ஒவ்வொரு வருடத்தொடக்கத்தின் போதும் புதிதாக ஏதாவது கற்கத் தொடங்குவது வழக்கம். பொதுவாக அவை புத்தக வாசிப்பு தொடர்பானவைகளாகவே இருக்கும். இந்த வருடமும் அவ்வாறே. இந்த வருடத்தில் இவற்றையெல்லாம் செய்ய வேண்டுமென திட்டமிடுகிறேன்
- 50 புத்தகங்களினை வாசித்தல்
இதற்காக எந்த விதிமுறைகளையும் வகுக்கவில்லை. அது 50 பக்க புத்தகமாக இருந்தாலும் சரி 500 பக்க புத்தகமாக இருந்தாலும் அது ஒரு புத்தகம் என்ற அளவுகோல் மட்டுமே. சென்ற வருடத்தில் நான் என்னுடைய தொழில் சார்ந்த தொழில் நுட்ப புத்தகங்களை இந்த வரையறைக்குள் கொண்டுவரவில்லை. அதனால் அப்புத்தகங்களைப் படிக்கும் காலத்தில் திட்டப்படியான புத்தக வாசிப்பில் இடைவெளி விழுந்து, பின்னர் அந்த இடைவெளியே அதனை மேலும் மேலும் பெரிய இடைவெளியாக்கி மீண்டும் அந்த வாசிப்பினைத் தொடங்குவது ஒவ்வொரு புதிய தொடக்கம்போல ஆகிவிட்டது. அதனால் இந்த முறை எல்லா புத்தகங்களையும் இந்தக் கணக்கில் சேர்த்துக் கொண்டாயிற்று. எப்பொழுதும் போலவே இந்த வருடமும் இந்த திட்டதின் செயல்பாடுகளை துல்லியமாக குறித்து வைத்துக்கொண்டு வருவதாகத் திட்டம். திட்டமிடப்பட்ட தேதி,தொடங்கிய தேதி, வாசித்து முடிப்பதற்கு திட்டமிட்ட தேதி,வாசித்து முடித்த தேதி என எல்லாம். அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் திட்டமிட்டதிற்கும் அடைந்ததிற்குமான தெளிவான வரைபடம் கிடைக்கும். இது மிகவும் முக்கியமானது என நான் எப்பொழுதும் கருதுகிறேன். நானே உணர்ந்த உண்மை. 50 புத்தகங்கள் என்பது கிட்டத்தட்ட வாரம் ஒரு புத்தகம். எத்தகைய பணியாயிருந்தாலும் வாசித்து விடவேண்டும் என்ற உறுதியோடு தொடங்குகிறேன். பார்க்கலாம். - 50 கட்டுரைகளைப் பதிவிடுதல்.
அவ்வப்பொழுது கட்டுரைகளை என்னுடைய வலைத்தளத்தில் பதிவேற்றிக்கொண்டிருந்தாலும் இந்த வருடம் அதனை சற்றே முறைப்படுத்த வேண்டுமென விரும்புகிறேன். இரண்டு காரணங்கள், ஒன்று நான் சிந்திக்கும், முக்கியமானதாக கருதும் கருத்துக்களை ஒற்றைப் புள்ளியில் இணைப்பதற்காக. அது எனக்கு ஒரு தெளிவான புரிதலை அளிக்கும், அத்தோடு எதிர்காலத்தில் என்னுடைய இன்றைய மன ஓட்டத்தினைப் பற்றி அறிவதற்கு உதவும். இரண்டாவதாக ஒரு கருத்தினை கட்டுரையாக எழுதுவதால் அது தொடர்பாக விரிவான வாசிப்பினையும், வரலாற்றையும் அறிந்து விட்டு எழுதுவதற்கான காரணம் உண்டாகும். வெறும் ஒற்றைச் செய்தியினை வைத்துக்கொண்டு எழுதுவதோ, விவாதிப்பதோ கூடாதென்பது என்னுடைய அடிப்படைக் கோட்பாடு. அதனால் அவற்றைப் பற்றி ஆழமாக வாடசித்து எழுதத் திட்டம். இக்கட்டுரைகளுக்கு நான் கொள்ளும் விதிகள் இரண்டே. ஒன்று நிகழ்கால செய்திக் கூப்பாடுகளுக்கு மத்தியில் என் பங்கிற்கான கூப்பாடாக அவற்றை எழுதக்கூடாது. அரசியல், சினிமா தொடர்பாக எந்தக் கட்டுரையும் எழுதக் கூடாது. அப்படி எழுதுவதாக இருந்தால் அதன் ஆழ் வரலாற்றோடு கூடியவற்றை மட்டும் அதீத தேவையிருப்பின் எழுத வேண்டும். - தெலுங்கு மொழியினை எழுதவும்,வாசிக்கவும்,பேசவும் செய்வது இது நான் நீண்ட நாட்களாக விரும்பும் ஒன்று. இருப்பினும் இன்னும் எழுத,வாசிக்க,பேசக் கற்கவில்லை. இந்த வருடம் அதற்கான கால வரையறையை நிர்ணயிக்கிறேன். ஒருவேளை என்னால கற்றுக்கொள்ள முடியாமல் போனாலும், என்னால் திட்டமிட்ட காலத்தில் கற்றுக்கொள்ள முடியவில்லை என்ற உண்மையை வெளிப்படையாக நான் உணர்ந்துகொள்ள இது உதவும்.