2017 ஆம் ஆண்டு வெளிவந்த அனிமேஷன் திரைப்படம். 2010 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்த The Boss Baby என்ற புத்தகத்தினை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
கதைச்சுருக்கம் இதுதான்.
கதை எதிர்காலத்தில் நடைபெறுகிறது. டிம் தன்னுடைய குழந்தைக்கு தன்னுடைய சிறு வயதுக்கதையைக் கூறுவதாகப் படம் தொடங்குகிறது. டிம் தன்னுடைய பெற்றோருக்கு ஒரே பையன். செல்லமாகவும் புத்திசாலித்தனமாகவும் வளர்ந்து வருகிறான். டிம்மின் பெற்றோர் பப்பிஸ் கார்ப் என்ற நாய்க்குட்டிகளை விற்பனை செய்யும் கம்பெனியில் பணியாற்றுகின்றனர். பரபரப்பான வேலைக்கு மத்தியிலும் டிம்மிற்கான நேரத்தை அவனுடன் செலவிடுகின்றனர். இதற்கிடையில் தன் வீட்டிற்கு பிஸினஸ் சூட் உடையணிந்து வரும் ஒரு குழந்தையை மாடியிலிந்து பார்க்கிறான் டிம். அக்குழந்தை விசித்திரமாக இருப்பதைக்கண்டு விரைவாக தன்னுடைய அறையில் இருந்து கீழே வருகிறான். அதற்குள்ளாக அக்குழந்தையை அவன் பெற்றோர் அவனை டிம்மின் தம்பி என அறிமுகம் செய்கின்றனர்.
மறுபுறம், பேபி கார்ப் என்ற கம்பெனி மக்களுக்கு குழந்தைகளை டெலிவரி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறது. குழந்தை வேண்டுபவர்களுக்கு குழந்தை அனுப்பி வைக்கப்படும். அப்படி அனுப்பப்பட்ட ஒரு குழந்தைதான் டிம் வீட்டிற்கு வந்த குழந்தை. வந்த வெகு சில நாட்களில், டிம்மின் பெற்றோர் அக்குழந்தையோடே அதிக நேரம் செலவிடுவதாக டிம் என்னுகிறான். தன்னுடைய தூக்க நேரத்துக் கதைகளையும், பாடலையும் கூட பெற்றோர் தனக்காக தற்போது செய்வதில்லை என எண்ணுகிறான் டிம்.
அதனால் அக்குழந்தையை அதிகம் கவனிக்கும் டிம் வெகு விரைவிலேயே அக்குழந்தை சராசரிக்குழந்தை அல்ல அன்றும் அக்குழந்தையால் பெரியவர்களைப்போல் பேசவும் சிந்திக்கவும் முடியும் என்பதை அறிந்து கொள்கிறான். அக்குழந்தையிடமும் அதனைக்கூறி, அது யாரெனக் கேட்கின்றான். அக்குழந்தை தன்னை பாஸ் எனக் கூறிவிட்டு தன்னுடைய பணியில் எந்த தொந்தரவும் செய்யாமல் இருக்குமாறு டிம்மிடம் கூறுகிறது. அது மட்டுமல்லாமல் அக்குழந்தையோடு அக்கம் பக்கத்திலிருக்கும் வீடுகளிலிருக்கும் குழந்தைகள் ஒன்று சேர்ந்துகொண்டு அவ்வப்போது திட்டங்கள் தீட்டுவதையும், பெரியவர்கள் இருக்கும்பொழுது குழந்தைகளைப்போல நடிப்பதையும் டிம் காண்கிறான். அவைகளும் சராசரிக் குழந்தைகள் அல்ல என்பதையும் அறிந்து கொள்கிறான்.
தன்னுடைய பெற்றோருக்கு இதனைத் தெரிவிக்க பல்வேறு வழிகளில் முயற்சிக்கிறான் டிம். ஆனால் அக்குழந்தைகளெல்லாம் ஒன்று சேர்ந்து டிம்மின் முயற்சியை முறியடித்துவிடுகின்றன. இதனை நம்ப மறுக்கும் டிம்மின் பெற்றோர், டிம்மின் குழந்தைக்கு எதிரான செயல்பாடுகளால் அவனை தனியறையில் அடைத்துவிடுகின்றனர். அப்போது டிம்மிடம் பேசும் அக்குழந்தை தன்னைப்பற்றிய அனைத்து உண்மைகளையும் டிம்மிடம் கூறுகிறது. பெரியவர்களிடத்தில் குழந்தைகள் மீதான அன்பு குறைந்து நாய்கள் மீதான பிரியம் அதிகரித்து விட்டதாகவும், இந்நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் அனைவரும் குழந்தைகளை விரும்பாமல் நாய்களையே விரும்ப நேரிடும் என்றும் கூறுகிறது. இந்நிலையில் நாய்களை விற்பனை செய்யும் பப்பீஸ் கார்ப் நிறுவனம் புதியதாக ஒரு நாய்க்குட்டியை அறிமுகம் செய்யவிருப்பதாகவும் அதனைப் பற்றிய தகவல்களை அறிந்து செல்வதற்காகவே தான் வந்திருப்பதாகவும் கூறுகிறது.
எப்பொழுதுமே குழந்தையாக இருப்பதற்கு ஒரு விஷேச பானத்தினை அருந்திக்கொண்டிருப்பதாகக் கூறும் அக்குழந்தை, தான் பிறக்கும் பொழுதே பெரியவர்களுக்கான குணாதிசயங்களோடு பிறப்பதாகவும் கூறுகிறது. மேலும் அந்த பானத்தினை அருந்தாமல் விட்டுவிட்டால் தான் சாதாரணக் குழந்தையாகிவிடுவேனென்றும் கூறுகிறது. டிம்மின் பெற்றோர் பப்பீஸ் கார்ப்பில் வேலை செய்வதால் தனக்கு உதவும்படி டிம்மிடம் கேட்கிறது. தன்னுடைய வேலையை முடித்துவிட்டால், தான் பேபி கார்ப் கம்பெனியில் பாஸ் ஆகிவிடுவேன் என்றும், மேலும் டிம் வீட்டிலுரிந்து சென்று விடுவதாகவும் கூறுகிறது. டிம் அதற்கு ஒப்புக்கொண்டு அப்புதிய நாய்க்குட்டி பற்றிய தகவல்களைப் பெறுவதற்கு உதவுகிறான். இக்காலகட்டத்தில் இயல்பாகவே இருவரிடத்திலும் பாசம் ஏற்பட்டுவிடுகிறது. தான் வந்த வேலை முடிந்த பின்னர் பாஸ் குழந்தை திரும்பிச் சென்று விடுகிறது. ஆனால் இருவரும் மற்றவரை நினைத்துக்கொண்டிருக்கின்றனர். இறுதியில் பாஸ் குழந்தைக்கு டிம் தன்னோடு வந்து இருக்கும்படி கடிதம் எழுதுகிறான். மீண்டும் குழந்தையாகி டிம்மிடம் வந்து சேருகிறது பாஸ் குழந்தை.
இப்படத்தினைப் பற்றிய என்னுடைய பார்வை அடுத்த பதிவில்.