வெ. இறையன்பு அவர்களால் சுட்டி விகடனில் எழுதப்பெற்று தொடராக வெளிவந்த சுயமுன்னேற்றத் தொடர். சுட்டி விகடனில் வெளிவந்ததால் முற்றிலும் குழந்தைகளை நோக்கி எழுதப்பட்ட கட்டுரைகள். பெரும்பாலும் நீதி போதனைக் கட்டுரைகள். அத்தோடு அந்தந்த காலகட்டத்தின் நிகழ்வுகளை ஒட்டி எழுதப்பட்டவை. உதாரணமாக தேர்வு சமயத்தில் வெளிவந்த இதழில் தேர்வு தொடர்பான சில அறிவுரைகள், விடுமுறைக்கால இதழில் விடுமுறை தொடர்பான சில ஆலோசனைகள். அதனால் இக்கட்டுரைகளை ஒட்டுமொத்தமாகத் தொகுக்கும்போது ஒரு புத்தகத்திற்கான ஒட்டுமொத்த வடிவம் இல்லை.
ஆனால் இது போன்ற நூல்களை சிறுவர்களுக்கு வாசிக்க கண்டிப்பாகத் தரவேண்டும் என்பதே என் எண்ணம். ஏனெனில் இந்நூல்கள் மிக எளிதாக வாசிப்பதற்கு ஏற்றவை. எத்தகைய கூடுதல் வாசிப்பும் கோராதவை. இவற்றை வாசிப்பதற்குத் தேவையான தகவல்கள் இந்த புத்தகத்திலேயே இருக்கும். மேலும் நிகழ்காலத் தகவலகளோடு நீதி போதனைகளைக் கூறும் நூல்கள் குழந்தைகளின் எண்ணங்களில் ஒரு நல்ல மாற்றத்தினை நீண்ட கால அளவில் ஏற்படுத்தும். அவர்களின் வாசிப்புத் திறன் மேம்படும்.
வாசிக்க வேண்டிய நூல். பெரியவர்களுக்கும்.