தமிழக,இந்திய அரசியல் தொடர்பான எந்த ஒரு நிகழ்வையும் வரலாற்றுத்தகவல்களோடு அணுகவேண்டும், அன்றாட வெற்று அரசியல் கூப்பாடுகளுக்கு செவி மடுக்கக்கூடாது என்ற நினைப்பு எனக்கு எப்பொழுதும் உண்டு. அதனால் பெரும்பாலான நிகழ்கால அரசியல் விவாதங்களில் என்னுடைய கவனத்தை முற்றிலுமாக நான் தவிர்த்து விடுவதுண்டு. கடந்த ஒரு மாதங்களில் ஏதேனும் ஓர் ஊடகத்தில் வெளிவந்த விவாதங்களை ஒட்டுமொத்தமாக தொகுத்துப் பாருங்கள். அவையெல்லாம் வெற்றுக் குப்பைகள், அன்றன்றைய சொறிதலுக்கு மட்டுமேயானவை என்பது தெரியும். அதன் காரணமாகவே இந்த வெற்று நுரை கொப்புளிக்கும் சமயத்தில் நான் அவற்றில் கவனம் செலுத்துவதில்லை.
உண்மையிலேயே அவை முக்கியமானவையா இருக்கும்பட்சத்தில் அவை கண்டிப்பாக நீடிக்கும். நுரையொழிந்த பின்னர் ஆழப்புரிந்து கொள்ளலாம். கடந்த சில ஆண்டுகளாக நான் பின்பற்றும் முறை இதுவே.
அந்த விதத்தில், சமீபத்திய சசிகலா மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீதான வருமான வரித்துறையின் திடீர் சோதனை தொடர்பாக தோன்றிய எண்ணங்கள் இவை. இந்த ரெய்டு நடந்தது கடந்த 2017 நவம்பர் மாதம். இதனை எழுதும் இப்போது வரை பத்து மாதங்கள் முடிந்து விட்டது. இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று யோசித்திருக்கிறோமா? யோசிக்க வேண்டியதில்லை. உருப்படியாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 187 இடங்களில் நடத்தப்பட்ட சோதனை இந்திய வரலாற்றின் மிகப்பெரும் சோதனைகளில் ஒன்று எனக் கூறப்படுகிறது.
இதில் மிகவும் அப்பட்டமாக தெரியும் ஒரு விஷயம் என்பது இது முற்றிலும் அதிகார துஷ்பிரயோகம் என்பதுதான். சசிகலா குடும்பத்தினரை அல்லது அதிமுக அதிகார வர்க்கத்தின் முக்கிய நபர்களை சிக்க வைத்து அதன் மூலமாக தமது அதிகாரங்களை அல்லது விருப்புகளை மறைமுகமாக செயல்படுத்த மத்திய அரசு செய்யும் முயற்சிதானே இது.
இதில் நான் மிகவும் வருத்தமடையக் காரணம், நாம் அரசியலமைப்புச்சட்டத்தின் மீது கொண்டுள்ள அடிப்படையை நம்பிக்கையை இது போன்ற செயல்பாடுகள் நிலைகுலையச் செய்கிறது. பாரதிய ஜனதா கட்சியோ, இல்லை காங்கிரஸ் கட்சியோ இதுபோன்ற ஒரு செயலினை செய்திருந்தால், எனக்குக் கவலையில்லை. செய்தது இந்திய அரசு.
ஒருவேளை உண்மையிலேயே வருமான வரித்துறையின் சோதனையின் நோக்கம், வரி ஏய்ப்பு செய்வதைக் கண்டுபிடிப்பதாக இருந்தால் அது தொடர்பான நடவடிக்கைகளை, சோதனை செய்த வேகத்தில் பத்தில் ஒரு பங்காவது செய்ய வேண்டும்தானே! ஏன் செய்யவில்லை?
தன்னாட்சி பெற்ற அனைத்து அதிகார அமைப்புகளையும் தனது ஆதரவாளர்களால் நிரப்பு தன் விருப்பப்படி செயல்பட வைக்கிறது மத்திய அரசு. நண்பர்களே இது எத்தனை மோசமான ஒரு செயல்பாடு? இந்திய அரசியல் சட்டம் தன்னாட்சி பெற்ற அமைப்புகளை உருவாக்கியதன் நோக்கம் அரசியல் காரணங்களுக்காக அவை எக்காரணத்தாலும் பயன்படுத்தப்படக் கூடாது என்பதனால்தானே? தேர்தல் ஆணையம்,ரிசர்வ் வங்கி, நீதிமன்றம் போன்றவை அவ்வாறுதானே உருவாக்கப்பட்டன.
நன்றாக சிந்தித்துப்பாருங்கள். பாரதிய ஜனதா ஆட்சி நடைபெறும் போது ஏதாவது பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களின் இல்லங்களிலோ, நிறுவனங்களிலோ வரிச்சோதனை நடத்தப்படுகிறதா? இல்லை. சரி காங்கிரஸ் ஆட்சிக்காலத்தின் போது யாராவது காங்கிரஸ் தலைவர்கள் வீடு அல்லது நிறுவனங்களில் வரிச்சோதனை நடத்தப்படுகிறதா? இல்லை. ஒருவர் மற்றவர் மீது சோதனை நடத்திக்கொள்கிறார்கள். ஏதோ ஒரு விதத்தில் சமரசம் செய்து கொள்கிறார்கள். அரசியல்வாதிகள் தொடர்பாக நடைபெற்ற சோதனைகளின் எண்ணிக்கையையும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் எண்ணிக்கையும் ஒப்பிட்டுப்பார்த்தால் இவர்கள் எவ்வளவு கீழ்த்தரமாக செயல்படுகிறார்கள் என்பது தெரியும். இவர்கள் யாரை ஏமாற்றுகிறார்கள்? உங்களையும் என்னையும்தானே? ஒரு கட்சியின் ஆட்சியில், எதிர்க்கட்சி மீது நடத்தப்படும் சோதனை என்பது இயல்பானதுதான் என நம்மையும் இவர்கள் இவர்களின் தொடர் செயல்பாடுகள் மூலம் ஏதோ ஒருவிதத்தில் நம்ப வைக்கிறார்கள் தானே?
யாராவது ஏதாவது ஒரு அரசியல்வாதி மீது நடத்தப்பட்ட வரிச்சோதனையின் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று கேட்டுப்பாருங்கள். பதில் கூற மாட்டார்கள் அல்லது ஏதாவது ஒரு வெற்றுப் பதிலைக் கூறுவார்கள். ஆட்சியாளர்களிடம் கேளுங்கள், அது அவ்வமைப்பின் தன்னாட்சி செயல்பாடு. அதில் அரசு தலையிட முடியாது என்று விளக்கம் கூறுவார்கள். சரி இவர்கள் தானே ஆட்சியாளர்கள்? அந்த தன்னாட்சி அமைப்புகள் குறிப்பிட்ட கால அளவிற்குள் நடவடிக்கை எடுக்கும் வண்ணம் அவ்வமைப்புகளில் மாற்றத்தை கொண்டு வருவார்களா? மாட்டார்கள். ஏனெனில் அதை இயக்குவதே இவர்கள்தான். அதில் மாற்றம் என்பது இவர்களை இவர்களே மாட்டி விடுவது. எப்படி செய்வார்கள்? காங்கிரஸ், பாஜக என யாரும் இதற்கு விதிவிலக்கல்ல.
நண்பர்களே, இங்கே நடைபெறுவது சட்டத்தின் ஆட்சி அல்ல. சட்டத்தை நிறைவேற்றுபவர்களின் ஆட்சி.