை. அவர்கள் அவர்களுடைய கதைகளை உலகத்தர நாவல் என்றோ அல்லது தமிழின் முதல் ஃபோர்னோ நாவல் என்றோ இன்ன பிற என்றோ விளக்குவதில்லை, இந்நாவாலைப்போல். ஒரு ஒப்பீட்டுக்கு சொல்வதானால் நூற்றுக்கு ஐந்து மதிப்பெண்கள் தரலாம். அந்த ஐந்து மதிப்பெண்களும், ஆங்காங்கே விரவியிருக்கும் ஒரு சில வார்த்தை விளையாட்டுகளுக்காக. உதாரணமாக கதைசொல்லியே வாசகனாக வெளியே வந்துவிட்டு மீண்டும் உள்ளே செல்வது, எழுத்தாளர்களின் உலகிற்குள் பிரவேசிப்பது போன்றவை. ஆனால் அதிலுள்ள மற்றொரு பிரச்சினை அராத்து ஒரு தருணத்தில் இம்முறையைக் கண்டுகொள்கிறார். அதன் பின்னர் பெரும்பாலான கதைகளில் இதே டெம்ப்ளேட்கள்.
இதற்கெல்லாம் உச்சம், சாரு அவர்களது முன்னுரை. ஏன் இத்தனை அபத்தமான நூலுக்கு இத்தனை பெரிய முன்னுரை. அவரே கூறியிருக்கிறார் ஒருவர் மற்றவரை உயர்த்திப்பிடிக்க முடியாதென்று. உண்மை. அப்புறம் எதற்காக இந்த நாவலுக்கு இத்தனை உயர்வான முன்னுரை.
எந்த எழுத்தும் நல்ல எழுத்தே, எந்த வாசிப்பும் நல்ல வாசிப்பே என கருதுபவன் நான். இந்நூல் அராத்து எதிர்காலத்தில் ஒரு சிறந்த நூலை எழுதுவதற்கான முயற்சியாக அமையட்டும். வாசகர்களுக்கு எப்படி ஒரு நூலை எழுதக்கூடாது என்பதற்கான அறிதலாக இருக்கட்டும்.